Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நெட் நியூட்ராலிட்டிக்கு ஓகே சொன்ன ட்ராய்

சில மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் நிறுவனம் ப்ரீ பேஸிக்கிஸ் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தும் முனைப்பில் வாக்கெடுப்பு நடத்தியது. இந்த ப்ரீ பேஸிக்ஸ் திட்டத்தின் மூலம் ஃபேஸ்புக்கில் நாம் உபயோகப்படுத்தும் சில அடிப்படை பயன்பாடுகளை எந்த வித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாகவே பயன்படுத்தலாம். ஆனால் இந்த திட்டத்தின் மூலம்  சில  அடிப்படை பயன்பாடுகளை இலவசமாக பயன்படுத்திவிட்டு மற்ற பயன்பாடுகள் அனைத்திற்கும் அதிக கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படும்.

உதாரணத்திற்கு நாம் நமது ஃபேஸ்புக் பக்கத்தை திறந்து யாருக்கேனும் லைக் இட வேண்டுமெனில் அதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. ஆனால் முகப்புப் படம் மாற்றாவோ.  பிற நபர்களின் புரஃபைலை பார்க்கவோ வேண்டுமெனில் அதற்கு தனியாக, அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். யாருக்கேனும் ஃபேஸ்புக்கில் மெசேஜ் அனுப்பு வேண்டுமெனில்,  அதற்கு என்று தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் எப்படி இருக்கும்?  அப்படியொரு திட்டத்தைதான் ப்ரீ பேஸிக்ஸ் என்ற பெயரில் பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்த கருத்திற்கு கூகுள், வாட்ஸ் அப் போன்ற நிறுவனங்கள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்திருந்தன.

இந்தத் திட்டத்தின் மூலம்,  மொத்த இணைய சமநிலையே பாதிக்கப்படும் என்று வலுவான எதிர்ப்பு எழுந்தது. சமூக வலைதளங்களில் இது குறித்து தீவிரமாக விவாதங்களும் நடத்தப்பட்டன. இந்த திட்டத்திற்கு பல்வேறு இணைய பயன்பாட்டாளர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்ததை அடுத்து,  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் "நெட் நியூட்ராலிட்டி" என்ற இணைய சமத்துவத்திற்கான பதினோரு பக்க அறிக்கை ஒன்றை   வெளியிட்டது இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்.

இந்த நெட் நியூட்ராலிட்டி திட்டத்தின் படி ஃபேஸ்புக் போன்ற எந்த நிறுவனமும்,  எந்த வித பயன்பாட்டையும் இலவசமாகவோ அல்லது அதிக கட்டணத்திலோ வழங்கக்கூடாது என்று தெரிவித்தது.மேலும் இந்த திட்டமானது மக்களின் கருத்தை அறிந்த பிறகே அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இணையத்தில் அதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி வரை நெட் நியூட்ராலிட்டி குறித்து கருத்து தெரிவிக்க இணைய பயன்பாட்டாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.



தற்போது இந்த வாக்கெடுப்பு மீதான தனது முடிவை அறிவித்துள்ளது டிராய். அதன்படி ஃபேஸ்புக் அறிவித்த ப்ரீ பேஸிக்ஸ் போன்ற இணைய சமன்பாட்டை குலைக்கும் எந்தத் திட்டத்திற்கும் அனுமதி கிடையாது என்றும்,  தற்போது நிலவி வரும் நெட் நியூட்ராலிட்டி எப்போதும் போல தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. நெட் நியூட்ராலிட்டிக்கு ஆதரவாக  அதிகம்பேர் வாக்களித்ததை அடுத்து டிராய் இந்த முடிவை அறிவித்திருக்கிறது.


மேலும் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை  இணைய சமத்துவம் பாதுகாக்கப்படுகிறதா?  என சோதனை நடத்தப்படும் என்றும், இந்த சட்டத்தை பின்பற்றாத நிறவனங்களின் மீது 50,000 முதல் 50, 00000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா, சிலி, நெதர்லாண்ட், பிரேசில் நாடுகளுக்கு அடுத்தும்  இணைய சமத்துவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. இதுகுறித்து அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும்  டிராய் தெரிவித்துள்ளது

இதுவரை இணையத்தில் எந்தவொரு பயன்பாட்டையும் இலவசமாகவோ அல்லது அதிக கட்டணத்திலோ நாம் பயன்படுத்தியது இல்லை. டிராயின் இந்த அறிக்கை இணைய சமத்துவ பாதுகாப்பிற்கான முதல் படி....!

குறைந்தபட்சம்  இணையமேனும் சமத்துவமாக இருக்கட்டும் இந்த உலகத்தில்!


-லோ.சியாம் சுந்தர்
(மாணவப் பத்திரிக்கையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ