Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மின்தேக்கி' வேணும்னா 'என்வினவி' ல கேளு! - தமிழ் தெரிஞ்சுக்க இதப்படிங்க!

’கார்த்தி, திறன் பேசியை மறந்து வெச்சுட்டுப் போற பாரு’ என்றான் அசோக்.

அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்த கார்த்தி, ‘இல்ல அசோக், மின்னேற்றில மாட்டிருக்கேன். வந்து எடுத்துக்கறேன்” என்றான்.

“ப்ச்.. என்னோட மின்தேக்கிய எடுத்துட்டுப் போடா. இல்லைன்னா என்னோட வரை பட்டிகையை எடுத்துக்க. அங்க போய், தற்படம் எடுத்து என் வினவில அனுப்பு. இல்லன்னா, நினைவுச்சில்லுல சேமிச்சு வந்து என்னோட நினைவிக்கோலுக்கு மாத்திக்குடு. ஏற்கனவே நீ குடுத்ததெல்லாம் என்னோட வன்நினைவில இருக்கு”

”சரி.. கிளம்பறேன்”

“வழி தெரியலைன்னா புவி நில்லிட அறிமுறையப் பார்த்துக்கோ. இல்லன்னா என்வினவில வழி சொல்றேன்"

--------------------------------------------
ன்ன மக்களே.... மண்டை காயுதா? திறன்பொருட்கள் நிறைய இருந்தாலும்... ஓகே...அதாவது கேட்ஜெட்ஸ் நிறைய இருந்தாலும், அதற்கான தமிழ் வார்த்தைகள் என்னென்னன்னு தெரிஞ்சுக்கற ஆவலும், பயன்படுத்தலாமேங்கற ஆவலும் பலருக்கும் இருக்கு.

அதற்காக கவிஞர் மகுடேசுவரனைத் தொடர்பு கொண்டோம். அவர் கொடுத்த தமிழ் வார்த்தைகள் கீழே...


1. Smart Phone – திறன்பேசி
தொலைபேசி, அலைபேசி, கைப்பேசிகளைப் போல் தானாக, இன்னும் திறனுடன் இயங்கத்தக்கவை என்பதால் திறன்பேசி.

2. Smart Watch – திறன்கடிகாரம்
வெறுமனே கடிகை (நேரம்) பார்ப்பதற்காக மணிக்கட்டில் ஆரமாக அணியப்பட்டது தொழில்நுட்பத்தால் மேம்பட்டு திறம்பட்ட செய்கைகளைச் செய்யவல்லது என்பதால் திறன்கடிகாரம்.

3. Whatsapp – என்வினவி
Whatsup என்ற ஒலிப்பில் அமைந்த தொடர்புச் செயலி. ‘என்ன… நலமா ?’ என்று வினவுவதே தொடர்புகொள்ளலில் முதல் கண்ணி. வாட் என்பதைக் குறிக்க என். இந்த என், என்ன என்பதன் வேர். வினவுதல் என்பதற்கு ஆராய்தல், கேட்டல், விசாரித்தல் என்று பல பொருள்கள். அதனால் ‘என்வினவி’ என்னென்று வினவுகின்ற செயலி. சிலர் கட்செவி அஞ்சல் என்கிறார்கள். காணவும் கேட்கவும்படி அஞ்சல் செய்யப்படும் எல்லாமே கட்செவி அஞ்சல்கள்தாம். அதனால் வாட்சப் – என்வினவி.

4. Selfie Stick – தற்படக்கோல்.
செல்ஃபி என்பது தற்படம். தற்படம் எடுக்கப் பயன்படுகின்ற கோல் என்பதால் தற்படக்கோல்.

5. Tablet – வரைபட்டிகை
இச்சொற்றொடரைத் திமுக தலைவர் கருணாநிதி தம் முகநூல் பதிவில் எடுத்தாண்டிருந்தார். வரைதல் என்றால் கைப்பட எழுதுதல், சித்திரம் தீட்டுதல், கைதொட்டுத் தீற்றுதல் ஆகிய பல பொருள்களில் வழங்கும். பட்டிகை என்றால் ஏடு, அரசபத்திரம் போன்றவற்றை முற்காலத்தில் குறிப்பர். கைதொடலும் ஏட்டுவடிவும் கலந்த அந்தக் கருவிக்கு வரைப்பட்டிகை பொருத்தமான பெயர்தான்.

6. Blue Tooth – நீலப்பல்

7. Headset / Head Phone – காதணிபாடி
காதுக்கு அணிந்து தனிப்படக் கேட்பதற்குப் பயன்படுவது. பாடுவது என்பது அதன் ஒலிப்புத் தன்மையைச் சிறப்பித்துக் கூறுவதற்காகத்தான். காதில் அணிந்து பாடிக்கொண்டிருப்பதுதான் அதனால் பெரும்பான்மையோர் பெறும்பயன்.

8. Play Station – விளையாட்டகம்
உலகமெங்கும் விளையாட்டுக்குப் புகழ்பெற்ற அக்கருவியை அதே பெயரில் மொழிபெயர்த்து வழங்கலாம்.

9. Charger – மின்னேற்றி

10. Memory Card – நினைவிச்சில்லு

11. Pen Drive – நினைவிக்கோல்
எங்கெங்கும் எடுத்துச் செல்வதற்கு அதன் நினைவிக்குள் பதிவு செய்கிறோம். கோல் என்பது எழுதுகோல் போல் கையால் பயன்படுத்தப்படும் தன்மையால் வந்தது.

12. Projector – ஒளிபெருக்கி

13. Remote – தொலைச்சொடுக்கி

14. GPS (Global Positioning System) – புவிநில்லிட அறிமுறை

புவியின்மீது நாம் இருக்கும்/நிற்கும் இடத்தை அறிவதற்குப் பயன்படுகின்ற அறிவியல் முறை.

15. App - செயலி
குறிப்பிட்ட செயல் ஒன்றுக்காக உருவாக்கப்பட்ட செயல்பாட்டு நிரலி என்பதால்.

16. Power Bank – மின்தேக்கி

17. Hard Disc – வன்நினைவி
நினைவகத்தில் பதித்து வைக்கும் எல்லாவற்றை நினைவிற்கொண்டிருப்பதால்.

18. Gadget – திறன்பொருள்
பல்வகையான திறப்பாடுகளையுடைய, பொருள்கள் யாவும் இப்பெயரில் அழைக்கப்படலாம். இப்பொருள்கள் யாவும் நுணுக்கமான திறனுடையவை.

19. SimCard – அழைதகடு
கைப்பேசிக்குள் இட்டு அழைப்பதற்குப் பயன்படுத்தப்படும் அதனை அழைதகடு என்னும் வினைத்தொகையால் அழைக்கலாம்.

நன்றி கவிஞரே!

                                                                                                             - அச்சணந்தி / ‘பரிசல்’ கிருஷ்ணாஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close