Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பூகம்பம் வந்தால் அலாரம் அடிக்கும் ஸ்மார்ட்போன் ஆப்!

`பூகம்பம் வந்தால், நிலம் அதிர்ந்தவுடன் உயிருக்கு பயந்து கடைசி நிமிடத்தில் ஓட வேண்டும் என்ற அவசியம் இனி இல்லை. பூகம்பம் வருவதற்கு ஒரு நிமிடம் முன்னமே நமக்குத் தகவல் கொடுத்துவிடும் ‘மை ஷேக்’ என்ற ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

அமெரிக்காவின் பெர்கேலி நிலநடுக்க ஆய்வகத்தின் ஆய்வாளர்களும் டியூட்ஸ் டெலிகாம் நிறுவனமும் இனைந்து இந்த ஆப்பை வடிவமைத்துள்ளனர். சிறிய அளவு பேட்டரியை மட்டுமே பயன்படுத்தி, நமது செல்போனில் பின்னணியில் இயங்கும் இந்த ஆப், எந்நேரமும் அதிர்வுகளை அலசிக்கொண்டே இருக்கும். அப்படி அதிர்வுகள் ஏதேனும் சிறிய அளவில் ஏற்பட்டாலும் செல்போனில் இருக்கும் மோஷன் சென்சார் அதைப் பதிவு செய்து, அதிர்வின் அளவு, நேரம், செல்போன் இருக்கும் இடம் ஆகிய தகவல்களை பெர்கேலி ஆய்வகத்திற்கு அனுப்பிவிடும். அங்கு அந்த அதிர்வு ஆராயப்பட்டு, அது நிலநடுக்கத்தின் முன்னறிவிப்பாக இருக்கும் பட்சத்தில், நமது செல்போனுக்கு ஐந்து நிமிடங்களுக்கு தகவல்களை அனுப்பிக்கொண்டே இருக்கும். பூகம்பம் ஏற்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பும், அதன் பின்னர் நான்கு நிமிடங்களும் அத்தகவல் நமது செல்போனிற்கு அனுப்பப்படும். அதன் மூலம் நாம் முன்னரே உஷாராக வெளியேறி விடலாம். இதனால் உயிரிழப்புகள் பெரிய அளவில் தவிர்க்கப்படும்.

இந்த ஆப், தற்போது துவக்க கட்டத்தில் தான் உள்ளது. போகப்போக அதில் பல முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். “பூகம்பத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் நேபாளம், பெரு போன்ற நாடுகளில் பூகம்பம் பற்றிய முன்னறிவிக்கை மையங்கள் குறைவாகவே உள்ளன. ஆனால், ஸ்மார்ட்போன்கள் அதிக அளவில் உள்ளன. எனவே, நில அதிர்வைப் பற்றிய ஒரு பிணையத்தை உருவாக்குவதே இந்த ஆப்பின் இலக்கு” என்று டியூட்ஸ் டெலிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆப்பானது போன் சார்ஜில் இருக்கும் போதும், வை-ஃபை-யோடு இணைக்கப்பட்டிருக்கும் போதுமே வேலை செய்யுமாம். இதனால் இந்த ஆப்பை இன்னும் மேம்படுத்தும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வரும் 22-ம் தேதி பார்சிலோனாவில் நடக்கும் உலக செல்போன் மாநாட்டில் இந்த மை ஷேக் ஆப் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஐ போன்களுக்கும் இந்த ஆப் கிடைக்கிறது. மனிதனின் நேரத்தை எத்தனையோ அப்ளிகேஷன்கள் விழுங்கி வரும் நிலையில், இந்த ஆப் நிச்சயம் ஒரு உயிர் காக்கும் பொக்கிஷமாக விளங்கும்!

மு.பிரதீப் கிருஷ்ணா
(மாணவப் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ