Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இதற்கெல்லாம் ஆதாரை கட்டாயம் ஆக்குமா மத்திய அரசு? #Aadhaar


ஆதாரை ஆதார் 

ஆதார் மீம்ஸ்

ஆதார் கார்டு இல்லாதவன் அரை மனிதன் என பழமொழியை மட்டும்தான் மத்திய அரசு மாற்றவில்லை. மற்றபடி, அனைத்துக்கும் ஆதார் அவசியம் எனச் சொல்லி வருகிறது. இத்தனைக்கும் ஆதார் கார்டை கட்டாயமாக்கக்கூடாது என்ற வழக்கு  நடந்துவருகிறது. வரி கட்டுவது முதல் வரிப்பணத்தில் மக்களுக்கு கிடைக்கும் சலுகைகள் வரை அனைத்துக்கும் ஆதாரை அவசியம் என்கிறது மத்திய அரசு. இதுதான் ஆளும் பா.ஜ.க.வின் கொள்கை என்றால் இன்னும் சில விஷயங்களை சொல்கிறோம். அதற்கும் ஆதாரை கட்டாயாமாக்குவார்களா?

1) வாக்களிக்க:
  இடைத்தேர்தல்கள் நடந்து வருகின்றன. பல மாநிலங்களில் பொதுத்தேர்தல்களும் வரவிருக்கின்றன. ஆதார் கார்டை வாக்களிக்க கட்டாயமாக்கி, கைரேகை ஒத்துப்போகும் நபரே வாக்களிக்க முடியும் என்ற நிலையை இந்த மத்திய அரசு உருவாக்குமா? கள்ள வாக்குகளை ஒரே அடியாக ஒழித்துவிட இது உதவும். உண்மையில், மத்திய அரசின் நோக்கம் இது போன்ற போலிகளை ஒழிப்பதுதான் என்றால், வாக்களிக்கவும் ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கும். ஆனால், இதையெல்லாம் செய்தால் அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் பாதிப்பு என்பதால் மூச்சு கூட விட மாட்டார்கள்.

2) கட்சியின் உறுப்பினர் ஆக:

மிஸ்டு கால் கொடுத்தாலே கட்சியில் சேர்க்கும் ஐடியாவை கொண்டு வந்தவர்கள் பா.ஜ.க. ட்விட்டரில் தொடங்கி ஒரு சமூக வலைதளம் விடாமல் ஆக்டிவாக இருக்கும் கட்சி. டெக்னாலஜியம்மன் துணை என வாழ்ந்து வருகிறவர்கள். இவர்கள் கட்சியில் ஆள் சேர்க்கும்போது ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே சேர்ப்போம் என அறிவிப்பார்களா? அப்போதெல்லாம் ஆதார் என்ன... அடையாளமே இல்லை என்றாலும் சேர்த்துக்கொள்வார்கள். அரிசி பருப்பு வாங்கச் சென்றால் தான் ஆதார் கேட்பார்கள்.

3) கட்சி நிதி கொடுக்க:

2012ல் இருந்து 2016 வரையிலான நான்கு ஆண்டில் 957கோடி ரூபாய் கட்சி நிதியாக கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து தேசிய கட்சிகளுக்கு கிடைத்திருக்கிறது. அதில் அதிகபட்சமாக 705 கோடி ரூபாயை பா.ஜ.க. பெற்றிருக்கிறது. இவைத்தவிர தனிநபர் நிதிகளும் ஏராளம். கட்சிக்கு நிதி அளிப்பவர்கள் தங்களது ஆதார் தகவலைத் தெரிவிக்க வேண்டும் என இந்தக் கட்சிகள் சொல்லுமா? 20,000 ரூபாய்க்கு மேல் நிதி அளித்தால் அவர்களது பான் எண்ணை தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அதையும் யாரும் பின்பற்றுவதில்லை. இதில் ஆதார் அவசியம் என்றால் என்ன ஆகும்?

மாணவர்கள் பரீட்சை எழுதுவதில் தொடங்கி பெரியவர்கள் பென்ஷன் வரை ஆதார் அவசியம் என்கிறார்கள். ஆனால், அந்த ஆதார் எண்ணை தனியார் நிறுவனங்கள் பலவற்றுக்கும் பகிரும் வாய்ப்பும் இப்போது இருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அதில் ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் சென்ற வாரம் “ 'தனிமனித ரகசியம் காப்பது அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமையே” எனக் கூறி தீர்ப்பளித்தது. 

ஆதார் விஷயத்தில் இந்திய அரசு தனிநபர் ரகசியத்தைக் காக்க எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது, எதிர்காலத்தில் ஆதாரை வைத்து என்ன மாதிரியான தகவல்கள் பகிரப்படும், யார் யாருக்கெல்லாம் ஆதார் தகவல்களை அணுகும் அனுமதி தரப்படும் என நிறையக் கேள்விகள் மக்கள் மனதில் எழுந்துள்ளன. இவற்றையெல்லாம் வெளிப்படையாக பேசி, சந்தேகங்களை தீர்க்க வேண்டிய பொறுப்பும் இந்த அரசுக்கு உண்டு. மக்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்க ஆதார் அவசியமில்லை. மக்கள் மீதான அக்கறை மட்டுமே போதும். 

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close