Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மின்னணு வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியுமா? #HowEVMworks

வாக்கு

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பரபரப்பு தமிழகம் முழுவதுமே பரவியிருக்கிறது.62 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அங்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட இருக்கிறது.

ஒரு மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரத்துடன் நான்கு வாக்கு பதிவு இயந்திரங்களைத்தான் இணைக்க முடியும். ஒரு மிஷினில் 16 வேட்பாளர்களுக்கு இடம் தர முடியும். அந்த கணக்கின்படி 64 பேர் வரை சேர்க்கலாம். நோட்டாவுக்கு ஒரு இடம் தர வேண்டும் என்பதால் 63 வேட்பாளர்கள் வரைதான் இயந்திரப்பதிவில் சாத்தியம். 

எப்படி இயங்குகிறது?

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்யும் பகுதி, அதை கட்டுப்படுத்தும் கண்ட்ரோல் யூனிட் என இரண்டு பாகங்கள் உண்டு. இரண்டையும் 5 மீட்டர் நீளமுள்ள கேபிள் மூலம் இணைத்திருப்பார்கள். இந்த இரண்டும் எப்போதும் ஆன் மோடிலேயே இருக்கும். கன்ட்ரோல் யூனிட்டில், நம் வாக்காளர் அட்டையை சரியென அலுவலர் பதிவு செய்யும் வரை, நம்மால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எதுவும் செய்ய முடியாது.

அலுவலர் பட்டனை தட்டியதும் விளக்கு ஒளிரும். அப்போது நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டுமோ, அந்த சின்னத்துக்கு பக்கத்தில் இருக்கும் பட்டனை அமுக்க வேண்டும். 

வாக்குப்பதிவு நடக்கும் நாள் முடிந்ததும் CLOSE பட்டனை தேர்தல் அதிகாரி அமுக்குவார். க்ளோஸ் பட்டனை முடிக்காமல் RESULT பட்டனை அமுக்க முடியாது. ரிசல்ட் பட்டனை அமுக்குவதுன் மூலம்தான் அந்த மிஷினில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் விழுந்த வாக்குகளின் எண்ணிக்கையை பார்க்க முடியும். 

எலக்ட்ரானிக் வோட்டிங் மிஷினுக்கு மின்சாரம் தேவையில்லை. 6 வோல்ட் பேட்டரிகள் மூலம் இந்த இயந்திரம் இயங்கும். 

கள்ள வாக்குகளை தவிர்க்க பல கட்டுப்பாடுகளை இந்த மிஷினை உருவாக்கும்போதே கொண்டு வந்தார்கள். ஒரு நிமிடத்தில் 5 வாக்குகள் வரை மட்டுமே பதிவு செய்ய முடியும். எனவே, கடைசி நேரத்தில் பூத்தை கைப்பற்றி கள்ள வாக்குகள் போடும் பழைய டெக்னிக் இங்கே வேலைக்காகாது.

ஒரு இயந்திரத்தில் 3840 வாக்குகள் வரை பதிவு செய்யலாம். ஒரு முறை பதிவு செய்தால் அதை அழிக்க முடியாது. இயந்திரத்தில் இருக்கும் அனைத்து வாக்குகளையும் அழிப்பதுதான் ஒரே வழி.

EVM

தேர்தலுக்கு முன்னால் இயந்திரத்தை துடைத்து, சேமிப்பில் இருக்கும் தகவல்களை அழித்து சோதனை செய்கிறார்கள். ஒரு சோதனை வாக்குப்பதிவு நடத்தி முடிவுகளை கிராஸ் செக் செய்கிறார்கள். இந்த புராசஸ் முழுவதையும் கேமராவில் பதிவும் செய்கிறார்கள். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இதை நேரில் உறுதி செய்து கொள்ளலாம்.

இப்படி செய்யப்படும் சோதனை முடிந்ததும் ஒரு பிங்க் நிற ஸ்டிக்கரில், தனி எண்ணை குறிப்பிட்டு ஒட்டி விடுவர்கள். இது அரசின் அதிகாரப்பூர்வ அச்சகத்தில் அச்சிடப்படுகிறது. இந்த பிங்க் ஸ்டிக்கரை பிரிக்காமல், மிஷினின் எந்த பாகத்தையும் பிரிக்க முடியாது. 

எடை குறைந்த, அளவில் சிறிய மிஷின் என்பதால் எடுத்துச் செல்வதும் எளிது. ஒரு மிஷினின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள். 

ஒரு மிஷினில் 3840 வாக்குகள் பதிவு செய்ய முடியும். எனவே ஒரு பூத்தில் எத்தனை இயந்திரங்கள் மாற்றப்படுகின்றன என்பதை வைத்து எவ்வளவு வாக்குகள் பதிவாகிறது என்பதை ஒரு வேட்பாளர் அறிந்துகொள்ள முடியும். அது குறிப்பிட்ட ஏரியா மக்கள் மீது அவருக்கு வெறுப்போ /அக்கறையோ வர வாய்ப்பாகும் என்ற கருத்தும் நிலவுகிறது.

எகல்ட்ரானிக் மிஷின் தான் என்றாலும், இதில் பதிவாகும் வாக்குகளை டிஜிட்டலாக டிரான்ஸ்பர் செய்ய முடியாது. ஆனால், அதே காரணத்தால் தான் இதை யாரும் ஹேக் செய்யவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

கையில் பணமே தேவையில்லை; ஒரு ஆப் போதும் என்ற நிலைக்கு இந்தியா மாறிக்கொண்டு வருகிறது. அதே போல, வாக்களிக்கவும் ஒரு ஆப் வந்துவிட்டால் போதும்.

-கார்க்கிபவா

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close