Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாட்ஸ்அப்புக்கு சவால் கொடுக்கிறதா கூகுள் அலோ? #GoogleAllo

கூகுள் அலோ.. வாட்ஸ்அப், டெலிகிராம்  போன்ற மெசேஜிங் ஆப்களுக்கு சவால் அளிக்க வந்துள்ள, கூகுளின் புது ஆண்ட்ராய்டு சேவை. கூகுளின் எல்லா சேவைகளையும் இணைத்து, இந்த அலோ மெசெஞ்சரை உருவாக்கியுள்ளது கூகுள். எப்படி இருக்கிறது அலோ?


உலகின் நம்பர் 1 மெசேஜிங் ஆப்பாக இருப்பதால், வாட்ஸ்அப் Vs அலோ ஒப்பீடுகளைத் தவிர்க்க முடியவில்லை. வாட்ஸ் அப் போலவே போன் நம்பர் கொடுத்துதான் 'அலோ' வைப் பயன்படுத்த முடியும். அத்துடன் நமது கூகுள் அக்கவுன்டைக் கொடுத்து, நமது பெயரைக் கொடுத்து  அலோவைப் பயன்படுத்தத் துவங்கலாம். இரு நம்பர்களை ஒரே அக்கவுன்ட்டில் பயன்படுத்த முடியாது. ஒரே அக்கவுன்ட்டை வெவ்வேறு இரண்டு போன்களில் பயன்படுத்தவும் முடியாது.

இதுவும் ஒரே மெசேஜிங் ஆப்தான் என்பதால், மற்றவைகளில் இருப்பது போன்ற வாய்ஸ் மெசேஜ், ஸ்டிக்கர்ஸ், இமேஜ், வீடியோ என எல்லா வசதிகளும் இருக்கின்றன. ஆனால் வாட்ஸ் அப் போன்ற வாய்ஸ் காலிங் வசதி இதில் இல்லை. டாக்குமென்ட்களையும் இதில் அனுப்ப முடியாது. இதில் உங்களுக்கு வரும் மெசேஜ்களுக்கு ஆப்பைத் திறக்காமலேயே பதிலளிக்க உங்களால் முடியும். நீங்கள் பதிலளிக்க விருப்பம் இல்லையென்றாலும் கூட, உங்களின் மெசேஜில் இருக்கும் கருத்தை வைத்து ஆராய்ந்து, உங்களுக்கு ரிப்ளை செய்வதற்கான பரிந்துரைகளையும் அலோ வழங்குகிறது. அதனை நீங்கள் செலெக்ட் செய்தால் போதும். அதுவே ரிப்ளை செய்துவிடும். இதனால் நீங்கள் மெசேஜை படித்து ரிப்ளை செய்ய டைப் செய்யக் கூடத் தேவையில்லை.

அலோவின் ஹைலைட் கூகுள் அசிஸ்டன்ட்தான். ஹைக்கில் இருக்கும் நடாஷா போலவே, AI மூலமாக இயங்கும் இந்த கூகுள் அசிஸ்டன்ட்தான் அலோவை, மற்ற மெசேஜிங் ஆப்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இந்த விர்ச்சுவல் அசிஸ்டன்ட் மூலம், உங்கள் அலோ ஆப்பிற்குள்ளேயே, பிரவுசரை திறக்காமல் விக்கிபீடியா பயன்படுத்த முடியும். உங்களுக்கு அருகில் இருக்கும் ஹோட்டல்களை தேட முடியும். விமான, ரயில் நேரங்களை கண்டறிய முடியும். காலண்டர், மெயில், அலாரம் என பல விஷயங்களை இந்த அசிஸ்டன்ட் மூலமாகவே செயல்படுத்திக் கொள்ள முடியும். எந்த விஷயம் வேண்டுமோ, அதனை @google என டைப் செய்தால், போதும். பதிலுடன் ஆஜராகி விடுகிறது இந்த கூகுள் அசிஸ்டன்ட். அதாவது ஒட்டுமொத்த கூகுளையும், ஒரு சாட் அப்ளிகேஷனுக்குள் பொருத்தி இருக்கிறது கூகுள் நிறுவனம் 

வாட்ஸ்அப்பில் நாம் அனுப்பும் எல்லா மெசேஜ்களின் எழுத்துருவின் அளவும்  ஒரே மாதிரித்தான் இருக்கும். ஆனால் அலோவில் அதனை மாற்ற முடியும். க்ரூப்பில் இருக்கும் நபர்களுக்கு மிக முக்கியமான விஷயத்தை சொல்ல நினைக்கும் போது, உங்களது செய்தியை அடித்து விட்டு, Send பட்டனை, நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம், அதன் அளவை பெரிதாக்க முடியும். இதனால் க்ரூப் சாட்டில் முக்கியமான கருத்துக்கள் தனித்துத் தெரியும். அதே போல இ-மோஜிக்களுக்கும் இந்த வசதி உண்டு. இதனால் குறிப்பிட்ட கருத்துக்கள் அல்லது இ-மோஜியை பெரிதாகவோ, அல்லது மிகவும் சிறிதாகவோ காட்டவும் முடியும். இந்த வசதி ஆப்பிள் ஐ.ஓ.எஸ்.10 அப்டேட்டின் ஐ-மெசெஞ்சரில் இருக்கும் வசதி. இதனை அலோ மூலம் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள்.


வாட்ஸ்அப் போல, இது முழு என்கிரிப்ட் செய்யப்பட்டது கிடையாது. ஆனால், அதே சமயம்  Incognito mode-ல் சாட் செய்வதன் மூலமாக, நமது மெசேஜ்களை என்கிரிப்ட் செய்துகொள்ள முடியும். நாம் சாட் செய்யும் மெசேஜ்களை குறிப்பிட்ட நேரத்திற்கு பின்பு டெலிட் செய்துவிடலாம். 5 விநாடிகள் முதல் ஒருவாரம் வரை இதற்கு டைம் செட் செய்து கொள்ளலாம். அதன்பின்பு நமது உரையாடல்கள் அழிந்துவிடும். டெலிகிராம் ஆப்பில் இருக்கும், Self Destruction Time போலவே இது செயல்படுகிறது.

 

அதே போல, அலோ ஆப் பயன்படுத்துபவர்களிடம் மட்டுமே நாம் சாட் செய்ய முடியும். ஒருவேளை அலோ இன்ஸ்டால் செய்யாத நபருக்கு, நீங்கள் அலோ மூலம் மெசேஜ் அனுப்பினால், அது அவரது போனுக்கு SMS ஆக சென்று, அலோ ஆப்பை இன்ஸ்டால் செய்யசொல்லி கடுப்பேற்றுகிறது. கூகுளின் மேப்ஸ், மெயில், காலண்டர் என எல்லா சேவைகளையும் அலோவிற்கு வெயிட் ஏற்றுவதற்காக பயன்படுத்தியுள்ளது கூகுள். இதனால் வாட்ஸ்அப்பை விட எளிதாக, அழகாக இருக்கிறது அலோ. கூகுளின் எல்லா சேவைகளையும் இது பயன்படுத்திக் கொள்வதால், நமக்கு பயன்படுத்த சௌகரியமாக இருக்கிறது.  ஆனால் தற்போது, வாட்ஸ்அப் தான் தற்போது பலரது ஹோம் ஸ்க்ரீனில் , தனியொரு மெசேஜிங் ஆப்பாக இருக்கிறது. அதனை அலோ ஓரங்கட்டுமா என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

- ஞா.சுதாகர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ