Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பெற்றோர் இருக்கும்போதே சாதனை செய்யுங்கள்!'

சோதனைகளை சாதனைகளாக்கி புது சகாப்தம் படைக்கத் துடிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வழிகாட்டியாய், தோள் கொடுக்கும் தோழனாய் அமைந்தது, கிண்டி பொறியியல் கல்லூரியின் ரோட்டராக்டு சங்கம் நடத்திய "கான்கிளேவ்"(conclave) நிகழ்வு....

கான்கிளேவ்- ரகசிய கூட்டம்: பல சாதனையாளர்கள் தங்களது சாதனை ரகசியங்களை  நம்முடன் பகிர்ந்து கொண்ட கூட்டமாக  இது இருந்தது. பொதுவாக மாணவர்களுக்கு கவலை அதிகம்.. அதுவும் பொறியியல் மாணவர்களுக்கு சொல்லவே தேவையில்லை... படிப்பு, படிப்பு என சுற்றிக் கொண்டும், என்ன வேலை, எப்படிக் கிடைக்கும் என உள்ளூர நடுங்கிக் கொண்டும் இருப்பவர்களுக்கு, தைரியமும், நம்பிக்கையும் ஊட்டும் வகையில் நிகழ்த்தப்பட்ட அந்த அழகிய நிகழ்வினை ஒரு பொன்மாலைப் பொழுதில் காணச் சென்றோம்..உனக்குள்ளே போராடு:  முதலாவதாக மேடையில் தோன்றியவர் சித்தார்த் ஜெயக்குமார். இவரா பேசப் போகிறார்/ என அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்திருக்க ,அழகான ஆங்கில உச்சரிப்புடன் தன் உரையைத் தொடங்கினார்.. அப்படி என்ன சாதனை அவர் புரிந்தார் என்கிறீர்களா? அவர் உள்ளத்தால் குறையில்லை என்றாலும் உடலளவில் சிறுகுறை...

'செரிப்ரல் பால்சி'(cerebral palsy) எனும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்...செரிப்ரல் பால்சி என்பது மூளைத் தொடர்பான நோய்... உடல் தசைகளின் செயல்பாட்டை மூளையினால் கட்டுப்படுத்த இயலாது. கட்டுப்பாட்டை மீறி தசைகள் செயல்படும். இக்குறைபாடு உள்ளவர்களுக்கு இயல்பாக உள்ளவர்களை விட அதிகமாக வியர்வை சுரக்கும்... எனினும் தனக்கு குறை உள்ளது என பிறர் நினைப்பதை விரும்பாதவர் சித்தார்த்....

வழக்கமாக இன்றைய குழந்தைகள் மூன்றரை வயதில் தன் பள்ளிக்கல்வியை தொடங்குகின்றனர்.ஆனால் சித்தார்த்தோ தன்னுடைய ஒன்பது வயதில்தான் பள்ளிக்கூடத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.. டைப் ரைட்ட்ரில் ஒற்றை விரலால் டைப் செய்தே தன் படிப்பைத் தொடர்ந்தவர்...

பள்ளிக் கல்வியை 90% மதிப்பெண்களுடன் முடித்ததுடன், தன் கல்லூரிப் படிப்பையும் முடித்த சித்தார்த்துக்கு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் உடல் குறையைக் காட்டி வேலை தரவில்லை எனினும் தன் திறமையைக் கொண்டு  வங்கி ஒன்றில் மிகச் சிறந்த பணியிலமர்ந்து கோலோச்சி வருகிறார். .வாழ்க்கையில் ஜெயிக்க அவர் கூறிய தாரக மந்திரங்கள்...  " எந்த ஒரு சூழ்நிலையிலும் நீ நீயாக இரு. உனக்கான எல்லைகளை நீயே வரையறுத்துக் கொள்... போராடு.. உனக்குள்ளே போராடு.." என புன்னகைக்கிறார் சித்தார்த்....

பெற்றோர் இருக்கும்போதே சாதனை செய்யுங்கள்

"ஆனால் ஐ.ஏ.எஸ்.... போனால் டெல்லி..." என நம் ஊர்களிலிருந்து கிளம்பி வரும் பல இளைஞர் பட்டாளங்களுக்கு புத்துணர்ச்சி அளித்து போதித்து வரும் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின்  நிறுவனர் மற்றும் தலைவர் சங்கர், தன் வாழ்நாளின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 22 வயதில் தன்னுடைய பள்ளிக்கல்வியை முடித்தவருக்கு, விதி கல்லூரி வாசலிலும் கால் கடுக்க நின்றுள்ளது... யாரோ செய்த தவறுக்காக கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டவர்,  தன்னுடைய 27 வயதில் கல்லூரி இளநிலை படிப்பை முடித்துள்ளார்...

எந்தப் பெண்ணினால் கல்லூரியிலிருந்து ரத்து செய்யப்பட்டவரோ, அதே பெண்ணை தன் வாழ்க்கை தேவதையாய் கைப்பிடித்து வாழ்க்கையை ஆரம்பித்த சங்கர் கூறிய  மொழிகள் "நீங்கள் எந்த ஒரு சாதனை செய்வதாக இருந்தாலும் அதை உங்கள் பெற்றோர் உயிருடன் இருக்கும்போதே செய்து காட்டுங்கள்... இல்லையெனில் அவை சாதனைகளே இல்லை.." எனக் கூறினார்.

துயரங்களைக் கண்டு துவளாதீர்கள்

2002 குண்டு வெடிப்பில் தன் கைகளையும், அதோடு தன் கதக்களி கனவுகளையும் இழந்தவர் மாளவிகா ஐயர்.குண்டுவெடிப்பு சம்பவத்தின்போது தன் கால்களில் பலத்த காயம் ஏற்பாட்டால், கதக்களியை மேற்கொள்ள இயலாமல் போனது. வெறும் 3 மாத பயிற்சியில் பத்தாம் வகுப்பில் 98 சதவிகித மதிப்பெண்கள் பெற்றவர். அதுமட்டுமல்ல, மாளவிகா மிகச் சிறந்த சமூக சேவகர், ஊக்கமூட்டும் பேச்சாளர்.
அவருடைய அந்த செயற்கை கைகள், அவருக்கு சோகத்தைத் தரவில்லை. ஒரு உத்வேகத்தையும், முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற எண்ணங்களையும் மட்டுமே அளிக்கிறது...

வெற்றிக்கு வேண்டுவன

குடியுரிமைப் பணி புரிய வேண்டும் என நினைப்பவர்களுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக விளங்கும்  அன்சுல் மிஸ்ரா ஐ.ஏ.எஸ் அவர்களின் உரையில் வெற்றிக்கு வேண்டிய நான்கு வழிமுறைகளைக் கூறினார்." நேர்மை, பொறாமையற்ற போட்டி மனப்பான்மை, தைரியம், எளிமை ஆகியவை தேவை " என்றார்.நீ நீயாக இரு

அடுத்ததாக வந்தவர் சுஹானி ஷா, இளைஞர்களுக்கு மிகச் சிறந்த உத்வேக உரையை வழங்கினார். "முதலில் நீங்கள் உங்கள் மீது நம்பிக்கைக் கொள்ளுங்கள்.உங்களுடைய எண்ணங்களை மாற்றிக் கொண்டால் நீங்களும் மாறலாம்.மிகச் சிறந்த உற்றுநோக்கலை மிகச் சிறந்த நினைவாற்றலைப் பெறலாம்." என்றவர், வாழ்வின் பல்வேறு சூழ்நிலைகளில் நாம் ஏமாறும் பல சந்தர்ப்பங்களையும், நம்பிக்கையின் வலிமையையும் கூறினார்

காந்திக்கு அரிச்சந்திரா நாடகம் ஏற்படுத்திய தாக்கத்தை, இந்நிகழ்வும் இளைஞர்களுக்கு ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

- பி.ஆனந்தி
படங்கள்: சந்திரமெளலி
(மாணவ பத்திரிகையாளர்கள்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close