Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கையேந்தும் குரங்குகள்…செல்ஃபி எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்... குமுளி சோகம்!

தேனி மாவட்டம் கூடலூர் – குமுளி மலைப்பாதையில் சாலையோரம் குரங்குகளைப் பார்க்கலாம். இவை அனைத்தும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சேட்டை செய்த குரங்குகள். தேனி மாவட்டத்தில் எங்கு குரங்குகள் பிடிக்கப்பட்டாலும் நேராக குமுளி மலைக்கு கொண்டு வந்து விடப்படும். இவை அனைத்தும் சில இடங்களில் தங்களுக்குள் ஒரு குழுவை அமைத்துக்கொண்டும், எல்லைகளை வகுத்துக்கொண்டும் வாழ்ந்துவருகின்றன.

உணவில்லாமல் தவிக்கும் குரங்குகள் :

தேனி மாவட்டம் 37% காடுகள் பரப்பளவை தன்னகத்தே உடைய மாவட்டம். அதிக காடுகள் பரப்பளவு காரணமாக, மான், குரங்கு, மயில்கள் இங்கே ஏராளம். அதில் குறிப்பாக குரங்குகளின் எண்ணிக்கை சற்று அதிகம். கம்பம், போடி, ஆண்டிபட்டி போன்ற பகுதிகளில் இருக்கும் சிறு சிறு குன்றுகளில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்த குரங்குகள் உணவுப் பஞ்சம் காரணமாக மக்கள் வாழும் பகுதிக்குள் படையெடுக்க ஆரம்பித்தன. இதனால் அச்சமடைந்த மக்கள் வனத்துறையின் உதவியுடன் அவற்றைப் பிடித்து மலைப்பகுதிக்குள் விட்டுவிடுகின்றனர். தற்போதையை கணக்கின்படி குமுளி மலைப்பகுதியில் மட்டும் சுமார் 300 குரங்குகள் இருக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

குரங்குகள்

குமுளி மலைப்பகுதி, பெரும்பாலான பகுதிகளில் தேக்கு மரங்கள் நடவு செய்யப்பட்டு சில தனியார் நிறுவனங்கள் லாபம் பார்க்கும் பகுதி. இதற்காக இயற்கையாகவே குமுளி மலையில் வளர்ந்து கிடந்த பலா, நாவல், அத்தி போன்ற மரங்களை வெட்டிவிட்டு தேக்கு பயிரிடப்பட்டிருக்கிறது. மலைப்பாதைக்குள் நுழைந்தால் கர்னல் பென்னி குயிக் மணிமண்டபத்தின் எதிர்புறத்தில் தேக்குத் தோட்டங்களை காணலாம். இப்படி வன உயிரினங்களுக்கு உணவுகளை வழங்கி வந்த மரங்கள் அழிக்கப்பட்டதால், குரங்களுக்கு உணவில்லாமல் போனது. பசியின் காரணமாக சாலைக்கு வரும் குரங்குகள், சுற்றுலாப் பயணிகளிடன் கையேந்தும் நிலைக்கு வந்துவிட்டன. கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், குரங்குக் கூட்டங்களைப் பார்த்தவுடன் தங்கள் கைகளில் இருக்கும் உணவுப் பொருள்களை கொடுத்து அதனுடன் போட்டோ மற்றும் செல்ஃபி எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். இதனால் மனிதர்களைப் பார்த்தவுடன் தங்களது கைகளை நீண்டி சாப்பிட ஏதாவது கொடுக்கும் படி கேட்கிறது.

விபத்துகளில் சிக்கும் குரங்குகள்:

இந்த மலைப்பாதையில் 20 கிலோ மீட்டர் வேகத்தில்தான் செல்ல வேண்டும். ’அடுத்ததாக ஒரு வளைவு இருக்கிறது’ போன்ற  சாலையோரப் பலகைகள் செடிகளின் ஆக்கிரமிப்பில் இருப்பதால் பெரும்பாலான வாகனங்கள் தங்கள் வேகத்தை குறைப்பதில்லை. இதனால், அதிகமாக விபத்துகளில் சிக்குவது இந்தக் குரங்குகள்தான். ஒரு கூட்டத்தில் இருக்கும் முக்கால்வாசி குரங்குகள் சாலை விபத்துகளில் சிக்கி கை, கால்களை இழந்து காணப்படுகிறது. பெரும்பாலும் கேரளாவுக்கு உணவுப்பொருள்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்கள், நேரத்துக்குப் பொருள்களை மார்க்கெட்டில் சேர்க்க வேண்டும் என்பதால் அதிவேகத்தில் செல்கிறார்கள். இவர்களால்தான் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன.

குரங்குகள்

குமுளி மலைப்பகுதி வரையாடுகளின் இருப்பிடம். ஆனால் இன்று, வனத்துறையின் அறிவிப்பு பலகையில் மட்டுமே வரையாட்டை காண முடிகிறது. நகரிய வளர்ச்சி காரணமாக நாட்டில் இருந்து காட்டிற்குள் புகுந்த மனிதனால், தன் சொந்த இடத்தில் கூட வாழ தகுதியில்லாமல் அகதிகளாக்கப்பட்டிருக்கிறது இந்தக் குரங்கு கூட்டம். கிடைப்பதை சாப்பிட்டுக்கொண்டு வாழும் குணம் கொண்டதால் மனிதனை அண்டி வாழ்ந்துகொண்டிருக்கிறது குரங்குகள். மற்ற வன உயிரிகளுக்கு அக்குணம் இல்லையென்பதால் முற்றிலுமாக அழிந்து கொண்டிருக்கிறது என்பதே கசப்பான உண்மை. சுயநலத்துக்காக காடுகளுக்குள் லாபம் தரக்கூடிய மரங்களை நடுவதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். வன விலங்குகளுக்கு பலன் கொடுக்கக்கூடிய மரங்களின் எண்ணிக்கையை பெருக்க வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close