Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"இப்போதே சிறைக்கு அனுப்புவேன்" - ஜெயலலிதா மகன் என்றவரிடம் நீதிபதி கண்டிப்பு!

ஜெயலலிதா


முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்ததும், அவரது வாரிசு நான்தான் என்று சிலர் பரபரப்புக்காக கிளம்பி வருகின்றனர். அப்படி வந்தவர்தான் கிருஷ்ணமூர்த்தி என்பவர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அவர் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவர் அளித்துள்ள ஆவணங்கள் நம்பும்படியாக இல்லை, சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஆவணங்களைக் காண்பித்து உண்மைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில், ஜெ.கிருஷ்ணமூர்த்தி என்பவர் "தான்தான் ஜெயலலிதாவின் உண்மையான மகன். நடிகர் சோபன்பாபுவுக்கும், ஜெயலலிதாவுக்கும் பிறந்தவன். நான் பிறந்த சில நாட்களிலேயே என்னை தத்துக் கொடுத்துவிட்டனர். இதற்கு சாட்சிக் கையெழுத்திட்டது எம்.ஜி.ஆர். என்னை ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்க வேண்டும், ஜெயலலிதாவின் சொத்துக்களை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். எனக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக சில ஆவணங்களின் நகலையும் தாக்கல் செய்திருந்தார்.

ஒரு வாரத்துக்கு மேலாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. ஆவணங்களைப் பார்த்த நீதிபதி, "எல்.கே.ஜி படிக்கும் குழந்தையிடம் இந்த ஆவணங்களைக் காண்பித்தால்கூட இது ஜோடிக்கப்பட்டது என்று சொல்லிவிடும். பொதுவெளியில் கிடைக்கும் புகைப்படங்களைக் கொண்டு இந்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. யார்வேண்டுமானாலும் நீதிமன்றத்துக்கு வந்து, எதற்கு வேண்டுமானாலும் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்ய முடியும் என்று கருதுகின்றீர்களா? இந்த வழக்கைத் தாக்கல் செய்திருப்பவர் ஆவணங்களை போலியாக உருவாக்கியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உண்மையான ஆவணங்கள் எங்கே?" என்று கேள்வி எழுப்பினார். 

மேலும், "வழக்கை தாக்கல் செய்த ஜெ.கிருஷ்ணமூர்த்தியை இப்போதே சிறைக்கு அனுப்ப முடியும். இருந்தாலும், இவர் சனிக்கிழமை சென்னை மாநகர போலீஸ் ஆணையர் முன்பு ஆஜராகி, உண்மை ஆவணங்களைக் காட்டி உறுதிசெய்ய வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அரசு வழக்கறிஞரிடம், "இந்த நபர் போலீஸ் கமிஷனர் முன்பு ஆஜராகி, அசல் ஆவணங்களைக் காண்பிக்க வேண்டும். கமிஷனர், இந்த ஆவணங்களின் உண்மைத்தன்மைக்குச் சான்றளிக்க வேண்டும்" என்றும் தெரிவித்தார். இந்த வழக்குக்காகக் கிருஷ்ணமூர்த்தியுடன் வந்திருந்த டிராஃபிக் ராமசாமியிடம், "உங்களுக்கும் இந்த வழக்குக்கும் என்ன தொடர்பு?" என்றும் கேள்வி எழுப்பினார். வழக்கைத் தாக்கல் செய்துள்ள கிருஷ்ணமூர்த்தி, தான் 1985-ல் ஈரோட்டைச் சேர்ந்த வசந்தாமணி என்பவருக்குத் தத்துக்கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார். வசந்தாமணி, எம்.ஜி.ஆர் வீட்டில் 1980-களில் பணிபுரிந்திருக்கிறார். மனுதாரர், தன்னுடைய தத்து ஆவணத்தில், சோபன்பாபு, ஜெயலலிதா, வசந்தாமணி, எம்.ஜி.ஆர் ஆகியோர் கையெழுத்திட்டிருப்பதாகப் போட்டோகிராபிக்ஸ் செய்து ஆவணத்தைத் தயார் செய்திருக்கிறார். 

"இந்தக்காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் நடமாட முடியாத அளவு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் கையெழுத்திட்டிருப்பதாக மனுதாரர் கூறுகிறார். இது நம்பும்படியாக இல்லை" என்று நீதிபதி தெரிவித்தார்.

-  பா. பிரவீன் குமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close