Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கண் கம்ப்யூட்டர் - சந்தையில் புதிதாக களமிறங்கியுள்ள ’கூகுள் பிளஸ்’!

தொழில்நுட்ப சந்தையில் நாளுக்கு நாள் புதுக்கருவிகளின் தாக்கம் பெருகிவருகிறது. அதில் இப்போது தொழில்நுட்ப உலகின் கவனத்தை அதிகம் ஈர்த்திருப்பது ‘கூகுள் கிளாஸ்’ என்று சொல்லக்கூடிய ஒரு வகை கண்ணாடி போன்ற சாதனம். கூகுளின் புதிய படைப்பு, இது மூக்குக் கண்ணாடி போன்ற வடிவத்தில் இருக்கும். புளூடூத் கருவியைவிட உருவத்தில் சற்று பெரியது, இந்த கூகுள் கிளாஸ்.

இந்த கண்ணாடியின் சிறப்பம்சம் என்னவென்றால், இனி ஒவ்வொரு விசயத்துக்கும் கம்ப்யூட்டரையோ அல்லது செல்போனையோ திறந்து கூகுளில் தேட வேண்டியதில்லை. கூகுள் கண்ணாடியில் ஒரு கண்ணசைவே போதும், கேட்ட தகவல் நம்முன் தோன்றும். சுருக்கமாகச் சொன்னால் இன்றைய ஸ்மார்ட் ஃபோன் என்னென்ன வசதிகளைத் தருகிறதோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தருவதே இந்த கூகுள் கிளாஸ். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய கருவியாகும்.

இது, 16 ஜி.பி மெமரியும், கூகிள் கிளவுட் சேமிப்பு வசதியும் கொண்டது. இதில் உள்ள 5 மெகாபிக்ஸல் கேமராவை கொண்டு வீடியோ எடுக்கலாம். வைஃபை, ஜி.பி.எஸ், ஸ்பீக்கர், மைக், புளூடூத் தொடர்பு வசதிகள், 24 மணி நேர பேட்டரி சேமிப்பு திறன் கொண்டது.

எப்படி செயல்படுகிறது...

பொதுவாக, நாம் பார்க்கும் காட்சிகள் கண்களில் கருவிழியின் வழியே ஒளியாக சென்று விழித்திரையில் செய்தியாக மாற்றப்பட்டு மூளையை சென்றடைகிறது. கூகிள் கிளாசில் இருக்கும் புரஜெக்டரானது நேரடியாக விழித்திரைக்குள் மெய்நிகர் ஒளிஊடுருவும் திரை போன்ற ஒன்றில், தகவல்களை காட்டும். இந்த மெய்நிகர் திரையானது நாம் நேரில் காணும் நிஜக்காட்சிகளை பாதிக்காதவாறு அதன் மீது மெல்லிய அடுக்காக தோன்றும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது கணினி திரையையோ, கைபேசி திரையையோ பார்க்க வேண்டியதற்கு பதிலாக நேரடியாக உங்கள் கண்களின் விழித்திரைக்குள்ளேயே தகவல்களை பார்த்துக்கொள்ளலாம்.

இதனால் ஏற்படும் நன்மைகள்...

கூகிள் கிளாசை குரல் கட்டளைகள் மூலம் நேரடியாக கட்டுப்படுத்தலாம். ’கிளாஸ் ஓ.கே’ என்று சொன்னால் போதும் கூகுள்கிளாஸ் உடனடியாக செயல்பட தொடங்கிவிடும். இந்த கண் கணினியை ஸ்மார்ட் கைபேசியுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், தேவையான எந்த தகவலையும் உடனடியாக கண் விழிகளுக்குள்ளேயே பெறலாம். மேலும், இதிலுள்ள காமிராவின் உதவியால் படங்களை எடுக்கவும், அவற்றை உடனுக்குடன் இணையத்திலும், நண்பர்களுக்கும் பகிரவும் முடியும்.

கருவியின் தீமைகள்...

கண் விழித்திரைக்குள்ளேயே ஒளியை பாய்ச்சுவது கண்களுக்கு பிரச்னையை தரும். அதுமட்டுமல்லாமல் கண்களின் உணர்வு திறனையும் பாதிக்கும் என்ற சர்ச்சையும் ஒரு பக்கம் கிளம்பியுள்ளது. இதனால், கூகிள் தனது கண்ணாடி கணினியை குழந்தைகள் மற்றும் கண்களில் பிரச்னை உள்ளவர்கள் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஆய்வு செய்த வல்லுநர்கள் கூட “கூகிள் கண்ணாடி அற்புதங்களை நிகழ்த்தும்,. ஆனால் அது தனிக்கவனம் செலுத்தும் மனிதத் திறனை ஒழிக்கும்” என்று சொல்கிறார்கள். நாம் பெறும் ஒவ்வொரு தகவலும் நமது மூளையில் அறிவாக சேமிக்கப்படுவதில்லை. மாறாக பெறப்படும் தகவல்கள் நடைமுறையில் சோதித்தறிந்து உறுதி செய்யப்பட்ட பின்னரே மூளையில் சேமிக்கப்படுகிறது. இந்த வகை கணினிகளால் அனைத்து சாதாரண தகவல்களுக்கும்கூட கணினிகளையும், இணையத்தையும் பயன்படுத்துவதால் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் குறைந்துவிடக்கூடும் என்று விஞ்ஞானிகளில் சிலரும் எச்சரித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாகனத்திலோ, நடந்தோ சாலையில் செல்லும்போது, இந்தக் கண்ணாடி ஜி.பி.எஸ் மூலம் வழிகாட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. குரல் அடையாளம் காணும் வசதி இருப்பதால், பாதை தெரிய டிரைவிங்கை நிறுத்த வேண்டியதில்லை. தொலைபேசிக் கருவியை கையில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இதன் காரணமாக டிரைவிங்கின்போது கவனம் சிதறவும், விபத்து நிகழவும் வாய்ப்பு உண்டு.

இந்த கூகுள் கிளாஸில் எவ்வளவு நன்மை இருக்கிறதோ அதேபோல் தீமைகளும் பல உள்ளன. அடுத்தவரின் வாழ்வின் சுதந்திரத்தில் தலையிடும் வகையில் அமைந்துள்ளது இது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.95,000.

- துரை.நாகராஜன்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ