Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புத்தகம் படிக்க பயணப்படி...கன்னியாகுமரியில் ஒரு ஆச்சர்ய நூலகர்!

மொபைல்போன், ஃபேஸ்புக், இன்டர்நெட், வாட்ஸ் அப் என்று இளைஞர்கள் ஏதோவொன்றில் தங்களை தொலைத்துவிட்டிருப்பதால் புத்தக வாசிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

வீட்டில் இருக்கும் நேரம் கூட டி.வி., செல்போன் என்று ஏதாவது ஒன்று நம்மை தொற்றிகொள்கிறது. இதனால் வாசிப்பதற்கான நேரம் என்பதே பெரும்பான்மையோருக்கு அருகி, நூலகங்களில் இருக்கும் புத்தகங்கள் தூங்கிக் கொண்டிருக்கின்றன.

இப்படி புத்தகங்கள் தூங்கிவிட கூடாது என்று மக்களிடம் குறைந்துவரும் வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்த, ஊக்கப்படுத்தி வருகிறார் கன்னியா குமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தை சேர்ந்த பிதலீஸ்.

வீட்டிலேயே நூலகம் ஒன்றை நடத்தி வருவதோடு, தன் நூலகத்திற்கு படிக்க வருபவர்களுக்கு பயணப்படி யும் வழங்கி ஆச்சர்யம் அளிக்கிறார் மனிதர்.

ஆசாரிபள்ளம், அன்னைதெரசா நகரில் அமைந்திருக்கிறது இவரது நூலகம். புத்தகங்களை அடுக்கியபடியே பேசுகிறார் பிதலீஸ். "பொறந்து வளர்ந்தது எல்லாம் இதே பகுதிதான். பி.எஸ்.ஸி வரை படிச்சிருக்கேன். டூடோரியலில் பயிற்றுநரா வேலை பாத்தேன். அப்புறம் பேக்கரி கடை, கணக்குப்பிள்ளை, இன்சூரன்ஸ் ஏஜெண்ட்னு பல வேலைகள பாத்தேன். சின்ன வயதிலிருந்தே எனக்கு வாசிப்பு பழக்கம்  உண்டு. கீழே சின்ன பேப்பர் கிடந்தாலும் அதுல என்ன செய்தி இருக்குன்னு வரி விடாமப் படிப்பேன்.

இந்த ஆர்வம் மூலமா கன்னியாகுமரி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கத்தின் நட்பு கிடைத்தது. நிறைய வாசிக்க ஆரம்பிச்சேன். அந்த வாசிப்புதான் என்னை எம்.ஏ இதழியல் படிக்கவும், கதை, கவிதை எழுதவும் தூண்டியது. கன்னியாகுமரி மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்ட உறுப்பினரானதுமே ’வீட்டுலேயே ஒரு நூலகம் அமைச்சா என்ன’ன்னு எனக்குத் தோணுச்சு. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குப் போய் புத்தகங்களைச் சேகரிக்க ஆரம்பிச்சேன். எழுத்தாளர் சுந்தர ராமசாமிதான் முதல் ஆளா 17 புத்தகங்கள் கொடுத்தார். திறப்பு விழாவுக்கும் அவரையே அழைத்தேன்.

கல்கத்தாவிலுள்ள ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளை மூலமா கிடைச்ச பணத்துல புத்தகம் அடுக்கி வைக்குற அலமாரிகளை வாங்கினேன். கதை, கவிதை, நாவல்கள், இலக்கியம், வரலாறுனு இப்போ மூவாயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் நூலகத்துல இருக்கு. தினசரி செய்திதாள்களும், மாதம் 50 சிற்றிதழ்களும் நூலகத்துக்கு வருது. 2008ல் 'ஒளிவெள்ளம் பதிப்பகம்' தொடங்கி அதன்மூலமா புத்தகங்களும் வெளியிட்டு வர்றேன்.

என் மனைவி மேரி ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. வாசகர்கள் அனுப்பும் படைப்புகளை எடிட் செய்வது, கவிதைகள் தேர்வு செய்றதுன்னு எனக்கு உதவியா இருப்பாங்க. நுாலகத்தை தேடி தொலைதுாரங்களிலி ருந்து வர்றவங்க ஏமாந்திடக்கூடாதுன்னு நான் வெளியூருக்கு போனாலும் மனைவி நூலகத்தைப் பொறுப்பா பார்த்துக்குவாங்க. நூலகத்துக்கு விடுமுறையே கிடையாது.

தியேட்டர், ஷாப்பிங் மால், சூப்பர் மார்கெட், பீச், பார்க்குகளுக்கு தங்கள் குழந்தைகளை கூட்டிக்கிட்டு குடும் பத்தோடப் போறாங்க. ஆனா, யாருமே குழந்தைகளைக் கூட்டிட்டு குடும்பத்தோட நூலகத்துக்கு வர மாட்டேங்கறாங்க. வரவும் விரும்பமாட்டேங்கறாங்க. அதனாலதான் வாசிப்பு பழக்கம் என்பதே மாணவர் களுக்கு இல்லாமல் போயிடுச்சு. அரசு நூலகத்தைப் போலவே இந்த நூலகத்துக்கும் ஆண்டு சந்தா பத்து ரூபாய்தான். மூன்று புத்தகங்கள் எடுத்துச் செல்லலாம்.

இப்படியிருந்தும் நூலகத்துக்கு வாசிக்க வர்றவங்க எண்ணிக்கை குறைவாத்தான் இருந்துச்சு.அதுக்கு என்ன செய்யலான்னு யோசிச்சேன். என்னோட சேமிப்பு பணம், மனைவியோட பென்ஷன் பணத்துல ஒரு பகுதி யை, நூலகம் வருபவர்களுக்கு பயணச் செலவாக கொடுக்கலாம்ன்னு முடிவு செஞ்சேன்.

ஜனவரி மாசத்துல இருந்து இதை செயல்படுத்திட்டு வர்றேன். நூலகத்துக்கு வருபவர்கள் பஸ் டிக்கெட்டை காட்டி பயணத் தொகையை வாங்கிச் செல்லலாம். புத்தகத்தையும் படித்துவிட்டுச் செல்லலாம்" என்று சொல்கிற பிதலீஸ், 2002 முதல் ‘ஒளி வெள்ளம்’ என்னும் சிற்றிதழையும் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பார்கள்...எதிர்கால தலைமுறைக்கு எழுத்து ஆர்வத்தை வளர் க்கும் பிதலீஸ் அந்த பட்டியலில் வைக்கத் தகுந்த மனிதர்தான்.

- இ.கார்த்திகேயன்

படங்கள்: ரா.ராம்குமார்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close