Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கைதட்டல் வாங்கிய 82 வயது பாட்டியின் இணைய பேட்டி!

பிரபலங்களும் நட்சத்திரங்களும் தான் பேட்டி கொடுத்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்ன? ஸ்வீடன் பாட்டி ஒருவர் தனது இணைய அனுபவம் பற்றி பேட்டிக்கொடுத்து இணைய உலகில் கைத்தட்டல்களை வாங்கியிருக்கிறார்.

யார் இந்த பாட்டி? பேட்டி காணப்படும் அளவுக்கு அவர் என்ன செய்துவிட்டார்? என்றெல்லாம் கேட்கலாம். பாட்டியின் பெயர் கெர்ஸ்டின் வால்ஜர்ஸ். பாட்டியம்மாவிற்கு 82 வயதாகிறது. கடந்த தலைமுறைக்கும் முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர் என்று வைத்துக்கொள்ளுங்களேன். இதுவரை இணயம் என்றால் அதிகம் அறிந்திராத பாட்டி சமீத்தில் முதல் முறையாக இணையத்தை பயன்படுத்த கற்றுக்கொண்டு சைபர்வெளியில் உலா வந்திருக்கிறார். தனது முதல் இணைய அனுபவத்தை தான் பாட்டி ரெட்டிட் இணையதளம் மூலம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

ரெட்டிட் தளத்தை நீங்கள் அறிந்திருக்கலாம். இணையத்தின் முகப்பு பக்கம் என்று வர்ணிக்கப்படும் தளம். இணையத்தை ஒரு உலகமாக கொண்டால் அதன் மிகப்பெரிய ஜனநாயக தேசம் என்று ரெட்டிட்டை கொண்டாடலாம். அந்த அளவுக்கு மாபெரும் இணைய சமூகமாக விளங்கும் தளம் அது. கருத்து பகிர்வு, விவாதம, செய்திகளை சுட்டிக்காட்டுதல் என எப்போதும் களை கட்டும் ரெட்டிட்டின் முக்கிய அம்சம் அதன் கேள்வி பதில் பகுதி.

இதற்கு ஏ.எம்.ஏ என்று பெயர். அதாவது எதையும் கேட்கலாம் என்று பொருள். பொதுவாக பிரபரலங்களை இப்படி ரெட்டிட் சமூகத்திற்கு அழைத்து கேள்வி கேட்பார்கள். ரெட்டிட் சமூக உறுப்பினர்கள் கேள்வி கேட்க, பேட்டி அளிப்பவர் பதில் அளிக்க, இணைய அரட்டை பாணியில் அமைந்திருக்கும் இந்த நிகழ்வு மிகவும் பிரபலமானது.

இந்த நிகழ்வுக்காக தான், சமீபத்தில் கெர்ஸ்டின் பாட்டி அழைக்கப்பட்டிருந்தார். இந்த தலைமுறை இளைஞர்களும், புதிதாக பிறக்கும் சுட்டிகளும் இணைய வெளியில் புழங்குவதில் கில்லாடிகளாக இருப்பதை விட்டுவிடுங்கள். கடந்த தலைமுறையை சேர்ந்த பலரும் இன்னமும் இணையம் பக்கம் வராமல் இருக்கின்றனர் அல்லவா? இப்படி இணைய அனுபவம் இல்லாத பெரியவர்வர்களுக்கு இணையம் எனும் அற்புத்ததை கற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன் மைநியூஸ்டெஸ்நவ் எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலம் தான், கடந்த வாரம் வரை இணைய பரிட்சயம் இல்லாதவராக விளங்கிய 82 வயதான பாட்டி கெர்ஸ்டின் முதல் முறையாக இணையத்தை பயன்படுத்திப்பார்த்திருக்கிறார்.

இந்த தகுதியுடன் தான் அவர் ரெட்டிட் கேள்வி, பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இணைய அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த கேள்வி, பதில் நிகழ்ச்சியின் போது பாட்டி யூடியூப், விக்கிபீடியா, டிண்டெர் என எல்லாவற்றை பற்றியும் பேசியிருக்கிறார். கூகுள்? அது இல்லாமாலா? பாட்டி இணையம் எனும் புதிய உலகில் தான் சுவாரஸ்யமாக கருதும் விஷயமாக கூகுள் தேடல் வசதியை குறிப்பிட்டிருக்கிறார். கூகுளில் முதலில் கலை பற்றி தேடியதாகவும் கூறியிருக்கிறார். இணையத்தை பயன்படுத்துவதை வெறும் புதுமையாக கருதவில்லை என்றும், தொடர்ந்து ஆர்வத்துடன் பயன்படுத்த இருப்பதாகவும் பாட்டி கூறியிருக்கிறார்.

தனது இணைய அனுபவம் சுவாரஸ்யமாக இருந்ததாகவும் கூகிளை பயன்படுத்த கற்றது மூலம் தான் இந்த பயணம் துவங்கியதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இணையத்தில் மோசமான விஷயங்களை எதிர்கொண்டீர்களா? என கேட்கப்பட்ட போது, எதுவும் இல்லை என பெருந்தன்மையாக கூறியவர், தான் பார்த்து ரசித்த யூடியூப் வீடியோ பற்றியும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த பேட்டியின் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், பெர்த்தல் நாஸ்ட்ராம் எனும் முதியவர் வழிகாட்டியாக இருந்து பாட்டிக்கு உதவியது தான். நாஸ்ட்ராமுக்கு 93 வயதாகிறதாம். மனிதர் ஸ்வீடனில் இணையம் பற்றி கற்றுத்தேர்ந்த பெரியவராக கருதப்படுகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

82 வயதில் ஒருவர் இணைய அனுபவம் பெறுபதும், அவரது ஆர்வத்தை அங்கீகரித்து இணைய சமூகத்தில் கவுரப்படுத்துவம் நல்ல விஷய்ம் தான் இல்லையா? இந்த நிகழ்வு மேலும் பல பாட்டிகளுக்கும், தாத்தாகளுக்கும் இணையம் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் இல்லையா?

ஏன் நீங்களும் கூட உங்கள் தாத்தாவுக்கோ, பாட்டிக்கோ அல்லது கிராமத்து பெரியவருக்கு இணைய உலகை அறிமுகம் செய்து வைக்கலாம்.

-சைபர்சிம்மன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ