Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அறிவியல் நாயகன் சுஜாதா!

கிறிஸ்டோபர் நோலனின் சயின்ஸ் ஃபிக்‌ஷனான இன்டெர்ஸ்டெல்லரை  திரையில் பார்த்துக்கொண்டிருந்தேன். அறிவியல் ஆச்சர்யங்கள், பாசப்போராட்டங்கள் என இன்டெர்ஸ்டெல்லர் என்னமோ எனக்கு எழுத்தாளர் சுஜாதாவைதான் ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தது.

‘விண்வெளிக்கு சென்று திரும்பினான்
வயதாகிவிட்டது  காதலிக்கு’

- என்று எப்போதோ படித்த சுஜாதாவின் ஹைக்கூ,  படம் முழுக்கவே ஞாபகத்தில் இருந்தது. சமீபத்தில் தமிழில் வந்த இன்று நேற்று நாளை யில் விஞ்ஞானி ஒருவர் (படத்தில் அவர் காமெடியன்!) தானியங்கி காரை கண்டுபிடித்து,  சாலையில் 'காப்பி… காப்பி' என ரிமோட் சகிதம் வெள்ளோட்டம் பார்ப்பார். அது அச்சு அசல் சுஜாதாவின் வாட்டர் கார் விவகாரம் கதை நாயகன்  பிரின்சிபல், டாக்டர் ராகவானந்தாதான். உலக சினிமா அரங்கில் இந்தியாவுக்கு சயின்ஸ் –பிக்‌ஷன் இன்ட்ரோ கொடுத்த எந்திரன்,  சுஜாதாவின் செல்லக்குழந்தை!

இவையெல்லாம் வெறும் கற்பனையில் உதித்து, ஜால திரைக்கதையில் கை கால்கள் பொருத்தப்பட்ட மேஜிக்கல் சயின்ஸ் – பிக்‌ஷன் கிடையாது. எல்லாமும் உலக அறிவியல் ஆய்வாளர்கள் வருடக்கணக்கில் டெஸ்ட் ட்யூபும், வொயர் பண்டல்களுமாக தவம் கிடந்து கண்டுபிடித்த அறிவியல் ஆச்சர்யங்கள். ஆனால் அவை அத்தனையையும் தன் தலைமை செயலக மூளையால் பேனா முனைக்கு மாற்றி எழுத்துக்களாக்கியவர் எழுத்தாளர் சுஜாதா. 1980 களில் அவர் தமிழ் பத்திரிக்கை உலகில் நிகழ்த்தியது எல்லாம் பேனா கொண்டு நடத்திய சிலிக்கான் புரட்சி!

1980 களில் சுஜாதா கதையை படித்தவர்களுக்கு டச் ஸ்க்ரீன் ஃபோன்களும், எல்லா வேலையையுமே ஒரே மெஷின் செய்யும் என்ற சொல்லாடல்களும் கற்பனை உருவங்களாக நிச்சயம் பரிச்சயமாகியிருக்கும். கட்டுரைகள், கதைகளில் அறிவியல் சாதனங்களை சின்ன டாப்பிக்காக அல்லது வசனமாக பயன்படுத்திய சுஜாதா மொத்த அறிவியலையே  கதையாக்கியது, என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ வில். என் இனிய இயந்திரா கி.பி. 2020ல் நடக்கும்படி எழுதப்பட்ட பியூச்சரிஸ்ட் நாவல். மீண்டும் ஜீனோ அதன் சீக்வெல். இது எழுதப்பட்டது 1987ல்.

மெமரி சிப்கள், ஜீன் ஸ்டெம் செல்கள், ஹோலோகிராம், Heuristics என்ற விஞ்ஞான தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் ஹீரோ ஜீனோ. வெகுளியான நிலா, சர்வாதிகார ஜீவா, மனோ என சில கேரக்டர்களை கொண்டு மொத்த கதையுமே ஒரு சிந்தெடிக் கிராமத்தில் நடப்பதாக எழுதியிருப்பார். ஹீரோ ஜீனோ,  நாவல் முழுக்க ஐசக் அஸிமோவின் ரோபோ விதிகளைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கும்.

தானியங்கி கதவுகள், ஆக்சஸ் கார்டுகள், சி.சி.டி.வி கேமராக்களின் அடுத்த தலைமுறையான வி.வியும், லேசர் துப்பாக்கிகளும், காந்த கார்களும் கதை முழுக்கவே அதன் சயின்டிஃபிக் ஃபார்முலாக்களோடு சிந்தடிக் நகரத்தை வலம் வந்துக்கொண்டிருக்கும். நாம் இன்று பயன்படுத்தும் அத்தனை முன்னேறிய தொழில்நுட்பங்களும் ஏதோ ஒரு வகையில்  இக்கதையில் இடம்பெற்றிருக்கும். 

சிலிக்கான் சில்லுப் புரட்சியாய் கணினி அறிவியலை தமிழ் இலக்கியத்தில், ஜனரஞ்சக எழுத்தில் சுமார் 170க்கும் மேற்பட்ட படைப்புகளின் வழியே  பதிவு செய்திருக்கிறார் சுஜாதா.

வரும் 16 ம் தேதி,  நாம் வாக்களிக்க பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கும் குழுவிற்கு தலைமை தாங்கியவர் எழுத்தாளர் சுஜாதா!

என் இனிய எந்திரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
 


-ஆ.அலெக்ஸ் பாண்டியன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close