Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாடுகளின் தேவலோகம் தேவலபூர்!

நாட்டு மாடுகளுக்காக செயல்படும் ‘கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா’ என்ற அமைப்பைத் தேடி, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தேவலபூருக்கு பயணமானேன். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் நகரிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது தேவலபூர். லட்சக்கணக்கில் விவசாயிகளின் தற்கொலை அரங்கேறிய, சபிக்கப்பட்ட பூமியான விதர்பா பகுதியில்தான் இருக்கிறது இந்த தேவலபூர்.

மலை, குன்று, மேடு, பள்ளம், பொட்டல்வெளி, அடர்ந்த காடு எனப் பல பகுதிகளையும் கடந்து இந்த ஊர் உள்ளது. சுமார் முன்னூறு, நானூறு வீடுகளுடன் கண்களில் படர்கிறது தேவலபூர். ஊரைக் கடந்து கொஞ்சத் தூரத்தில் ‘கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா’ என்ற இடம். செய்தி சேகரிப்பதற்காக நான்கு நாட்கள் அங்குதான் தங்கியிருந்தேன். இங்கு மாடுகளை, ‘மாடு’களாக பார்க்கவில்லை. சக மனிதர்களாக நடத்துகிறார்கள்.காலை எட்டுமணிக்கு, மாடுகள் மேய்ச்சலுக்கு கிளம்புகின்றன. மாடு மேய்க்க செல்பவர்கள் கையில் குச் சோ, அதட்டலோ இல்லை. மாடுகள் எதுவும் வழி தவறியோ, மீறியோ செல்லவில்லை. ஏதோ கட்டுப்பாட் டுக்கு, கட்டுப்பட்டவை போல நடந்து கொண்டிருந்தன. மாடு மேய்ப்பதற்கு, நானும் அவர்களுடன் இணைந்து கொண்டேன். மாடுகள், மேய்ச்சலில் கவனம் செலுத்த, மாடு மேய்க்க வந்த இளைஞர்கள், புல்லங்குழல் எடுத்து, மாறி, மாறி வாசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

மதிய உணவு சோள ரொட்டியும், வெல்லமும்தான். தேன் போல இனித்தது. மாலையில் மாடுகளை, திரும் பவும் கோசாலைக்கு திருப்பிக் கொண்டுவரும்போது, மேற்கில் வானம் இருட்ட தொடங்கிவிட்டது. ஒரு குளியல் போட்டுவிட்டு, அருகில் இருந்த கிருஷ்ணர் கோவிலில், மாடுகளை புகழ்ந்து பஜனை. சாப்பிடும் போது, ‘கோமாதா, எங்கள் குலமாதா...’ என்று மராத்தியில் பாடிவிட்டுத்தான் ரொட்டியை வாயில் வைக்க விடுகிறார்கள்.

அங்கிருந்த நான்கு நாட்களும், ஏதோ, புதுவிதமான இடத்திற்கு வந்துவிட்டது போல இருந்தது. சேட்டிலைட் டி.வி இல்லை. குறிப்பாக செல்போன் டவரே எடுக்காத, அந்த அத்துவான காட்டுப்பகுதி, வாழ்க்கையை ரசித்து, ருசித்து முழுமையாக வாழ்வதற்கு ஏற்ற இடம்தான்.22 ஏக்கரில் உள்ள இந்த மையத்தில் , ஏறத்தாழ 400 மாடுகள் உள்ளன. சாகியவால், சிந்து, தார்பார்க்கர் என்று இந்தியாவின் பலபாகங்களில் காணப்படும் பல்வேறு ரக நாட்டு மாடுகளும் இங்கு உள்ளன. ‘இனி பால் கறக்காது. இவற்றால் நமக்குப் பயன் இல்லை’ என்ற நிலையில் தான் அடிமாடுகள் என்று முத்திரை குத்தி, இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுகின்றன. அப்படிப்பட்ட மாடுகளைத்தான் மீட்டுப் பராமரிக்கிறார்கள்.

அந்த மாடுகளிடம் இருந்து கிடைக்கும் சாணம், மூத்திரம் போன்றவற்றையும்... அடிமாடுகளாக ஒதுக்கப்பட்ட பிறகும், வந்த இடத்திலிருக்கும் காளைகளோடு இணைந்ததால் கன்று ஈனும் பசுக்களிடமிருந்து கிடைக்கும் பாலையும் பயன்படுத்தி அர்க் உள்ளிட்ட ஆயுர்வேத மருத்துவப் பொருட்கள், பல்பொடி, சோப்பு, ஷாம்பு, வாசனைப் பவுடர் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்கள், பயிர்களுக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகள், பூச்சிவிரட்டிகள் என 36 விதமான பொருட்களை தயாரிக்கிறார்கள். இதற்காக தனியாக ஆராய்ச்சி மையமும், பயிற்சி மையமும் உள்ளன.

காலை மாடுகளை மேய்ப்பதும், இரவு உணவுக்கு பிறகு, தூக்கம் வரும் வரை பல்பொடி, சோப்பு தயாரிக்கும் பணி நடக்கிறது. யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. எல்லோரும் விரும்பியே, இன்முகத்துடன் செய்தார்கள். இந்த பொருட்களை உள்நாட்டில் விற்பனை செய்வதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள் என்பது ஆச்சர்யமாகத்தானே இருக்கிறது.

‘அர்க்’ என்பது, ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் ஒரு சாதனை மருந்தாக இவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பொருளாகும். இது அமெரிக்காவின் காப்புரிமை பெற்ற மருந்துப் பொருள். பசு மாட்டின் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த ‘அர்க்’, சர்க்கரை நோய் தொடங்கிப் புற்றுநோய் வரை முப்பதுக்கும் மேற்பட்ட நோய் களைக் குணப்படுத்துகிறது.

இந்த மருந்துப் பொருட்களுக்கு ‘இந்தியன் மெடிக்கல் கவுன்சில்’ சான்று வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இப்போது, பசு மாட்டின் மூலம் கிடைக்கும் மூலப் பொருட்களை வைத்து பல்பொடி, சோப்பு, ஷாம்பு, வாச னைப் பவுடர், மருந்துகள்... தயாரித்து, லட்சங்களில் வருமானம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்கள் அனைவருக்கும் தாய் வீடு என்றால், அது ‘கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா’ தான்.

மாடு என்றால், தமிழ் மொழியில் செல்வம் என்ற இன்னொரு பொருள் உள்ளது. அதன் முழு அர்த்தத்தை இந்த மாரத்திய மண்தான் தெளிவாக உணர்த்துகிறது.

மேலும் விவரங்களுக்கு : http://www.govigyan.com

-ஆறுச்சாமி

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ