Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண் போலீஸ் விவகாரமும்... வாட்ஸ் அப் வதந்திகளும்!

வாட்ஸ் அப் வசதி வந்தபிறகு உடனுக்குடன் சமீபத்திய தகவல்களை பரிமாறிக் கொள்ள முடிகிறது. இது நல்ல விஷயம் தான். ஆனால், இந்த வாட்ஸ் அப்பில் சமீபகாலமாக தவறான தகவல்களும் அதிகளவில் இடம் பெறுவதை பார்க்க முடிகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் இது!

சில தினங்களுக்கு முன்பு வடசென்னையில் உள்ள ஒரு உதவி கமிஷனர், சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலரிடம் கிளுகிளுப்பாக பேசிய ஆடியோ, வாட்ஸ் அப்பில் வேகமாக பரவியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர் சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். பெண் காவலரும் வேறுப்பணியிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சிக்கிய உதவி கமிஷனர் யார் என்பது தெரிந்து விட்டது.

ஆனால், பெண் காவலர் குறித்த தகவல்கள் சரிவர தெரியவில்லை. அவருக்குப் பல பெயர்களை விட்டனர் வாட்ஸ் அப் பிரியர்கள். அவரது உண்மையான பெயருடன் கூடுதலாக பல பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் அவரைப்பற்றி தினந்தோறும் புதுப்புதுதகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இப்போது இதுதான் அந்த பெண் காவலர் என்று வாட்ஸ் அப்பில் சிலர் அழகான ஒரு பெண்ணின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளனர். அந்தப்படத்தை பார்த்துக் கொண்டு இருக்கும்போதே, போலீஸ் யூனிபார்மில் இன்னொரு பெண் காவலரின் படம் பதிவு செய்யப்படுகிறது. அடுத்து பச்சை நிற சேலையில், வசீகர முகத்தோற்றத்தில் மற்றொரு பெண்ணின் புகைப்படம் வாட்ஸ் அப்பில் வருகிறது.

இவ்வாறு வாட்ஸ்அப்பில் பெண் காவலர் என்று இதுவரை 5க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. உண்மையிலே இந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட பெண் காவலர் இல்லை என்று விவரம் தெரிந்த காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாட்ஸ் அப்பில் பெண் காவலர் என்று பதிவு செய்யப்பட்ட ஒருவர் பெண் பத்திரிகையாளராம். முதலில் தகவலை பரிமாற வேண்டும் என்ற ஆவலில் தவறானதை பதிவு செய்யக்கூடாது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்களை வெளியிடுவதற்கு சட்டத்திலும் இடம் இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண் காவலர் தரப்பில் புகார் கொடுத்தால் பதிவு செய்யப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

இதையடுத்து வாட்ஸ் அப்பில் இன்னொரு காமெடியும் அரங்கேறுகிறது. வாட்ஸ் அப் குரூபில் இதுதான் அந்த  பெண் காவலர் என்று ஒரு புகைப்படத்தை பதிவு செய்தவுடன் இது அவர் அல்ல என்று அதே குருப் பில் உள்ள இன்னொருவர் பதிலளிப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. ஏன் இந்த விளையாட்டு? பெண் காவலர் விவகாரத்தில் வன்மத்தை பிரதிபலிப்பதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அதே நேரத்தில் இந்த பெண் காவலரைப் போன்று உயரதிகாரிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.

உண்மையான பெண் காவலரின் புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று பெண்ணின் தரப்பினரும், சில காவல்துறை உயரதிகாரிகளும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

-எஸ். மகேஷ்
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close