Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐபோனுக்கு சவால் விடும் பிக்ஸல்! கூகுள் WiFi.. புதிய ஓ.எஸ்! தெறிக்கவிடுமா கூகுள்! #GoogleEvent

ஆப்பிள் ஐபோன்கள் வெளியாகும் ஆப்பிள் நிகழ்ச்சிக்கு இணையாக மொத்த டெக் உலகமும் அக்டோபர் 4ம் தேதிக்காக‌  ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது, இதற்கு காரணம் நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த கூகுள் நிறுவனத்தின் Pixel  மொபைல் போன்களை அந்நிறுவனம் வெளியிடலாம் என்ற செய்தியே.சான் பிரான்ஸிஸ்கோவில் நடக்கவிருக்கும் இந்த நிகழ்வில் கூகுள் தன் பிக்சல் மொபைல், அமேசான் நிறுவனத்தின் தயாரிப்பான Echoக்கு போட்டியாக கூகுள் ஹோம் எனும் ஸ்மார்ட் ஸ்பீக்கர், புதிய க்ரோம்கேஸ்ட், புதிய Wi-Fi ரூட்டர்,ஆண்ட்ரோமீடா (Andromeda) என்ற புதிய OS என பல விஷயங்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதில் பிக்சல் மொபைல்களுக்கே எதிர்பார்ப்பு அதிகம்.

இந்த கூகுள் நிகழ்ச்சியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் தயாரிப்புகள்:

பிக்ஸல் ஸ்மார்ட்போன்கள்: 

கூகுள் பிக்சலை பற்றி கடந்த சில மாதங்களாகவே பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த அக்டோபர் 4-ம் தேதிக்குப் பிறகே அவற்றில் எது எது உண்மை என்று தெரியும். பிக்சல் மொபைல் கூகுளின் பழைய Nexus மொபைல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மொபைலில் கூகுள் ஐகானை தவிர வேறு லோகோக்கள் எதுவும் இருக்கப்போவதில்லை(Nexus உட்பட). ஆனால் இந்த மொபைல் போன்களின் பாகங்களை உருவாக்குவது  HTC நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. HTC நிறுவனத்தின் வடிவமைப்பு சிறப்பானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இணையத்தில் வெளியான பிக்சல் மொபைலின் படத்தைப் பார்க்கும்போது ஐபோனின் கட்டுமானத்தைப் போலவே தெரிகின்றது. ஐபோனை போன்று பின்புற ஃபிங்கர் பிரிண்ட்  ஸ்கேனர் எனக் காட்சியளிக்கிறது கூகுள் பிக்சல்.

இந்த பிக்சல் மொபைல் இரண்டு மாடலில் கிடைக்கும். Pixel மாடல் 5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டதாகவும் Pixel XL 5.5 இன்ச் டிஸ்ப்ளேவுடனும் கிடைக்கும். மற்றபடி இரு மாடல்களுக்கிடையே தொழில்நுட்ப அம்சங்களில் பெரிய வித்தியாசங்கள் இருக்காது என்று கூறப்படுகிறது. சக்திவாய்ந்த 4GB RAM உடன் Qualcommன் புதிய Snapdragon 821 ப்ராஸசரில் இந்த மொபைல்கள் இயங்கவுள்ளன.Pixelல் 1080p டிஸ்ப்ளேவும் Pixel XLல் Quad HD டிஸ்ப்ளேவும் வழங்கப்படும்.12MP கேமராக்கள் , பெரிய பேட்டரிகள் என ஒரு முழுமையான ஸ்மார்ட் போன் என்று அழைக்கத் தகுதிவாய்ந்த மொபைலாக Pixel அமையப் போகின்றது.இதில் அதிமுக்கியமான விஷயம் கடந்த ஆகஸ்டு மாதம் அறிமுகமான ஆண்ட்ராய்ட் நௌகட் 7.0ல் இருந்து அப்டேட் செய்யப்பட்ட புதிய ஆப் லாஞ்சர், புதிய ஐகான் கொண்ட நௌகட் 7.1ல் இந்த மொபைல் இயங்கும்.இதனுடைய விலை 38,000த்தில் இருந்து ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Google Home ஸ்மார்ட் ஸ்பீக்கர்:

இது ஒரு ஆடியோ அஸிஸ்டன்ட் போல் செயல்படும் , இதை வீட்டில் பொருத்திவிட்டு உங்களுடைய வீட்டில் உள்ள இதர ஸ்மார்ட் கேட்ஜட்ஸுகளை இதனுடன் இணைத்துக் கொள்ளலாம் இதற்குப்பின் உங்களுடைய  கட்டளைகளை ஏற்று வீட்டில் உள்ள பொருட்களை இதுவே கண்ட்ரோல் செய்யும்.மற்றும் இன்றைக்கு உங்களின் பணிகள் என்னென்ன, எப்பொழுது என்ன அப்பாயின்ட்மென்ட் என்பது முதல் உங்களுக்கு நினைவு படுத்தி ஒரு பொறுப்புள்ள காரியதரசி போல் செயலாற்றும்.அமேசான் நிறுவனத்தின் Echo ஸ்பீக்கர்க்கு கூகுளின் Home கடும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் Wi-Fi ரூட்டர் மற்றும் ஆண்ட்ரோமீடா:

தற்பொழுது கூகுள் OnHub நிறுவனத்துடன் இணைந்து Wi-Fi ரூட்டர்களை தயாரித்து வரும் நிலையில் தன் சொந்தத் தயாரிப்பான Wi-Fi ரூட்டரை வெளியிட இருப்பது தொழில்நுட்ப உலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.இனி OnHub நிறுவனத்துடன் தன் கூட்டு தொடருமா என்பது பற்றி எந்த ஒரு தகவலையும் கூகுள் தெரிவிக்கவில்லை.

அடுத்த வார நிகழ்ச்சியில் கூகுள் புதிய OS ஆண்ட்ரோமீடாவை வெளியிடுமா என்று அதிகாரபூர்வமாக இன்னும்  தெரியவில்லை.இது Chrome OS மற்றும் ஆண்ட்ராய்டின் கலவையாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. 2015 அக்டோபர் மாத வால் ஸ்டிரிட் பத்திரிகையில் கூகுள் Chrome மற்றும் ஆண்ட்ராய்டை கலந்து ஒரு புது OSஐ உருவாக்கும் முயற்சியில் இருப்பதாக ஒரு தகவலை வெளியிட்டது. அந்த முயற்சியில் கூகுள் வெற்றிபெற்று விட்டதா என்று அடுத்த வாரத்தில் தெரிந்துவிடும்.

- க.விக்னேஸ்வரன்

(மாணவப் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ