Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்மார்ட்போன் பேட்டரியையும் ஸ்மார்ட் ஆக்கும் 7 டிப்ஸ்!

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரது முக்கியக் கவலைகளில் ஒன்று அதன் பேட்டரி. வீடியோ, கேம்ஸ் ஆகியவற்றை அதிக நேரம் பயன்படுத்தாவிட்டாலும் கூட, சார்ஜ் விரைவில் இறங்கிவிடும். இதனால் அடிக்கடி சார்ஜ் போட வேண்டிய அவசியமோ, அல்லது பவர் பேங்குகள் எடுத்து செல்ல வேண்டிய அவசியமோ ஏற்படும். ஆனால் இந்த 7 விஷயங்களை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் மொபைல் சார்ஜ் விரைவில் தீர்வதைத் தடுக்கலாம்.

வைப்ரேஷன் வேண்டாமே!

குறுஞ்செய்தி, அழைப்புகள்,அறிவிப்புகள் என அனைத்துக்கும் வைப்ரேட் ஆப்ஷனை தேர்வு செய்யாதீர்கள். இது ஒலியை விடவும் அதிக சக்தியை இழுக்கும். ஒவ்வொருமுறை வைப்ரேட் ஆகும் போதும், வைப்ரேஷன் மோட்டார் இயங்கும் என்பதால் தேவையில்லாத மின்விரயம் ஏற்படும். எனவே தவிர்க்க முடியாத சூழல்களைத் தவிர்த்து, மற்ற நேரங்களில் வைப்ரேஷன் ஆப்ஷனை எடுத்துவிடுங்கள்.

ஜி.பி.எஸ்., வைஃபை, ப்ளூடூத்தில் கவனம்:

எங்கேயாவது வைஃபை பயன்படுத்தி விட்டோ, ப்ளூடூத் பயன்படுத்தி விட்டோ அதனை அணைக்காமல் வைத்திருப்போம். இதனால் தேவையில்லாமல் பேட்டரி சார்ஜ் தீரும். எனவே தேவையற்ற சமயங்களில் ஜி.பி.எஸ், வைஃபை, ப்ளூடூத் ஆகியவற்றை ஆஃப் செய்துவிடுவது நல்லது.

ஆப்ஸ்களை மூடிவிட வேண்டும்:

இணையம் மூலமாக பிரவுசரில் ஏதேனும் தேடிக்கொண்டிருக்கும் போதோ, கேம்ஸ் விளையாடும் போதோ அந்த அப்ளிகேஷனை முழுமையாக க்ளோஸ் செய்யாமல், மொபைல் திரையை அணைக்கக் கூடாது. அப்படி செய்தால், திரைக்கு பின்னால் அந்த அப்ளிகேஷன்கள் இயங்கிக்கொண்டே இருக்கும். இதன்மீதும் கவனம் தேவை.

Air Plane மோட் நல்லது:

நெட்வொர்க் கவரேஜ் இல்லாத இடங்களில் இருக்கும்போது, உங்கள் மொபைல் ஆன்டனாக்கள் அதிக மின்சக்தியை செலவு செய்து, நெட்வொர்க்கை தேடும். இந்நேரங்களில் அதிகமாக சார்ஜ் தீரும். எனவே டவர் கிடைக்காத இடங்களிலோ, அல்லது பயணம் செய்யும்போதோ உங்கள் மொபைலில் Air Plane மோட்-ஐ ஆன் செய்து விடலாம். இதனால் எந்த இணையமும் இல்லாமல், உங்கள் போனில் இசை, கேம்ஸ், வீடியோ ஆகியவற்றை பார்க்க முடியும். பயணத்தின் போது பேட்டரியும் தீராது.

அப்டேட்ஸ் கொஞ்சம் முக்கியமே!

போனில் இருக்கும் ஒவ்வொரு ஆப்களையும் அடிக்கடி அப்டேட் செய்வது கொஞ்சம் சிக்கலான வேலைதான். ஆனால் இதன் மூலம் பேட்டரி திறனை அதிகரிக்க முடியும். காரணம் ஒவ்வொரு ஆப் நிறுவனமும் தனது புதிய அப்டேட்டில் முன்னைவிட குறைவான மெமரி எடுக்கும் படியும், சார்ஜ் குறைவாக  செலவாகும் படியும் வடிவமைப்பார்கள். எனவே அடிக்கடி அப்டேட்ஸ் செய்துகொள்வதும் போனுக்கு நல்லதுதான்.

Auto sync ஆஃப் செய்யலாம்:

ஆட்டோ சிங்க் ஆப்ஷனை அணைத்து விடுவது மொபைல் டேட்டாவிற்கும், நமது பேட்டரிக்கும் நல்லது. இல்லையெனில் மொபைல் டிஸ்ப்ளேவை ஆஃப் செய்து வைத்திருக்கும் போதும், மொபைல் பயன்படுத்தாத போதும் கூட, இவை பின்னணியில் நமது டேட்டாவை தின்று கொண்டே இருக்கும்.

ஸ்க்ரீன் ப்ரைட்னஸ்:

உங்கள் மொபைல் பேட்டரி எவ்வளவு செலவாகியுள்ளது என எடுத்துப் பார்த்தால் அதில் அதிக பங்கு வகிப்பது மொபைல் திரைதான். இதன் வெளிச்ச அளவைக் குறைப்பதுதான் சார்ஜ் குறைவதை தடுக்கும் முக்கிய வழி. உங்கள் போனில் இருக்கும் ஆட்டோ ப்ரைட்னஸ் ஆப்ஷனை தேர்வு செய்வது நலம். இல்லையெனில் எப்போதும், மிதமான வெளிச்ச அளவை மட்டுமே வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் கணிசமான அளவு மின்சக்தி நுகர்வு குறையும்.

 

- ஞா.சுதாகர்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ