Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டாய்லெட்மேன் ஜாக் சிம்முடன் பிரத்யேகப் பேட்டி #WorldToiletDay

டாய்லெட்மேன்'  -அடையாளத்திலேயே அதிர வைக்கிறார் ஜாக் சிம்.

 

டாய்லெட்மேன்

''டாய்லெட் மேன் என அழைக்கப்படுவதில் எனக்கு மகிழ்ச்சியே.  என்னை அந்த அடையாளத்துடன் அறிகிற யாரும் அதன் பிறகு என்னையோ, எனது வேர்ல்ட் டாய்லெட் ஆர்கனைசேஷனையோ மறக்க மாட்டார்கள் இல்லையா...?'' பெருமித அறிமுகம் தருகிறார் ஜாக் சிம்.

உலகம் முழுக்க 'டாய்லெட் மேன்' என அறியப்படுகிற ஜாக், பில் கிளின்ட்டனுடன் இணை செயல்திட்டம் போட்ட முதல் சிங்கப்பூர்வாசி.
ஆந்திராவின் தூய்மை இந்தியா முயற்சியில் சக நடத்தாளராக நியமிக்கப்பட்டவர். வேர்ல்ட் டாய்லெட் கல்லூரியின் நிர்வாகி... என ஏகப்பட்ட பெருமைகளுக்கு சொந்தக்காரர்.

அன்றாடத் தேவையும் ஆரோக்கியத்துக்கு அடிப்படையுமான கழிவறை வசதியின் அவசியத்தை வலியுறுத்திப் போராடி வருபவர். வருடம் தோறும் நவம்பர் 19ம் தேதி உலக கழிவறை தினமாக அறிவிக்கப்படுகிறது. அதையொட்டி, டாய்லெட்மேன் ஜாக் சிம்முடன் ஒரு பிரத்யேகப் பேட்டி...

''ஆரோக்கியம் தொடங்கும் இடமே அவரவர் வீட்டுக் கழிவறைதான்.  அதன் சுகாதாரம்தான் முதல் தடுப்பு மருந்து. கழிவறை வசதிகள் இல்லாத ஊர்களில் வசிக்கிற மக்களிடம் ஆக்க வளத்தை எதிர்பார்க்க முடியாது...'' அறிக்கையுடன் ஆரம்பிக்கிற ஜாக் சிம், தனது வெற்றிக் கதையைப் பகிர்கிறார்.

''சிங்கப்பூரில் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தவன். நாங்கள் குடியிருந்த குடிசைவாழ் பகுதியில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலத்தை குழந்தையாக இருந்த போதே பார்த்து வருந்தியிருக்கிறேன். தவிர மக்கள் வாழும் இடங்களில் மனிதக் கழிவுகளும், புழுக்களும், ஈக்களுமாக சூழ்ந்திருக்கிற கோலம் காணச் சகிக்காதது. 5 வயதிருக்கும்போது, கழிப்பிட வசதியுள்ள வேறு வீட்டுக்கு மாறிய போது வாழ்க்கையே மாறிப்போன மாதிரி ஒரு உணர்வு. காரணம் அதுவரை பிரிட்டிஷ் மக்களுக்கும், பணக்காரர்களுக்கும்  மட்டுமே ஃபிளஷ் வசதி உள்ள கழிவறைகள் சாத்தியம் என்கிற நிலை இருந்தது.

40 வயதான பிறகு வாழ்க்கையில் ஓரளவு பணம் சேர்ந்தது. வாழ்கிற வாழ்க்கைக்கு ஏதேனும் அர்த்தம் இருக்க வேண்டும் என நினைத்தேன். இறப்பதற்குள் மற்றவர்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என விரும்பினேன். அப்போதுதான் சிறுவயதில் நான் கண் எதிரே அனுபவித்த வலி நினைவுக்கு வந்தது. கழிப்பிட வசதி இல்லாத வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது? என்னுடைய ஈடுபாட்டை அதை நோக்கித் திருப்பினேன்.

 

''கழிப்பறையைப் பற்றிப் பேசுவதையே மக்கள் அவமானமாக நினைத்த காலம்... நான் என் முயற்சிகளைப் பற்றிப் பேசினால் கட்டாயம் சிரிப்பார்கள் எனத் தெரியும். பேசத் தடையாக நினைத்த அந்த விஷயத்தை நகைச்சுவையோடு அணுகினால் மக்களிடம் சுலபமாக கொண்டு போக முடியும் என யோசித்தேன்.  இதய வடிவ இருக்கை வடிவில் WTO (World Toilet Organisation) என்கிற லோகோவை டிசைன் பண்ணினேன். அது பயங்கர ட்ரெண்ட் ஆனது. பேசவே தடையாக நினைத்த கழிவறைப் பிரச்னை, அதன் பிறகு பரபரப்பான விஷயமானது...'' என்கிற ஜாக், 2005ல் வேர்ல்ட் டாய்லெட் காலேஜ் என்கிற பெயரில் புதுமையான கல்லூரியையும் ஆரம்பித்திருக்கிறார்.

''வேர்ல்ட் டாய்லெட் காலேஜ் ரிஷிகேஷில் அமைக்கப்பட்டுள்ளது. துப்புரவுத் தொழிலாளர்கள்தான் நிஜமான ஹீரோக்கள். அவர்கள் இல்லாவிட்டால் நமது வாழ்க்கை என்னவாகும் என்பதை யாராலும் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. ஜப்பானிய தரத்தில் அவர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும் என விரும்பினேன். 2005ல் சமூக நிறுவனமாகவே இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. கழிவறை அமைப்பு மற்றும் அதன் சுகாதாரத்தை உறுதி செய்ய உலகளவில் இப்படியொரு அமைப்பு வேண்டும் என விரும்பினேன்.

இந்த கல்லூரியின் நோக்கமே துப்புரவுத் தொழிலாளர்களின் மீதான மோசமான பார்வையை மாற்றுவதும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும்தான். உலகம் முழுவதிலும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த வருமானமே வழங்கப்படுகிறது.  இவற்றை எல்லாம் மாற்றும் வகையில் கழிவறைகளை சுத்தம் செய்வதிலும், சின்னச் சின்ன பழுதுகளை சரிபார்ப்பதிலும் அவர்களுக்கு தரமான பயிற்சிகளை கொடுக்கிறோம். அவர்களது வேலையில் தேர்ச்சி பெறச் செய்வதன் மூலம் அவர்களது மீதான சமூக மதிப்பையும் மாற்ற முடியும் என நம்புகிறோம். அவர்களை ஒடுக்கப்பட்ட மக்களாகப் பார்க்காமல் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களாக பார்க்கச் செய்ய வேண்டும்...''  என்கிற ஜாக் சிம், மக்களுக்கும் வேண்டுகோள்கள் வைக்கிறார்.

''மக்கள் ஒவ்வொருவரும் எங்கள் வீட்டுக் கழிவறைதான் அழகானது என சவால் விட வைப்பதுதான் என் லட்சியம். வீட்டின் ஒவ்வொரு மூலையையும் பார்த்துப் பார்த்து அழகுப்படுத்துகிற நீங்கள், உங்கள் வீட்டுக் கழிவறைகளை அழகாக்க நினைத்ததுண்டா? கலர்ஃபுல்லாக உடை அணிவதைப் போல, உங்கள் வீட்டுக் கழிவறையையும் கலர்ஃபுல்லாக மாற்றுங்கள். அக்கம்பக்கத்து வீட்டார் பொறாமைப்படுகிற அளவுக்கு அவற்றுக்கு புதுமையாக பெயிண்ட் அடியுங்கள். கழிவறைகளுக்கும் ஒரு அந்தஸ்தை கொடுங்கள். அழகான கழிவறைகளுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிக்கலாம். 

ஆரோக்கியம் தொடங்கும் இடமே அவரவர் வீட்டுக் கழிவறைதான்.  அதன் சுகாதாரம்தான் முதல் தடுப்பு மருந்து. கழிவறை வசதிகள் இல்லாத ஊர்களில் வசிக்கிற மக்களிடம் ஆக்க வளத்தை எதிர்பார்க்க முடியாது'' என்கிற டாய்லெட் மேன், இந்த வருட உலக கழிவறை நாளிலும் உறுதிமொழியை முன்வைக்கிறார்.

அது...

''இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் கழிவறை வசதி கிடைக்கும் வரை உழைத்துக் கொண்டே இருப்பது.''

ஆர்.வைதேகி

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close