Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

படித்த பள்ளிக்காக நான்கு லட்சம் செலவு செய்த முன்னாள் மாணவர்கள்! #CelebrateGovtSchools

தாங்கள் படித்த பள்ளியின் கட்டடமும் உள்கட்டமைப்பும் பழுதடைந்து இருப்பதைக் கண்டு மனம் வருந்திய முன்னாள் மாணவர்கள், நான்கு லட்சம் வரை திரட்டி பள்ளியைப் புதுப்பித்துள்ளார்கள். ஸ்மார்ட் கிளாஸ் அமைப்பது, நல்ல மதிப்பெண் எடுத்தும் மேற்படிப்பு படிக்க வசதியின்றி தத்தளிக்கும் மாணவர்களைப் படிக்கவைப்பது எனத் தொடர் செயல்பாடுகளால் வியக்கவைக்கிறார்கள். பதிலுக்கு, அந்த முன்னாள் மாணவர்களுக்குக் கல்வித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் பாராட்டு விழா நடத்தி அசத்தியிருக்கிறது அந்தப் பள்ளி. 

பள்ளி

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிதான் அது. அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பின் தலைவர் சுரேஷ்குமார், ''நாங்க படிச்ச பள்ளிக்கு நன்றிக்கடன் செலுத்த கிடைச்ச ஒரு வாய்ப்பாகவே இதைப் பார்க்கிறோம். நாங்க இப்படி நல்ல நிலைமையில் இருக்க, அறிவுக்கான அடிப்படை விதைப் போட்டது இந்தப் பள்ளிதானே. நாங்க செஞ்சது கொஞ்சம்தான். இந்தப் பள்ளி எங்களுக்குக் கொடுத்த அறிவுக்குச் சமமாக கொடுக்கும் சக்தி எங்ககிட்ட இல்லை" என்று சிலாகிப்புடன் தொடர்கிறார். 

சுரேஷ்குமார் - முன்னாள் மாணவர்

"நான் ஈரோட்டில் பிளக்ஸ் கடை வெச்சுருக்கேன். ஜே.சி அமைப்பிலும் மெம்பரா இருக்கேன். எங்க அமைப்பு சார்பில், அரசுப் பள்ளிகளுக்கு பியூரிபைடு செய்யும் வாட்டர் மெஷின் கொடுக்க முடிவுப் பண்ணினாங்க. உடனே 'நான் படிச்ச மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கொடுக்கலாம்'னு சொன்னேன். பள்ளித் தலைமை ஆசிரியை சொர்ணாம்பிகையைச் சந்திச்சோம். 'நாங்களே யார்கிட்ட உதவி கேட்கலாம்ன்னு நினைச்சுட்டிருந்தோம். சரியான நேரத்தில் வந்திருக்கீங்க. பியூரிபைடு மெஷினைவிட, சிதைந்து கிடக்கும் பள்ளிக் கட்டடம், காம்பவுன்ட் சுவரை சரிசெஞ்சு கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்'னு சொன்னாங்க. 'முயற்சி பண்றோம் மேடம்'னு வந்துட்டோம். அன்னிக்கு ராத்திரி முழுக்க எனக்குத் தூக்கம் வரலை. என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டே இருந்தேன். அந்தப் பள்ளியில் என்னோடு படிச்சு தொடர்பில் இருக்கும் நண்பர்களிடம் வாட்ஸ்அப் வழியே ஆலொசனை கேட்டேன். 'நாம எல்லோரும் பணம் போட்டு பள்ளியைச் சரி பண்ணுவோம்'னு பதில் சொன்னாங்க. 

பள்ளி மாணவர்கள்

உடனே செயலில் இறங்கினோம். வெளிநாட்டில் இருக்கும் இருபது முன்னாள் மாணவர்களையும் பிடிச்சு, 'மொடக்குறிச்சி பள்ளி முன்னாள் மாணவர்கள் அமைப்பு' என்று ஆரம்பிச்சோம். நான்கு லட்சம் ரூபாய் வரை சேர்ந்துச்சு. அந்தப் பணத்தில் சிதிலமடைஞ்ச கட்டடங்களைச் சீர்ப்படுத்தினோம். சில கிளாஸ் ரூம்களில் கப்போர்ட் கட்டினோம். இப்போ, எங்கள் மாணவர்கள் சங்க அமைப்பை ரெஜிஸ்டர் பண்ணியிருக்கோம். மாதா மாதம் இருபது மெம்பர்கள் குறிப்பிட்ட தொகையை சேர்த்து பள்ளியில் இரண்டு ஸ்மார்ட் கிளாஸ் அமைச்சுக் கொடுத்திருக்கோம். இந்தப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்து, மேற்கொண்டு படிக்க வசயில்லாமல் இருக்கும் 10 பேரைத் தேர்ந்தெடுத்து படிக்கவைக்கவும் முடிவுப் பண்ணியிருக்கோம். இது எல்லாமே முன்னாள் மாணவர்களான எங்கள் பணத்தில்தான் செய்யறோம். இந்தப் பள்ளியை மாநில அளவில் முதன்மையான பள்ளியாக மாற்றுவதுதான் எங்க லட்சியம்" என்று உணர்ச்சி மேலிட சொல்கிறார் சுரேஷ்குமார். 

பள்ளி தலைமையாசிரியர்

பள்ளியின் தலைமை ஆசிரியை சொர்ணாம்பிகை, "இது ரொம்ப மகிழ்ச்சியான தருணம். முன்னாடி இந்தப் பள்ளி இருபாலர் படிக்கும் பள்ளியாக இருந்துச்சு. நானும் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிதான். எங்களின் அக்கறையையும் அர்ப்பணிப்பையும் மாணவர்களிடம் முழுமையாகச் செலுத்தி கல்வி கற்றுக்கொடுத்து வருகிறோம். ஆனால், பழுதான கட்டடங்களை எப்படிச் சரி செய்யறதுன்னு தெரியாமல் இருந்தப்போதான், முன்னாள் மாணவர்கள் உதவறதா சொன்னாங்க. குறுகிய காலத்திலேயே நான்கு லட்சம் ரூபாய் திரட்டி, சொன்னதைச் செய்து காட்டியிருக்காங்க.

மாணவர்களின் பணத்தால் புதுப்பொலிவு பெற்ற கட்டிடம்

கட்டடங்கள், காம்பவுன்ட் சுவர்களை வர்ணம் பூசி அழகுப்படுத்திட்டாங்க. அவங்களுக்கு நன்றி சொல்ல நினைச்சோம். மாவட்ட கலவி அதிகாரி மற்றும் மொடக்குறிச்சி தாசில்தாரை பள்ளி விழாவுக்கு அழைச்சுட்டு வந்தோம். அவர்கள் முன்னிலையில் பாராட்டு விழா நடத்தினோம். இந்த மாதிரி ஒவ்வொருவரும் தாங்கள் படிச்ச பள்ளிக்கு உதவினால், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலை மாறும்" என்றார் நெகிழ்ச்சியுடன். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close