Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நிலாவில் உள்ள நூலகப் புத்தகத்தைத் திருடியது யார்? குழந்தைகளுக்கான இரவு நேரக் கதை! #BedTimeStory

கதைகள் பிடிக்காதவர்கள் ஒருவரும் இருக்க மாட்டார்கள். நமது குழந்தைகளுக்கு எந்தவொரு விஷாயத்தையும் கதையாகச் சொல்லும்போது எளிதாக அவர்களைச் சென்று சேர்ந்துவிடும். அதனால் தினந்தோறும் குழந்தைகளுக்குக் கதை சொல்ல மறக்காதீர்கள். இதோ. நிலாவில் நடக்கும் சுவையான கதை உங்களுக்காக! 

கதை

நிலாவில் உள்ள நூலகப் புத்தகத்தைத் திருடியது யார்?

விழியன்

திரு.மாரிசனும் திருவாளர் மகேசனும் ராக்கெட்டில் ஏற்றப்பட்டனர். திரு.மாரிசன் உலகத்திலேயே தலை சிறந்த துப்பறிவாளர். திருவாளர் மகேசன் அவருடைய உதவியாளர். துப்பறிவாளர் என்றால் தெரியும்தானே? காவல் துறைக்கு இணையாகப் பணி புரிபவர்கள். காவல் துறை தீர்க்க முடியாத வழக்குகளைக்கூட இவர்கள் முடித்து வைப்பார்கள். ஆமாம் இவர்கள் ராக்கெட்டில் எங்கே போகின்றார்கள் தெரியுமா? நிலாவுக்கு... என்னது நிலாவுக்கா? அங்க என்ன நடந்தது? ஏதேனும் விபத்தா? என்ன மர்மம்? இப்படியான கேள்விகள் தோன்றுகிறதா... கொஞ்சம் காத்திருங்கள்!

திரு.மாரிசனும் திருவாளர் மகேசனும் ராக்கெட் உடை அணிந்தாலும் அவர்கள் தொப்பியை கழற்றவே இல்லை. சர்வதேச நாடுகள் எல்லாம் சேர்ந்து நிலாவில் ஒரு நூலகம் திறந்து இருக்கின்றார்கள். அங்கே சகல விதமான புத்தகங்களும் கிடைக்கும். ஆனால் முழுக்க முழுக்கக் குழந்தைகளுக்கான புத்தகங்கள் மட்டுமே. ஒவ்வொரு மொழியிலும் வெளிவரும் எல்லாப் புத்தகமும் ஒரு பிரதி இந்த நூலகத்திற்கு வந்துவிடும். நிலா நூலகத்துக்குப் புத்தகங்கள் ஏற்றிவர நிலாவில் இருந்து ஒரு கயிறு பூமி வரையில் தொங்குகின்றது. புத்தகங்களை அண்டார்ட்டிக்காவில் இருந்து ஏற்றி அனுப்புவார்கள். நிலவில் ஆட்கள் யாருமே இல்லை. எல்லாமே மெஷின்கள்தான். தானாகப் புத்தகங்கள் மேலே வரும், அது எந்த மொழி, எந்த வயதினருக்கான புத்தகம் என்பதை ஸ்கேன் செய்து அந்த அறையில் ரோபோக்கள் எடுத்துச் சென்று வைத்துவிடும்.

துப்பறிவாளர்கள் செல்வதன் நோக்கம் திடீர் திடீர் என நிலாவில் இருக்கும் நூலகத்தில் புத்தகங்கள் காணாமல் போய்விடுகின்றதாம். நிலாவில் இருக்கும் நூலகத்திற்குச் செல்ல பூமியில் இருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஐம்பது மாணவர்கள் வருவார்கள். அவர்களை ஒரு குழு தேர்ந்தெடுத்து நிலாவிற்கு அனுப்பும். இரண்டு நாள்கள் சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்துவிடுவார்கள். இரண்டு நாள்களும் விரும்பும் நேரத்தில் புத்தகங்களைப் படிக்கலாம். எந்த மொழி புத்தகத்தையும் படிக்கலாம், உறங்கலாம். தமிழ் மாணவனுக்கு ஸ்பேனிஷ் மொழி தெரியாது ஆனால் எப்படி ஸ்பேனிஷ் மொழி புத்தகத்தைப் படிப்பது? அதற்கும் அந்த நூலகத்தில் வழி இருந்தது. புத்தகத்தினைத் தேர்வு செய்துவிட்டு எந்த மொழியில் படிக்க வேண்டும் என ஒரு கணினியிடம் சொல்லிவிட்டால் உடனே அந்த மொழியில் அந்தப் புத்தகம் வந்துவிடும். எல்லா வயது குழந்தைகளும் வந்து போவார்கள். மிகவும் பாதுகாப்பான இந்த நூலகத்தில்தான் புத்தகங்கள் காணாமல் போயின.

கதை

திரு.மாரிசனும் திருவாளர் மகேசனும் நூலகத்தில் பொருத்தி இருக்கும் எல்லா கேமராக்களையும் சோதனை செய்தார்கள். நூலகத்திற்குள் நுழையும் எல்லா குழந்தைகளும் கையில் புத்தகம் எடுத்து வரவோ எடுத்துச் செல்லவோ அனுமதி இல்லை. சனி மற்றும் ஞாயிறு மட்டும்தான் நூலகம் பரபரப்பாக இருக்கும், மற்ற நாள்களில் ரோபோக்களின் பராமரிப்பு வேலைகள் மட்டுமே. ஒவ்வோர் அடுக்குகளிலும் அதற்கு உரிய புத்தகங்களை வைக்கும், பக்கங்கள் மடித்து வைக்கப்பட்டிருந்தால், அவற்றைச் சரி செய்யும், குழந்தைகள் படிக்கும் போது புரியாத வார்த்தைகளைக் குறித்து வைத்திருப்பார்கள் அதற்கான எளிய வார்த்தைகளைத் தேடும். உலகத்தில் தலைசிறந்த இரண்டு துப்பறிவாறிவார்கள் தங்கள் வேலையை ஆரம்பித்தார்கள்.

காணாமல் போன புத்தகங்களைப் பட்டியல் போட்டார்கள். யார் கடைசியாக அதனை வாசித்தார்கள் என்று தேடினார்கள். ஆச்சர்யமாக அந்தப் புத்தகங்களைச் சிறுவர்கள் யாருமே சமீபத்தில் வாசித்தது இல்லை. நிலாவில் இருந்து அந்தப் புத்தகங்களை ராக்கெட் வழியாகப் பூமிக்கு எடுத்துச் செல்ல வாய்ப்பே இல்லை. பிறகு எங்குப் போனது புத்தகங்கள்? 

கடைசியாக ஒரு துப்புக் கிடைத்தது. ஓர் அரிதான புத்தகத்தில் GPS கருவி ஏற்கனவே பொருத்தி இருக்கப்பட்டு இருந்தது. அந்தக் கருவி அந்தப் புத்தகம் எங்கே இருக்கின்றது எனக் காட்டிக்கொடுத்துவிடும். திரு.மாரிசனும் திருவாளர்.மகேசனும் அந்த இடம் நிலவில்தான் இருக்கின்றது என்பதை அறிந்து ஆச்சர்யப்பட்டார்கள். நிலாவில்தான் புத்தகம் இருக்கு ஆனால் நூலகத்தில் இல்லை. ஒரு மலைப்பகுதியை காட்டியது. அதை நோக்கி மெள்ள நடந்தார்கள். நிலவில் நடந்தாலும் பறப்பதைப்போலத்தான் இருக்கும். மலைக்குப் பின்புறம் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. அனைத்தும் காணாமல் போனவையே. அருகே ஒரு ரோபோ ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டு இருந்தது. கண்களில் கண்ணீருடன். 

“மிஸ்டர் ரோபோ, என்ன செய்றீங்க நீங்க? ஏன் அழறீங்க?” என்று கேட்டார் திருவாளர் மகேசன்.

“சில பசங்க புத்தகம் படிக்கிறதைப் பார்த்து எனக்கு ஆசை வந்தது. ஒரு புத்தகத்தை யாருக்கும் தெரியாமல் வாசிக்க ஆரம்பித்தேன். படிக்கப் படிக்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. அப்படியே யாரும் தொடாத புத்தகங்களாய் யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து படிச்சிட்டு இங்கயே வெச்சிட்டேன். சிலவற்றைப் படிக்கும்போது துள்ளி குதிப்பேன், சிலவற்றைப் படிக்கும்போது ஏன் சிறுவனாகப் பிறக்கவில்லை என வருந்துவேன்” என்றது ரோபோ.

“மிஸ்டர் ரோபோ, படிக்கிறது தப்பில்லை ஆனால், படிச்ச புத்தகத்தை ஒழுங்கா எடுத்த இடத்திலயே வெச்சிடுடனும். சரியா?” என்றார் திரு.மாரீசன். ரோம்பாவும் சரியெனத் தலையாட்டியது.

தாங்கள் வந்த வேலை முடிந்தது, எல்லாப் புத்தகத்தையும் மீட்டு எடுத்தனர். ஆனால் எங்கிருந்து மீட்டனர் என்று சொல்லவே இல்லை. இவர்கள் பூமிக்கு திரும்ப ராக்கெட்டில் ஏறும் போது அந்த ரோபோ இவர்களைப் பார்த்து தலை வணங்கி நன்றி என்று சொன்னது.

umanath

விழியன்: சிறுவர்களுக்கான கதைகளை எழுதி வருபவர். இவர் எழுதிய மாகடிகாரம் எனும் சிறுவர் நூல் விகடன் விருது பெற்றது. குழந்தை வளர்ப்புத் தொடர்பாகவும் பல கட்டுரைகள்எழுதியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close