Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேம்களின் காதலன் ஜான் ஹாங்க்! - போக்கிமான் கோ உருவான கதை

 

றிமுகமான ஒரே வாரத்தில் கோடிக்கணக்கான டவுன்லோட்கள். ட்விட்டரை மிஞ்சிய ஆக்டிவ் யூஸர்ஸ், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப்பை மிஞ்சிய ஆவரேஜ் யூஸர் டைம் என ராட்சஷனாய் வளர்ந்து நிற்கிறது Pokemon Go விளையாட்டு. ஆக்மென்டெட் ரியாலிட்டி கேமான இதை,  கட்டை விரல் கரைய கரைய விளையாடித் தீர்க்கிறார்கள் ஸ்மார்ட்போன் பெருமக்கள். இந்தியாவில் இன்னும் ரிலீஸாகவே இல்லை. ஆனாலும் ஆயிரக்கணக்கான மொபைல்களில் இதன் apk ஃபைல் இருப்பதே இந்த மோகத்திற்கான சாட்சி. க்ளாஷ் ஆஃப் க்ளான்ஸ், கேண்டி க்ரஷ் போன்ற விளையாட்டுகளை எல்லாம் லாங் ஜம்ப்பில் தாண்டி சிங்கநடை போடும் இந்த வெற்றி, ஏதோ ஒரே நாளில் கிடைத்ததல்ல. இதற்கு பின்னால் இருப்பது 20 ஆண்டுகால அசாத்திய உழைப்பும் ஒரு பெயரும்... ஜான் ஹாங்க்!

தீராக்காதல்!

 ஜான் ஹாங்கிற்கு சிறு வயது முதலே வீடியோ கேம்களின் மீது தீராக்காதல். படித்துக் கொண்டிருந்தபோதே 1996-ல் தன்னுடைய முதல் கேமான Meridian 59-ஐ உருவாக்கினார். MMO (massively multiplayer online game) வகை கேம் அது. கம்ப்யூட்டருடன் விளையாடுவதை விட உயிரும் உணர்வுமான இன்னொரு மனிதனுடன் விளையாடுவது அதிக த்ரில் தருவதை உணர்ந்தார் ஜான். அடுத்த நான்காண்டுகளில் அவரின் கவனம் வேறுபக்கம் திரும்பியிருந்தது. இந்த முறை அவர் காதல் கொண்டது பூமியின் மீது. பூமியின் மொத்த பரப்பையும் மேப்பிங்கில் கொண்டுவர விரும்பினார். தன்னுடைய கேமை 3DO என்ற நிறுவனத்திற்கு விற்றுவிட்டு, அடுத்த கனவை நோக்கி பயணிக்கத் தொடங்கினார்.உலகை மாற்றியமைத்த முயற்சி!

2000-ம் ஆண்டு 'Keyhole' என்ற நிறுவனத்தை தொடங்கினார் ஜான். விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பூமியின் வரைபடங்களோடு பொருத்தி ஒரு 3D உலக வரைபடத்தை உருவாக்கும் 'பாகுபலி' முயற்சி இது. அதில் ஓரளவிற்கு வெற்றியும் அடைந்தார். இவரின் இந்த வித்தியாச முயற்சிகள், இணைய உலகின் ஜம்போ யானையான கூகுளின் கவனத்திற்கு சென்றன. தன் பிரம்மாண்ட முயற்சிக்கு பெரிய அளவிற்கு முதலீடு தேவை என்பதை ஏற்கெனவே உணர்ந்திருந்த ஜான்,  தனது நிறுவனத்தை கூகுளோடு இணைத்தார். ஜானின் திறமை + கூகுளின் நிதி மற்றும் தொழில்நுட்பம் = கூகுள் எர்த். இந்த நூற்றாண்டின் இணையற்ற தொழில்நுட்ப பாய்ச்சல் இப்படித்தான் உருவானது. அந்த தரவுகளையும், தொழில் நுட்பத்தையும் வைத்து 2004-2010 காலகட்டத்தில் கூகுள் மேப்ஸ், கூகுள் ஸ்ட்ரீட் வியூ ஆகிய செயலிகளை உருவாக்கினார் ஜான். 

மீண்டும் ஒரு காதல் கதை!

இந்த காலகட்டத்தில் கேம்கள் மீதான காதல் மீண்டும் ஜானுக்குள் தலைதூக்கியது. பழைய MMO ஸ்டைலோடு, தற்போதைய ஜி.பி.எஸ் வசதிகளை இணைத்து கேம்களை உருவாக்கினால் என்ன என அவருக்குத் தோன்றியது. உடனே ஒரு குழுவை ஒருங்கிணத்தார். 2010-ல் Niantic என்ற நிறுவனத்தை தொடங்கினார். கூகுளின் நிதியுதவியோடு தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் இது.

அந்த நிறுவனம் முதலில் உருவாக்கிய செயலி Field Trip. பயணத்தின்போது நீங்கள் கடக்கும் முக்கிய இடங்களைப் பற்றிய விவரங்களை தரும் செயலி இது. அடுத்து அவர்கள் உருவாக்கியது Ingress என்னும் கேம். 2012-ல் உருவான Ingress இந்த நிறுவனத்தின் முதல் ஆக்மென்டெட்,  ரியாலிட்டி கேம். இன்றைய போக்கிமானின் முன்னோடி!

முட்டாள்கள் தின ஸ்பெஷல்!

ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினத்தை முன்னிட்டு கூகுள் ஏதாவது ரகளைகள் செய்யும். அந்த வகையில் 2014-ல்,  'போக்கிமான் சேலஞ்ச்' என்ற புதுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. உலகம் முழுவதிலும் பயணப்பட்டு அதிக போக்கிமான்களை கண்டுபிடிப்பவர்களுக்கு 'ஸ்பெஷல் தீபாவளி பரிசு காத்திருக்கிறது' என்ற ரீதியில் ஒரு விளம்பரம் வெளியிட, அது அதிரிபுதிரி ஹிட்.

இதை சட்டென பிடித்துக்கொண்ட ஜான், நிஜமாகவே அப்படி ஒரு கேமை வெளியிட முடிவு செய்தார். ஏறக்குறைய அதே நேரத்தில் கூகுள் 'ஆல்பபெட்' நிறுவனத்தை தொடங்கும் முயற்சியில் இருந்தது. கூகுள் நிதியுதவி செய்யும் எண்ணற்ற ஸ்டார்ட் அப்களில், Niantic நிறுவனத்திற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தரப்படுவதாக குரல்கள் வேறு எழுந்தன. இவை அனைத்தும் சேர்ந்து ஜானை, கூகுளில் இருந்து வெளியேற வைத்தது.


ஜான் இப்போது The Pokemon Company என்ற ஜப்பானிய நிறுவனத்தோடு ஜோடி சேர்ந்தார். போக்கிமான் படைப்புகளின் மொத்த உரிமையும் இந்த நிறுவனத்திடம்தான் இருந்தன. அவற்றின் உதவியோடு முந்தைய கேமான Ingress-ல் இருந்து திரட்டப்பட்ட தரவுகளையும் இணைத்து Pokemon Go-வை உருவாக்கியது Niantic.  

தொடங்கியது ஒரு வரலாறு!

பீட்டா வெர்ஷனைத் தொடர்ந்து கடந்த 6-ம் தேதி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வெளியானது Pokemon Go. முண்டியடித்து வந்த கூட்டத்தால் சர்வர் க்ராஷ் ஆக, பிற நாடுகளில் அறிமுகப்படுத்தும் திட்டத்தை தள்ளி வைப்பதாக அறிவித்தது Niantic. இரண்டு நாட்களுக்கு முன் ஐரோப்பாவில் அறிமுகமாகி சக்கை போடு போடுகிறது. அடுத்த குறி ஆசியாதான்.

 இந்த ஒரு வாரத்தில் The Pokémon Company-ன் தாய் நிறுவனமான Nintendo-வின் பங்குகள் 50 சதவீதம் வரை உயர்ந்திருக்கின்றன. இன்னும் உயரக்கூடும் என கணிக்கிறார்கள் வல்லுநர்கள். ஆப் ஸ்டோரில் அதிவேகத்தில் முதலிடம் பிடித்த கேம், குறைந்த நேரத்தில் அதிக ஸ்மார்ட்போன்களில் தரவிறக்கம் செய்யப்பட்ட கேம் என எக்கச்சக்க ரெக்கார்ட்கள். எல்லாப் புகழும் ஜானுக்கே.

'ஒரே நாளில் கிடைத்த வெற்றியல்ல இது. ஏராளமானவர்களின் இருபதாண்டு கால உழைப்பினால் கிடைத்த வெற்றி. ஒன்றை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்த அளவிற்கான இமாலய வெற்றியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது எங்கள் மீதான பொறுப்பை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த விளையாட்டின் மேல் சொல்லப்படும் சில குறைகளை சீக்கிரமே களைந்து எங்களை மீண்டும் நிரூபிப்போம்!' - இவ்வளவு பரபரப்பிற்கும் ஜான் ஆற்றிய சிம்பிள் எதிர்வினை இது. 

-நித்திஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close