Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வீரியத்தை இழக்கும் ஆன்டி பயாடிக் மருந்துகள்... அடுத்தடுத்த மருத்துவ ஆராய்ச்சிகள் நடக்கிறதா?

ஆன்டி பயாடிக்

1928 இல் பெனிசிலினியம் எனும் பூஞ்சை வெளியிடும் வேதிப்பொருள் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுப்பதாக கண்டறிந்தார்கள். அதிலிருந்து உருவானது முதல் ஆன்டி-பயாடிக் மருந்தான பெனிசிலின். அது மருத்துவ உலகில் மாபெரும் புரட்சிக்கு வித்திட்டது. அன்று கண்டறிந்த பெனிசிலினை இன்றுவரை பயன்படுத்துகிறோமா என்றால், அதே பேரில் பலமுறை மாற்றம் செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்துகிறோம் எனலாம். முதலில் கண்டறிந்த மருந்து வெகுவிரைவிலேயே அதன் செயல்திறனை இழந்துவிட்டது. 

பாக்டீரியா வளர்ச்சியடைய அவற்றின் செல்சுவர் முக்கியமானது. பாக்டீரியா செல்சுவர் பெப்டிடோகிளைகன்கள் மூலம் கட்டமைக்கப்படும். பெப்டிடோகிளைகனில் கிளைகன் சங்கிலிக்கும் பெப்டைட் சங்கிலிக்கும் குறுக்கு இணைப்புகள் காணப்படும். இந்தக் குறுக்கு இணைப்புகள் உருவாக ட்ரான்ஸ்பெப்டிடேஸ் எனும் நொதி தேவை. இந்த நொதியின் பணியைத் தடுக்கும் தன்மை கொண்ட பீட்டா லக்டம் எனும் நொதி பென்சிலினில் இருந்தது. இந்த மருந்தைப் பயன்படுத்த தொடங்கியப் பின்னர் பீட்டா லக்டம் நொதிக்கு எதிர்நொதிகளை பாக்டீரியா உருவாக்கத் தொடங்கிவிட்டது. அடுத்து, இதைச் சமாளிக்கும் வகையில் மருந்துகள் உருவாக்கப்பட்டன. 

இதற்குப் பின்னர் குயினலோன்ஸ், அமினோகிளைக்கோசைட்ஸ், டெட்ராசைக்ளின் எனப் பலவகை மருந்துகள் கண்டறியப்பட்டன. இன்று இவற்றையும் சமாளித்து உயிர்வாழ பாக்டீரியாக்கள் கற்றுக்கொண்டு விட்டன. இன்றைக்கு புதிதாக கண்டறியும் பெரும்பாலும் மருந்துகள் ஏற்கெனவே இருக்கும் மருந்துகளை மாற்றம் செய்யப்பட்டே உருவாக்கப்பட்டவை. இவ்வாறு உருவாக்கப்படும் மருந்துகள் குறுகியகால தீர்வையே தருகின்றன. நீண்ட நாள்கள் பயன்தரும் வகையான மருந்துகள் கண்டறிய ஆய்வுகள் அதிகம் செய்யப்பட வேண்டும்.

“ஆன்டி-பயாடிக் எதிர்ப்பு என்பது உலகளாவிய மருத்துவ அவசரநிலை. இது நவீன மருத்துவத்தின் வளர்ச்சியை கடுமையாகப் பாதிக்கும். உடனடியாக இந்த எதிர்ப்புத்தன்மையை சமாளிக்கும் வகையிலான மருத்துகளைக் கண்டறிவது அவசியம். காசநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கு எதிரான புதிய மருந்துகளை உடனடியாக கண்டறிவது மிக அவசியமானது. ஒருவேளை நம்மால் கண்டறிய முடியாமல் போனால், சிறிய நோய்த்தொற்று கூட உயிரையே பாதிக்கக்கூடியதாக மாறும். சிறிய அறுவைசிகிச்சை கூட செய்ய பயம் உருவாகும்” என உலக சுகாதார நிறுவன இயக்குநர் மருத்துவர் டேட்ரோஸ் அதனோம் செய்தி வெளியிட்டுள்ளார். 

ஆன்டி-பயாடிக்

ஆன்டி-பயாடிக் எதிர்ப்புத்தன்மை உருவாகக் காரணங்கள்:

 1. தேவையில்லாத நேரங்களில் மருந்துகளைப் பயன்படுத்துதல்
 2. தேவைக்கும் அதிகமாக பயன்படுத்துதல்
 3. சிகிச்சை முழுமையாக எடுத்துக்கொள்ளாமல் பாதியில் விட்டுவிடுதல்
 4. அதிகமான நோய்கள் உருவாதல் (தனிமனித சுத்தம் இல்லாதது, சுற்றுசூழல் சீர்கேடு போன்றவற்றால்)
 5. தேவையான மருந்துகள் சரியாகக் கிடைக்காமல் இருத்தல்
 6. புதிய மருந்துகள் உருவாக்கும் ஆய்வுகள் குறைவாக நடைபெறுதல்

ஆன்டி-பயாடிக் எதிர்ப்புத்தன்மை குறைவாக மருத்துவர் மற்றும் நோயாளிகள் என அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.

ஆன்டி-பயாடிக் எதிர்ப்புத்தன்மை குறைக்கச் செய்ய வேண்டியது:

 1.  மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை பயன்படுத்த வேண்டும்
 2. மருந்துகளைப் பரிந்துரைத்த கால அளவுக்கு முழுமையாக எடுத்துக்கொள்ளவும், இடையிலேயே சரியானால் கூட.
 3. சிகிச்சையைப் பாதியில் நிறுத்தியப் பின்னர் தொடர்கிறேன் என மீதி பாதியை தொடர வேண்டாம், சிகிச்சையை மீண்டும் முதலில் இருந்தே தொடங்க வேண்டும்.
 4. உங்கள் வியாதிக்கு கொடுத்த மருந்தை மற்றவருக்கு கொடுக்க வேண்டாம்
 5.  தனிமனித சுத்தம், தடுப்பூசிகள், சரியாக கைகளை கழுவுதல் என நோய்த்தொற்று வராமல் பார்த்துக்கொண்டால் இது எதுவுமே தேவைப்படாது. 

“சரியான மருந்து, சரியான நபருக்கு, சரியான நோய்க்கு, சரியான காலத்தில், சரியான அளவில், சரியான முறைகளில்” என்ற விதியை மருத்துவர்கள் கையாண்டு மருந்துகளைத் தரவேண்டும். இதோடு மருந்துகளை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், தனிமனித சுத்தம் பற்றி கற்பித்து நோய்களைத் தடுக்கும் வகையிலும் மருத்துவர்கள் செயல்படுதல் வேண்டும். 

ஆன்டி-பயாடிக் எதிர்ப்புத்தன்மை கொண்ட நுண்ணுயிர்கள் (மருந்து எதிர்ப்புத்தன்மை கொண்ட காசநோய் உட்பட), கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் நபர்களை பலிகொள்வதாக உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. உலகில் உள்ள ஆன்டி-பயாடிக் மருந்துகள் எல்லாம் செயல்ரீதியில் தீர்ந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளது. ஆனால், நோய்கள் உருவாகாமல் வரும்முன் காத்தால், இவையெல்லாம் தேவையா என்ன?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close