Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மடோனா: கேலியும்...பரிவும்!

பிரபல பாப் பாடகி மடோனா விருது நிகழ்ச்சியின் போது மேடையில் சறுக்கி தவறி விழுந்த சம்பவம், சமூக வலைத்தளங்களின் பயன்பாடு வரமா? சாபமா?எனும் கேள்வியை எழுப்பியுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த புகழ் பெற்ற பாப் பாடகியான மடோனா நேற்று இரவு 'பிரிட் மியூசிக் அவார்ட்ஸ்'  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது புதிய பாடலான ’லிவிங் பார் லவ்’  -ஐ பாடி ஆடினார். மடோனா பாணியில் மிகவும் புதுமையான முறையில் இந்த பாடலுக்கான காட்சி அமைப்பு இருந்தது. ஆனால் எதிர்பாராத வகையில் மடோனா இந்த பாடலுக்கு நடுவே தவறி விழுந்தார்.

காட்சி அமைப்புபடி அவரது ஆடையில் பின்பக்கம் இருந்த கேப் எனும் உடைப்பகுதியை, சக நடனக்கலைஞர் ஒருவர் இழுத்தபோது அது அவரிடம் இருந்து பிரியாமல் ஒட்டிக்கொண்டிருந்ததால் அவர் படிகளில் தடுக்கி  விழ நேர்ந்தது. ஆனால், நிலைமையை சமாளித்துக்கொண்டு மடோனா மீண்டும் எழுந்து ஆட்டத்தை தொடர்ந்தார். நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பானாலும் மடோனா தவறி விழுந்தது நிகழ்ச்சி முடிந்த பிறகே தெரிய வந்தது.

இப்படி இடறி விழுந்ததும் கூட,  நிகழ்ச்சியின் காட்சி அமைப்பில் திட்டமிட்டிருக்கலாம் என பலரும் நினைத்து விட்டனர். அதற்கேற்ப பாடல் வரிகளும், “நான் கவனத்தை இழந்து, உன கரங்களில் விழுந்தேன்“ என்றும், இப்போது எல்லாம் முடிந்து மீண்டும் தொடர்கிறேன்” என்பது போல தற்செயலாக அமைந்திருந்தன.

ஆனால் நிகழ்ச்சியின் முடிவில் அவர் தவறி விழுந்ததும், அதன் பின்னர் வலியை பொருட்படுத்தாமல் ஆடி முடித்ததும் தெரிய வந்தது.  எதிர்பார்க்க கூடியது போலவே ஊடகங்களில் மேடையில் பாடகி மடோனா தவறி விழுந்தது பரபரப்பான செய்தியானது.

இதனிடையே மடோனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எதுவும் என்னை தடுக்க முடியாது. அன்பு தான் என்னை உயர்த்தியது!'  என குறிப்பிட்டு தான் நலமாக இருப்பதாக ரசிகர்களுக்கு தகவல் அளித்திருந்தார்.

இணைய யுகத்தில் எதிர்பார்க்க கூடியது போல் டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் இந்த செய்தி உடனடியாக விவாத பொருளானது. மடோனா செய்தியின் நாயகியாகியிற்றே. அவர் எது செய்தாலும் பரபரப்பாக பேசப்படும் ,விவாதிக்கப்படும். வாய்ப்பு கிடைத்தால் கேலியும் செய்யப்படும். அப்படி இருக்க மடோனா தடுக்கி விழுந்ததை பார்த்தால் சும்ம இருந்துவிடுவார்களா என்ன?டிவிட்டரில் பலரும் அவரை வறுத்தெடுத்து விட்டனர்.

#madonna ,  #capegate ஆகிய  ஹாஷ்டேக் மூலம் இந்த செய்தியை பகிர்ந்து கொண்டு கிண்டலாக கருத்து தெரிவித்தனர். கிரீம் ஈஸ்டன் என்பவர், முக்கிய செய்தி; 56 வயது பெண் பாடும் போது தவறி விழுந்தார்” என தெரிவித்து அதனுடன் இந்த ஹாஷ்டேகை இணைத்திருந்தார். மடோனா விழும் போது நன்றாகவே விழுகிறார் என்றும் ஒருவர் கிண்டல் செய்திருந்தார். இன்னொருவர், அடுத்ததாக ஆறு மாதம் கழித்து பாடகி லேடி காகா இது போல விழுவார் என கூறியிருந்தார். இன்னொருவரோ இந்த சறுக்கலுக்கு லேடி காகா காரணமா என்று கிண்டலடித்திருந்தார்.

இன்னும் பலவிதங்களில் கேலியும் கிண்டலும் தொடர்ந்தன. இந்த குறும்(பு)பதிவுகளை படிக்கும்போது , ஒரு பாடகிக்கு எதிர்பாராமல் நேர்ந்த கதையை இப்படி கைத்தட்டி கேலி செய்வது சரி தானா எனும் சங்கடமும் கேள்வியும் எழாமல் இருக்காது. பிரபலங்களின் செல்வாக்கு பற்றி எல்லாம் சமூக ஊடகங்களில் விமர்சிக்கும் பழக்கும் இருக்கிறது என்றாலும் கூட ஒருவர் தவறி விழும்போது மனித உணர்வு கொள்ளாமல் கேலி செய்வது முறையா என்ற கேள்வியும் எழுகிறது.

எதையுமே உடனடியாக சமூக ஊடககங்களில் பகிர்ந்து கொண்டுவிடும் பழக்கத்தின் விளைவு இதுவா என்றும் விவாதிக்க தோன்றுகிறது.

ஆனால் நல்லவேளையாக எல்லோருமே இப்படி கேலி செய்யவில்லை. டிவிட்டர் பயனாளிகள் பலர் இந்த நிகழ்வை பரிவுடன் எதிர்கொண்டு கருத்து தெரிவித்தனர். அதைவிட முக்கியமாக அவர்கள், விபத்தை மீறி மடோனா தொடர்ந்து நடனமாடி முடித்த செயலை மிகவும் பாராட்டியிருந்தனர்.

லிசா என்பவர், “ மடோனா ஒரு முழுமையான தொழில்முறை கலைஞராக நடந்து கொண்டு வியக்க வைத்தார் “என தனது குறும்பதிவில் கூறியிருந்தார். மேத்யூ என்பவர் “ ஒருவர் தவறி விழுந்தது எப்படி சிரிப்புக்குள்ளாக முடியும், தொடர்ந்து ஆடிய, அவர் ஒரு உண்மையான தொழில்முறை கலைஞர்” என் கூறியிருந்தார். ஸ்கேர்லெட் என்பவர், நான் சொல்கிறேன் கேளுங்கள் , பல பாடகிகள் இப்படி விழுந்த பின் தொடர்ந்து பாடியிருக்க மாட்டார்கள், மனம் தளராத மடோனாவுக்கு பாராட்டுகள் என கூறியிருந்தார்.

மோனிதா ராஜ்பால் என்பவர், “தலைப்பு செய்தி ஏன் மடோனா விழுந்தார் என இருக்கிறது. அவர் விழுந்தார். எழுந்து ஆடினார் அல்லவா? இன்னும் அவர் மடோனா தான்“ என்று கூறியிருந்தார். தாமஸ் என்பவர், “மடோனா தி கிரேட், இப்போது தான் பார்த்தேன். தொடர்ந்து ஆடினார். மற்றவர்கள் பற்றி என்ன கவலை” என கூறியிருந்தார்.

வலியை பொறுத்துக்கொண்டு மடோனா தொடர்ந்து நடனமாடியதை பாராட்டும் வகையிலான இத்தகைய குறும்பதிவுகளும் ஆயிரக்கணக்கில் வெளியாகி, சமூக ஊடகத்தின் சரியான முகத்திற்கு சான்றாக அமைந்துள்ளன.

-சைபர்சிம்மன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ