Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பறவை மீது சவாரி செய்யும் விலங்கு: வாய் பிளக்க வைத்த வைரல் படம்!

ந்த புகைப்படத்தை பார்த்தாலே இது உண்மைதானா என்று தானாக கேட்கத்தோன்றும். இது சாத்தியம் தானா என்ற சந்தேகமும் உண்டாகும். இந்த வியப்பும், நம்ப முடியாத உணர்வும்தான் குறிப்பிட்ட அந்த புகைப்படத்தை இணையம் முழுவதும் உலா வர வைத்து, விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மரங்கொத்தி பறவை மீது வீசல் எனும் பாலூட்டி வகையிலான விலங்கு சவாரி செய்யும் வகையிலான புகைப்படம் தான் அது!.

 மரங்கொத்தி பறவையிடம் ஏதோ லிப்ட் கேட்டு ஏறிக்கொண்டது போல வீசல் அதன் முதுகு மீது இறுக பற்றியபடி ஒட்டிக்கொண்டிருப்பதும் அந்த கணத்தை சுமந்து கொண்டு அந்த பறவை பறப்பதையும் பார்க்கும் போது நம்ப முடியாத ஆச்சர்யம் ஏற்படத்தான் செய்யும்.


இயற்கையில் நிகழந்த அற்புதம் என சொல்லக்கூடிய இந்த காட்சியை பிரிட்டனைச்சேர்ந்த மார்டின் லி மே எனும் இயற்கை ஆர்வலர் தற்செயலாக கிளிக் செய்திருக்கிறார்.

மார்டின் தனது மனைவியுடன் லண்டன் அருகே உள்ள விலங்கியல் பூங்காவில் உலாவிக்கொண்டிருந்தார். பைனாகுலரும் கையுமாக இயற்கை ரசித்துக்கொண்டிருந்தவர், திடீரென மரங்கொத்திப்பறவை மற்றும் வீசல் விலங்கு சண்டையிட்டு கொண்டிருப்பதை பார்த்தார். அவர்கள் என்ன நடக்கிறது என உணர்வதற்கு முன் அந்த அற்புதம் அரங்கேறியது. மரங்கொத்தி பறவை விருட்டென்று பறக்கத்துவங்க, அதன் முதுகின் மீது பார்த்தால் வீசல் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

சற்றும் எதிர்பாராமல் காமிராவில் சிக்கி கொள்ளும் அபூர்வ காட்சிக்கு உதாரணமாக மார்டின் இந்த காட்சியை கிளிக் செய்தார். கிட்டத்தட்ட வாழ்விலே ஒரு முறை புகைப்படம் என்று தான் அதை சொல்ல வேண்டும். மார்டின் இந்த காட்சியின் அற்புதத்தை அதை கிளிக் செய்த போது உணரவில்லை. வீட்டுக்கு சென்று அந்த படங்களை டவுன்லோடு செய்து பார்த்த போதுதான் நடு வானில் மரங்கொத்தி மீது வீசல் பறக்கும் காட்சியை பார்த்து பிரமித்திருக்கிறார். உடனே தனது நண்பரான ஜேசன் வார்டு எனும் வனவிலங்கு புகைப்பட கலைஞருக்கு இந்த படத்தை அனுப்பி வைத்திருக்கிறார்.

மரங்கொத்தியும் ,வீசலும் சண்டை போட்டுக்கொண்டதாகவும் , வீசல் தாக்குதலில் இருந்து மரங்கொத்தி எப்படியோ தப்பிச்சென்றதாகவும் அவர் இந்த காட்சி பற்றி விளக்கம் அளித்திருக்கிறார்.

இந்த அரிய காட்சியை பார்த்து அசந்துப்போன ஜேசன், அதை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார். அவ்வளவு தான் படத்தை பார்த்து வியந்து போன பலரும் இதை உடனே ரீடிவீட் செய்தனர். இப்படி 7,000 முறைக்கு மேல் இந்த படம் ரிடிவீட் செய்யப்பட்டது. அப்படியே இந்த புகைப்படம் தொடர்பாக #weaselpecker எனும் ஹாஷ்டேகும் உருவாக்கப்பட்டு மேலும் பலரால் பகிரப்பட்டது.

இந்த படம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு, இது உண்மை தானா?இல்லை போட்டோஷாப் மாயாஜாலமா எனும் சந்தேகத்தையும் எழுப்பியது. இதனிடையே டிவிட்டரில் இந்த படம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது பற்றி மீடியாக்களிலும் செய்தி வெளியானது.

இத்தகைய காட்சி சாத்தியம் தானா?என்று வனவிலங்கு வல்லுனர்களும் விளக்கம் கேட்கப்பட்டது. வல்லுனர்களும் இந்த புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்தாலும், இது அரிதினும் அரிதான காட்சி ,ஆனால் உண்மையானதுதான் என சான்றிதழ் அளித்தனர்.

வீசல் விலங்குகள் தனது எடையை விட அதிக எடை கொண்ட விலங்குகளை இறையாக்கி கொள்ள முயற்சிக்கும் குணம் கொண்டது என்றும், மரங்கொத்தியை அது உணவாக்கி கொள்ள முயன்று தாக்கியிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

இதனிடையே போட்டோஷாப் வல்லுனர்களும் இந்த புகைப்படத்தை ஆய்வு செய்துவிட்டு இதன் பின்னே ஒட்டுவேலை இல்லை என்று கூறியிருக்கின்றனர்.

இதே காட்சியின் ரிசல்யூஷன் குறைந்த படங்களும் தன்னிடம் இருக்கிறது அதை பார்த்து கொள்ளலாம் என மார்டினும் தன் பங்கிற்கு கூறியிருக்கிறார். அமெச்சூர் புகைப்பட கலைஞரான அவர் இந்த புகைப்படம் மூலம் பலராலும் பேசப்படும் நபராகி இருக்கிறார்.

ஆனால் என்ன தான் வல்லுனர்களும் ,வனவிலங்கு நிபுணர்களும் சான்றிதழ் அளித்தாலும் இணையவாசிகளுக்கு இந்த படம் மீது கொஞ்சம் சந்தேகம் இருக்கிறது. அல்லது லேசான பொறாமை என்றும் சொல்லலாம். விளைவு இந்த படத்தை நையாண்டி செய்யும் விதமாக மரங்கொத்தி பறவை மீது பல பிரபலங்கள் சவாரி செய்வது போன்ற படங்களை உருவாக்கி, அதே ஹாஷ்டேகுடன் உலாவ விட்டு வருகின்றனர். இந்த படங்கள் பார்த்து ரசிக்கும் படி இருப்பதோடு , ஒரிஜினல் படம் மீது மேலும் கவனத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன.

- சைபர்சிம்மன்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ