Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல்..கேஷ் ஆன் டெலிவரியில் சிக்கல்? #ModiFightsCorruption

"500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இன்று இரவு முதல் செல்லாது" என நேற்று மோடி அறிவித்தது முதலே நாடு முழுக்க பதற்றமும் பரபரப்பும் தொற்றிக்கொண்டது. பலரும் கையில் இருக்கும் பணத்தை செலவிட முடியாமல் தவித்து வரும் நிலையில் பலருக்கு, கைகொடுப்பது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள்தான். மேலும் கார்டு பணப்பரிவர்த்தனைகள் மற்றும் இணைய பணப்பரிவர்த்தனைகளுக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படாத நிலையில், அவற்றை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். 

இதைத்தொடர்ந்து ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷனிலும் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனத்தின் இணையதளத்தில் கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷனை தேர்வு செய்தால், 'We have disabled COD for you to save cash for essential payments' என்ற செய்தி காட்டப்படுகிறது. அதற்குப் பதிலாக மற்ற வகைகளில் பணத்தைச் செலுத்த அறிவுறுத்துகிறது. எனவே அமேசான் தளத்தில் இந்த ஆப்ஷன் தற்போதைக்கு கிடையாது என்பது தெரிகிறது.

மற்றொரு முன்னணி நிறுவனமான ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் பொருட்களை புக் செய்தால், எந்தவொரு அறிவிப்பும் இதுதொடர்பாக இல்லை. குறிப்பாக 1000 ரூபாய்க்கு குறைவான பொருட்களை ஆர்டர் செய்யும்போது, கேஷ் ஆன் டெலிவரி இருக்கிறது. ஆனால் 1000-க்கும் மேலான பொருட்களை ஆர்டர் செய்தால், 'This payment option is not compatible with your order' என்ற செய்தி காட்டப்படுகிறது. எனவே இதிலும் வேறுவழிகளில் மட்டுமே தற்போது பணம் செலுத்த முடியும்.

ஸ்னாப்டீல் இணையதளத்தில் கேஷ் ஆன் டெலிவரி மூலம் ரூ.2000-க்கும் குறைவான பொருட்களை ஆர்டர் செய்ய முடிகிறது. அப்போது, '500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கைவிடப்பட்டதால், பொருட்களை வாங்கும் சமயம் சரியான பணத்தை வைத்திருங்கள்' என செய்தியில் தெரிவிக்கிறது.

அதே சமயம், 2000 ரூபாய்க்கும் மேலான பொருட்களுக்கு கேஷ் ஆன் டெலிவரி வசதி இல்லை.

இன்று 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத நிலையில், மக்கள் தங்கள் கைவசம் வைத்திருக்கும் 100 ரூபாய் நோட்டுகள் மூலமாகத்தான் அன்றாட செலவுகளை சமாளித்து வருகின்றனர். நிலைமை சீராக இன்னும் சில நாட்கள் பிடிக்கும் என்பதால், ஏற்கெனவே பொருட்களை ஆர்டர் செய்தவர்களுக்கு இந்த நிறுவனங்கள் ஏதேனும் மாற்று வழியைக் கையாள வேண்டும். பலரும் ஆன்லைன் ஷாப்பிங்குக்கு கேஷ் ஆன் டெலிவரி வசதியையே பயன்படுத்துகின்றனர். எனவே இந்த நிலையால், இ-காமர்ஸ் நிறுவனங்களின் வர்த்தகத்தில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

- ஞா.சுதாகர்

எடிட்டர் சாய்ஸ்