Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கப்பல் விடு.... செல்ஃபி எடு.... மழை விடுமுறையைக் கொண்டாடலாம்!

மழை விடுமுறை

மழை வந்துவிட்டாலே குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்தான். காலை எழுந்ததுமே டி.வி-யைப் பார்த்து 'இன்று பள்ளி விடுமுறையா?' என்று பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது. அவர்களின் எண்ணம்போல விடுமுறையும் கிடைத்துவிட்டது. வெளியே மழை பெய்வதால், வீட்டுக்குள்ளேயே குழந்தைகளை எப்படி மகிழ்வாக வைத்திருப்பது?

* மழையினைக் கொண்டாடுவதற்கான முதல் விஷயமே கப்பல் விடுவதுதான். பழைய செய்தித்தாள்களைக் கொண்டு குழந்தைகளுக்கு கப்பல் செய்யக் கற்றுக்கொடுங்கள். கத்திக்கப்பல், பறக்கும் கப்பல் என உங்களுக்குத் தெரிந்த கப்பல் வகைகளைச் செய்யவைத்து, வீட்டு முன் ஓடும் மழை நீரில் விடச் செய்யுங்கள்.

* ஒரு பாத்திரத்தை எடுத்து மழை பெய்யும் இடத்தில் குழந்தைகளை வைக்கச்சொல்லவும். ஒரு மணி நேரத்துக்குப் பின்னர், பாத்திரத்தில் எத்தனை சென்டிமீட்டர் அளவு உயரத்துக்கு நீர் நிறைந்திருக்கிறது என ஸ்கேல் வைத்து அளக்கலாம். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இவ்வாறு செய்து, ஒரு நாளில் எந்த ஒரு மணி நேரம் அதிக மழை பெய்தது எனக் கணக்கிடலாம். டி.வி-யில் 'நுங்கம்பாத்தில் 10 செ.மீட்டர் மழை பெய்தது' என்று கேட்டதும் ஓரளவுக்கு மழையின் அளவினைப் புரிந்துகொள்வார்கள்.

* மழைச்சாரல் குளிரைக் கொண்டு வந்திருக்கும். எனவே, சூடாக ஏதாவது சாப்பிட நாக்கு தேடும். அதற்காக சமைக்கும்போது, குழந்தைகளையும் குக்கிங் பார்ட்னராகச் சேர்த்துக்கொள்ளுங்கள். ஸ்டிராங்கான டீ போடுவது எப்படி எனக் குழந்தைகளுக்குச் சொல்லித் தரலாம். சமைத்ததும் மழையை வேடிக்கை பார்த்தபடியே ருசிக்கலாம். குளிர்காலத்துக்கு ஏற்ற உணவுகளைச் செய்துகொடுக்கலாம்.
 
* கருமேகங்கள் சூழந்திருப்பதால் வெளியே இருட்டாக இருக்கும். அறையை இன்னும் இருட்டாக்கி, போர்வைக்குள் புகுந்து குழந்தைகளுடன் உங்களின் சிறுவயதில் மழைக் காலத்தில் நடந்த மழைக் கதைகளைச் சொல்லலாம்.

* டி.வி-யில் செய்திகள் பார்க்கும்போது, விடுமுறை என்பதை மட்டும் பேசாமல், செய்தியில் சொல்லப்படும் புயல், மழை, காற்றழுத்தத் தாழ்வுமண்டலம், சூறாவளி, பெரும்மழை, தூறல் ஆகியவற்றுக்கான வேறுபாடுகளைச் சொல்லித் தரலாம். அதற்கு ஏற்ற புத்தகங்களைத் தந்து, குழந்தைகளையே தேடவைக்கலாம்.

* வீட்டின் அருகே இருக்கும் குழந்தைகள் அனைவரையும் ஒன்றுசேர்த்து, ஒன்றாக புத்தகம் வாசிக்க வைக்கலாம். கூட்டாக கதைகளை உருவாக்கலாம். முதலாமானவர் ஒரு கதையைச்சொல்ல, அடுத்தவர் அடுத்த வரியைச் சொல்ல, புதிய கதையை உருவாக்கலாம்.

* வீட்டுக்குள் இருந்தபடியே மொபைலைக் கொண்டு மழையையும் மழை விட்டுச்சென்ற சுவடுகளையும் போட்டோ எடுக்கலாம். எந்த போட்டோ சிறந்தது என வீட்டில் இருப்பவர்களைத் தேர்ந்தெடுக்கச் செய்து, பரிசுகள் அளிக்கலாம். மழையுடன் செல்ஃபி எடுக்கலாம். மின்னல், இடி இருந்தால் மொபைல் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

* மழை கொஞ்சம் ஓய்வு எடுக்கும்போது, வண்டியை எடுத்துக்கொண்டு தெருவில் ஒரு ரவுண்டு வரலாம். லேசான தூறலின்போது குடை பிடித்து மொட்டை மாடிக்குப் போய், வானத்தை ரசிக்கலாம்.

* மழையைப் பார்த்து குழந்தைகளை ஓவியம் வரையச்சொல்லலாம். பெருமழை, அதன் பாதிப்பு, எத்தனை மழை பெய்தாலும் எப்படி நகரம் இருந்தால் மழை நீர் ஓடிவிடும், மலையில் மழை, கடலில் மழை என்று அவர்களுக்கு ஐடியா கொடுக்கலாம்.

* வீட்டில் இருக்கும் அனைத்துப் புத்தகங்களையும் ஒரே இடத்துக்குக் கொண்டுவந்து, அதன் தன்மைக்கு ஏற்றவாறு வகைபிரித்து ஷெல்ஃப்களில் அடுக்கச் சொல்லலாம்.

* ஃபேமிலி ட்ரீ உருவாக்கலாம். அப்பா, அம்மாவின் பெற்றோர்கள், அவர்களுடைய சகோதரர்கள், சகோதரிகள், அவர்கள் பெயர்கள், ஊர், படிப்பு, வேலை போன்ற கூடுதல் செய்திகளையும் மரத்தில் சேர்க்கலாம். பிறகு இரண்டு நபர்களைத் தேர்ந்தெடுத்து... இவர், அவரை எப்படி அழைக்க வேண்டும் என்று கேட்கலாம். உறவுகள் பற்றிய நல்ல புரிதல் ஏற்படும்.

* ஹாலில் எல்லோரும் வட்டமாக அமர்ந்துகொண்டு, தங்களின் பார்வையில் படும் பொருட்களில் அ, ஆ இ, ஈ -யில் ஆரம்பிப்பவற்றைக் கூறச் செய்யலாம். 

மழையில் சில நிமிடங்கள் நனையவும் விளையாடவும் அனுமதிக்கலாம். (உடல்நிலை சரியில்லாத குழந்தைகளைத் தவிர).

விதவிதமான காகிதக் கப்பல்களைச் செய்யும் முறைகளைத் தெரிந்துகொள்ள:

 

 

மழைக்காலத்தில் பெற்றோர்கள் முக்கியமாக செய்யவேண்டியது. மழை நல்லது. அது இல்லை என்றால், விவசாயம் பாதித்து நிலத்தடி நீர் குறையும், குடிக்க தண்ணீர் கிடைக்காது என்ற அவசியத்தையும், மழை எப்படி உருவாகிறது என்பதனையும் கூற வேண்டும். மழையைக் கொண்டாடுங்கள் !

- விழியன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close