Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவில் நெட் நியுட்ராலிட்டி - வெறுப்பில் ஸ்டேட்டஸ் போட்ட மார்க் சக்கர்பெர்க்

இந்தியாவில் நெட் நியுட்ராலிட்டியை பாதிக்கும் எந்த ஒரு சேவையையும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என தொலை தொடர்பு நெறிமுறையாளரான ட்ராய் தெரிவித்துள்ளது. மேலும் இணைய சேவையில் பாகுபாடு இருக்காது. இலவசமாக தொலை தொடர்பு நிறுவனங்கள் சேவையை வழங்குவதற்கு அனுமதியில்லை என்ற அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.ட்ராய் சொல்லும் விதிமுறைகள்!

1. வழங்கும் தகவலுக்கு ஏற்ப கட்டணத்தை மாற்றி அமைப்பதோ அல்லது வழங்கும் சேவைகளில் பாகுபாட்டையோ நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தக்கூடாது.

2. சேவைகளில் ஒரு சில சேவைகளுக்கு ஒரு கட்டணம் மற்ற சேவைகளுக்கு வேறு கட்டணம் என்ற நிலைப்பாட்டை கொண்டு செயல்படக்கூடாது. மேலும் தனி நபர் அல்லது நிறுவனத்துடன் இணைய சேவையை வழங்க அதன் விதிமுறைகளை மாற்றி அமைக்க ஒப்பந்தங்களை செய்யக் கூடாது.

3. நெருக்கடி காலங்களில் சேவையின் கட்டணத்தை மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

4.இந்த விதிமுறைகளை ட்ராய் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மதிப்பீடு செய்யும்.


இந்தியாவுக்கு நன்மையா?


ஏற்கெனவே நெட் நியுட்ராலிட்டி வர வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா முழுவதும் வலியுறுத்தி வந்தனர். தற்போது ட்ராய் அறிவிப்பு இதனை சாத்தியப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. உதாரணமாக இந்தியாவில் ஒருவர் மாதம் 10 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இன்னொருவர் 10 MB டேட்டாவை பயன்படுத்தலாம். ஆனால் இணைய வேகம், கட்டணத்தில் எந்த வித மாற்றமும் இருக்காது. பயன்படுத்தும் டேட்டா அளவுக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படுமே தவிர அடிப்படை கட்டணத்தில் மாற்றம் இருக்காது என்பதுதான்.

ஆனால் ஃபேஸ்புக்கின் ப்ரீ பேசிக்ஸ், ஏர்டெல் ஜீரோ ஆகிய திட்டங்கள் இந்த கருத்துக்கு முரண்பாடானவை. இவை ஒரு குறிப்பிட்ட சேவையை மட்டுமே இலவசமாக வழங்க முடியும் என்று கூறி வருகின்றன. இதனால் மற்ற சேவைகள் பாதிக்கப்படவும, மக்கள் கூடுதல் கட்டணம் அளித்து இணையத்தை பயன்படுத்தும் சூழலை உருவாக்கும் என்ற பயம் அனைவருக்கும் உள்ளது.

 வெறுப்பான மார்க் சக்கர்பெர்க் போட்ட ஸ்டேட்டஸ்:

இந்த அறிவிப்பையடுத்து அதிருப்தியடைந்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்,  தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,  " இந்த அறிவிப்பு எங்களுக்கு அதிருப்தியளிக்கிறது, மக்களை இணையத்தின் மூலம் இணைப்பதே எங்கள் நோக்கம். ட்ராயின் முடிவு இதற்கு தடையாக இருக்கும். இந்தியாவின் கிராமங்களை இணைக்கும் எங்கள் செயலுக்கு இது போன்ற விதிமுறைகள் முட்டுக்கட்டையாக இருக்கும். உலகில் 38 நாடுகளில் 19 மில்லியன் மக்களை இணைப்பில் வைக்க உதவியுள்ளோம். இந்தியாவையும் இதில் இணைக்கவே இந்த முயற்சியை நாங்கள் செய்தோம்" என்று புலம்பி தள்ளியிருக்கிறார்.

 

Everyone in the world should have access to the internet. That's why we launched Internet.org with so many different...

Posted by Mark Zuckerberg on 8 February 2016


ஆனால் ஆரம்பத்தில், மார்க் டெல்லி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது,  இன்டர்நெட்.ஆர்க் இணைய சமநிலைக்கு எதிரானது அல்ல என்று கூறியது குறிப்பிடத்தக்கது. அதே போல் இதற்காக வெளியிட-ப்பட்ட விளம்பரங்களிலும்,  10 காரணங்களை கூறி இது இணைய சமநிலையை ஆதரிக்கும் என்று பிரபலப்படுத்தியது. இன்று ட்ராய் அறிவிப்புக்கு ஃ பேஸ்புக் கூறும் காரணமும் இதற்கு முரணாகவுள்ளது.

மார்க் தனது பேச்சுகளில்,  உலகை இணைக்கிறேன் என்று கூறி கொண்டிருப்பதன் பின்னணியில் பெரிய வர்த்தக உத்தியும் ஒளிந்துள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.


"இந்தியாவில் ப்ரீ பேசிக்ஸை யாரும் தடை செய்யவில்லை.  அனைத்து சேவைகளையும் ஒரே மாதிரி வழங்கினால் பிரச்னை இல்லை.  அடிப்படை வசதிகளை இலவசமாகவும், மற்றவற்றை கட்டணமாகவும் வழங்குவதே சிக்கல்" என்கின்றனர் தொழில்நுட்ப வல்லுனர்கள். எது எப்படியோ,  நீங்கள் செலுத்தும் கட்டணத்துக்கு உங்களுக்கு இணைய சேவை கிடைத்தால் நீங்கள் இணைய தன்னிறைவு பெற்ற நாட்டில் வாழ்கிறோம் என்று கூறி கொள்ளலாம்.

கேள்வி கேட்பாரின்றி ப்ரொஃபைல் பிக்சரை மாற்றுவது, ஏற்கெனவே எழுதப்பட்ட மெயிலில் பட்டனை க்ளிக் செய்வது என்று இருக்கும் உலகில்,  கட்டணம் செலுத்திதான் ஸ்டேட்டஸ் போட வேண்டும் என்றால் அதற்கு லைக் போட முடியுமா? மதச்சார்பற்ற, சம உரிமை கொண்ட நாட்டில் இணைய சமநிலை கட்டாயம் அவசியம் என்பதை ட்ராய் உணர்ந்து,  இதனை நடைமுறைப்படுத்தியுள்ளது.

 

இனியும் ஒருமுறை இந்த நிறுவனங்கள் நெட் நியுட்ராலிட்டிக்கு எதிராக ஏதாவது திட்டத்தை அறிமுகம் செய்தால் கண்ணை மூடிக்கொண்டு க்ளிக் செய்யாமல் தெளிவாக மறுப்போம்.

ச.ஸ்ரீராம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close