Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முறம்...திருகு அரவை... உலக்கை... பாரம்பரியத்தை அசத்திய மாணவிகள்!

தூத்துக்குடி: உலக மகளிர் தினத்தையொட்டி தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக நடத்தப்பட்ட போட்டிகளில் கல்லூரி மாணவிகள் அசத்தினர்.
 

மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கல்லூரிகளில் பெண்களுக்கான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள்  நடத்துவது வழக்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலுள்ள புனித ஓம் கல்வியியல் கல்லூரியில் ரோட்டரி சங்கம் மற்றும் பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக போட்டிகள் நடத்தப்பட்டன.

தட்டாங்கல் விளையாடுதல், முறத்தில் கம்பு, உளுந்துகளைப் புடைத்து கற்களை நீக்குதல், திருகு அரவையில் பாசிப்பயிறு திரிப்பது, உரலில் உளுந்தை உலக்கையால் குத்தி மாவாக்குதல், இடுப்பிலும் தலையிலும் மண் பானையில் தண்ணீர் சுமத்தல், அகல் விளக்கேற்றி அணையாமல் வேகமாக நடந்து வருதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் எப்படி புடைப்பது, திரிப்பது, உலக்கையில் குத்துவது என்று பயிற்சி அளித்தனர். அனைத்து மாணவிகளும் ஏதாவது ஒரு போட்டியில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டுமென்பது கல்லூரியின் விதிமுறை.
 

மிக்ஸி, கிரைண்டர் போன்ற மின்சாதனங்களின் வருகையால் உரல், திருகு அரவை ஆகியவை ஓரமாக வீடுகளில் ஒதுக்கப்பட்டுவிட்டது. முந்தைய நாளே பக்கத்து கிராமங்களிலிருந்து உரல், திருகு அரவை ஆகியவை கல்லூரியில் வைக்கப்பட்டுவிட்டது.

உரலில் அரைகிலோ உளுந்து வீதம் மொத்தம் 8 உரல்களிலும், திருகு அரவைக்கு கால் கிலோ பாசிப்பயிறு வீதம் 8 திருகு அரவைகளிலும் திரிக்க வேண்டும்.

"எங்க வீடுகளில் தண்ணீர் குடம், பானை மூடி வைக்கவும், வத்தல், வடகம் காய வைக்கவும்தான் முறத்தை பயன்படுத்துறோம். பாட்டிகள் முறத்துல அரிசி, கோதுமையைப் புடைச்சுப் பாத்துருக்கோம். ஆனா, நாங்க புடைச்சதில்லை. உலக்கையில குத்தி உளுந்தை மாவாக்குற போட்டி ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. உலக்கையைத் தூக்க கூட முடியலை. ஆனா, அந்த காலங்களில் உரலில் தானியங்களைப் போட்டு உலக்கையைத் தூக்கி குத்தி எப்படித்தான் இடிச்சாங்களோ தெரியலை. திருகு அரவை அரைக்குறதும் சாதாரண விசயமல்ல. திருகு அரவையில் போட்ட பயிரை முதலில் கொஞ்ச கொஞ்சமா உள்ள போட்டு லேசா சுத்தி சுத்தி பயிறு உடைய ஆரம்பிச்சதும் வேகத்தைக் கூட்டணும்.
 

வேகம் கூடக்கூட உடனே மாவு கிடைச்சிடுது. எல்லாத்தையும் விட மண்பானையை தலையிலயும், இடுப்புலயும் தூக்கிட்டு நடந்து வர்ற போட்டிதான் ஹைலைட். மண் பானை நிறைய தண்ணியை வேற ஊத்தி வச்சு தலையிலயும், இடுப்புலயும் தூக்கிட்டு ரெண்டு அடி கூட எடுத்து வைக்க முடியலை. அந்தக்காலத்துல இப்படித்தான் குளம், கிணறு, ஆறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து வீட்டுக்குக் கொண்டுவந்திருப்பாங்க பெண்கள். இந்தப் போட்டிகள் எல்லாமே நம்மளோடப் பாரம்பரியம் சார்ந்தது. எல்லாத்துக்கும் மேல உடம்புக்கு நல்ல எக்ஸர்ஸைஸ்.

இந்த வருச மகளிர் தினப் போட்டிகள் வித்தியாசமா இருக்கும்னு ஒரு வாரத்துக்கு முன்பே கல்லூரியில அறிவிப்பு சொன்னாங்க. ஆனா இப்படி பாரம்பரியம் சார்ந்ததா இருக்கும்னு நினைக்கல, ரொம்ப சந்தோசமா இருக்கு. போட்டியா இருந்தாக்கூட அந்தகாலத்துப் பெண்களோட உழைப்பையும், வலியையும் புரிஞ்சுக்கிட்டோம்’’ என்றனர் ஆசிரியர் பயிற்சி மாணவிகள்.

மகளிர் தின விழா என்று சொல்லி ஆட்டம், பாட்டத்தை சிறப்பிக்கும் விதமாக பல போட்டிகள் நடைபெறுவதற்கு மத்தியில் பாரம்பரியத்தை பறைசாற்றும் இவ்வகையான போட்டிகள் நடத்தியது சிறப்பானது.

-இ.கார்த்திகேயன் 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ