Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்மார்ட்போன் உற்பத்தியை கைவிட்ட பிளாக்பெரி! என்ன காரணம்?

ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் ஒரு காலத்தில் முன்னணியில் இருந்த பிளாக்பெர்ரி நிறுவனம், தற்போது ஸ்மார்ட்போன்கள் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மாறாக இனிமேல் பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பில் மட்டுமே ஈடுபடபோவதாகவும் அறிவித்துள்ளது. கனடாவைச் சேர்ந்த பிளாக்பெரி நிறுவனம் மொபைல் சந்தையில் பல வருடங்களாக முன்னணியில் இருந்த நிறுவனம். பாதுகாப்பிற்கு பெயர் பெற்ற நிறுவனமாக இது விளங்கியது. அமெரிக்க அதிபர் ஒபாமா முதல் பல உலக நாடுகளின் தலைவர்களின் சாய்ஸ் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்கள்தான். அதற்கு காரணம் இன்று வாட்ஸ்அப் போன்ற பல நிறுவனங்கள் பயன்படுத்தும் End to End Encryption முறையை பல வருடங்களுக்கு முன்னரே பிளாக்பெர்ரி நிறுவனம் தன் மொபைலில் செய்திகளை பரிமாற்றம் செய்ய பயன்படுத்தியது. இந்த வசதியே தீவிரவாதிகள் மற்றும் குற்றவாளிகளிகளுக்கு சாதகமாக அமைந்தது. அவர்களின் தகவல் பரிமாற்றங்களை இடைமறித்து அறிந்துகொள்ள முடியாத அளவிற்கு அதன் பிளாக்பெர்ரியின் encryption வலுவாக இருந்தது. இதன் காரணமாக பல நாடுகள் பிளாக்பெர்ரி மொபைல் விற்பனைக்கு தடை விதித்தன.

கடந்த சில வருடங்களாக ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டின் வருகையால் சந்தையில் தனது  இடத்தை பிளாக்பெர்ரி நிறுவனம் இழந்தது. தனது இடத்தை மீண்டும் அடைவதற்கு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் மொபைல்போன்கள் தயாரிப்பில் இறங்கியது. மற்ற ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை விடவும் பாதுகாப்பு அதிகமானதாக இருந்தாலும் பல்வேறு காரணங்களால் மக்களிடையே பிரபலமாகவில்லை. புதிதாக முளைத்த மொபைல் நிறுவனங்கள் சந்தையில் கடும் போட்டியை அளித்தன. கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் DTEK 50 என்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை கடைசியாக வெளியிட்டது. இந்நிலையில் ஸ்மார்ட்போன் விற்பனையில் குறிப்பிட்ட இலக்கை எட்ட முடியாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்படுவதாகவும், இனிமேல் பாதுகாப்புக்கான மென்பொருள் தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாகவும் பிளாக்பெர்ரி நிறுவனத்தின் சி.இ.ஓ  ஜான் சென் அறிவித்துள்ளார். நோக்கியா நிறுவனத்திற்கு அடுத்ததாக மொபைல்போன் தயாரிப்பை நிறுத்தும் மிகப்பெரிய நிறுவனம் பிளாக்பெர்ரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

- மு.ராஜேஷ்
மாணவப் பத்திரிகையாளர்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ