Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்களுக்காக களம் இறங்கும் சன்னி லியோனும் டாப்ஸியும்!

மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஆண், பெண் இருபாலரிடமும் ஏற்படுத்தும் வகையில், ‘டிடெக்ட் டூ டிஃபீட்’ என்னும் மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கை கோர்த்துள்ளனர் பிரபல நடிகைகளான டாப்ஸி, சன்னி லியோன் ஆகிய இருவரும்.

வட இந்திய சீரியல்களில் கொடிகட்டிப் பறக்கும் நடிகைகள் திவ்யங்கா த்ரிபாதி, தேவோலேனா பட்டாச்சாரியா, கிரித்திகா கம்ரா ஆகியோரும் முழுமூச்சாக மார்பகப் புற்றுநோய்  பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

‘ஆண்கள் உங்கள் மார்பகங்களின் மீது செலுத்தும் கவனத்தை விட, நீங்கள் செலுத்தும் 2 நிமிட கவனம் வாழ்நாள் முழுவதும் மார்பகப் புற்றுநோய் பாதிப்பிலிருந்து உங்களைக் காப்பாற்றும்’ என்று டாப்ஸியும், சன்னி லியோனும் சொல்லிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகளவில் கவனம் ஈர்த்துள்ளது. பாஸ்ட் ஃபுட் கலாச்சாரமும், வேலையால் ஏற்படும் மன அழுத்தமும் பெண்களைச் சுற்றிச் சுழலும் நிலையில், ஒரு பெரிய பாதிப்பிலிருந்து பெண்களை மீட்டெடுக்க விழிப்புணர்வை உண்டாக்கத் துவங்கியுள்ள இந்த ஹீரோயின்களுக்கு ஒரு சல்யூட்!

மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுடன் நம்மில் எத்தனைப் பேர் மார்பகங்களைச் சுய பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறோம்? எண்ணிப் பார்த்தால் 10 பேர் கூடத் தேற மாட்டோம்.

உண்மையில், தாய்மையின் அடையாளமான மார்பகங்களில் சிறு கட்டி, உறுத்தல், வலி ஏற்பட்டால் கூட அதை உடனடியாகக் கவனிக்க வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கின்றது. பால்சுரப்பி மற்றும் நுணநீர் திசுக்களில் ஏற்படும் சிறிய மாறுதல் கூட, நாளடைவில் புற்றுநோயாக மாறக்கூடும் என்று அலாரமடிக்கின்றனர் மருத்துவர்கள்.

மார்பகப் புற்றுநோய் அறிகுறிகள்:

* மார்பக புற்று நோயின் போது, மார்பில் எங்காவது கட்டி அல்லது முடிச்சு இருக்கும்.

* மார்பகப் பகுதியில் வீக்கம், சிவந்து காணப்படுதல் போன்றவை இருக்கலாம்.

* காம்பில் வெள்ளை நிறக் கசிவு போன்ற அறிகுறிகள் இருக்கும்.

முன்னெச்செரிக்கையும், விழிப்புணர்வும்:

35 வயதைக் கடந்து விட்ட பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகம். எனவே 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பை இறுக்கமாக அழுத்தும் உடைகளைத் தவிர்த்தல் நல்லது. உடற்பயிற்சிகளை தினசரி மேற்கொள்தல், வைட்டமின் சி மற்றும் ஏ ஆகியவை சரியான விகிதத்தில் கலந்த உணவை சாப்பிடுதல், ஆண்டுக்கு ஒரு முறை மகளிர் சிறப்பு மருத்துவர்களிடம் மார்பகப் பரிசோதனை செய்து கொள்வது போன்றவை மார்பகப் புற்று நோய் வராமல் தவிர்க்க உதவும்.

மார்பகப் புற்றுநோய் தீவிரமடைந்தால், உயிரிழப்பு கூட நேரிடலாம். பெரும்பாலான மார்பகப் புற்றுநோய்கள் 3-வது, 4-வது படிநிலைகளிலேயே கண்டறியப்படுவதால் மார்பகங்களையே நீக்க வேண்டிய நிலைக்கு பல பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள், மார்பகப் புற்றுநோயின் முற்றிய தருணத்திலேயே கண்டறிந்துள்ளனர்.

 

-பா.விஜயலட்சுமி
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close