Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மக்களை விரட்டும் மாநகராட்சி பூங்காக்கள்...!

சென்னை மாநகராட்சியில் 456 பூங்காக்கள் உள்ளன. இதில் ராயபுரத்தில் உள்ள அண்ணா பார்க், ராஜாஜி சாலையில் உள்ள தலைமை செயலக பூங்கா, பெரம்பூரில் உள்ள மேம்பால பூங்கா, பெரியமேட்டில் உள்ள மைலேடீஸ் பூங்கா, கோயம்பேட்டில் உள்ள ஜெய்நகர் பூங்கா, எழும்பூரில் உள்ள மேயர் சுந்தரராவ் பூங்கா, தி.நகரில் உள்ள பனகல் பூங்கா, நடேசன் பூங்கா, ஜீவா பூங்கா, நெசப்பாக்கம் ஏரிக்கரை பூங்கா, அடையாறில் உள்ள இந்திரா நகர் பூங்கா, அண்ணா நகரில் உள்ள டாக்டர் விஸ்வேஸ்வரய்யா பூங்கா, சிந்தாரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்கா, நுங்கம்பாக்கத்தில் உள்ள சுதந்திர தின பூங்கா, கே.கே. நகரில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பூங்கா, மைலாப்பூரில் உள்ள டாக்டர் நாகேஸ்வர பூங்கா ஆகியவை முக்கியமானதாகும்.

சுதந்திர தினப்பூங்கா, பனகல் பூங்கா, நடேசன் பூங்கா, சிவன் பார்க் (டாக்டர் எம்.ஜி.ஆர். பூங்கா) இந்திரா நகர் பூங்கா, டாக்டர் விஸ்வேஸ்வரய்யா பூங்கா ஆகியவற்றில் வண்ண விளக்குகள், நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. பூங்காக்களில் நடைபாதை, நீரியம், காஸ்பிசியா, இக்சோரா ஆகிய அழகிய செடிகளும் நடப்பட்டுள்ளன. சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை மக்களின் முக்கிய பொழுது போக்கு இடமாக திகழ்வது ஒன்று பூங்கா, மற்றொன்று மெரீனா கடற்கரை. இந்த இரண்டு இடங்களுக்கும் செல்லும் மக்கள் பல்வேறு தொல்லைகளை சந்தித்து வருகின்றனர். இதற்கு காரணம் மாநகராட்சியின் மெத்தனபோக்கே காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர். அதிலும், பூங்கா பராமரிப்பில் கொஞ்சம் கூட அக்கறை செலுத்துவதில்லை என்கிறார்கள் பொது மக்கள். பெரும்பாலான பூங்காக்களில் உள்ள நீரூற்றுக்கள் நீரின்றி காணப்படுகின்றன. விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காட்சிப் பொருளாக காட்சியளிக்கின்றன. செடிகள் நீரின்றி காய்ந்து போய் விட்டன. இருக்கைகள் உடைந்துள்ளதால் அவற்றில் உட்கார முடிவதில்லை. நடைபாதை நடக்க லாய்க்கற்ற நிலையில் உள்ளன. இதனால், சென்னையில் உள்ள பெரும்பாலான பூங்காக்களுக்கு மக்கள் செல்வதில்லை. பராமரிப்பின்றி காணப்படும் பூங்காக்கள் புதர்கள் மண்டி கிடக்கின்றன. பசுமையாக இருந்த பூங்காக்கள் பாலைவனமாக காட்சியளிக்கின்றன.

இத்தகைய பூங்காக்கள் இப்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விட்டன. தினந்தோறும் குடிமகன்கள் குடித்து விட்டு அங்கேயே படுத்து உறங்குகின்றனர். குடிமகன்கள் தொல்லையால் சில பூங்காக்கள் பக்கமே மக்கள் செல்வதில்லை. இதையடுத்து ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் பூங்காக்கள், காதலர்களின் 'காமலீலை' இடமாக காட்சியளிக்கின்றன. காதலர்களின் எல்லை மீறும் செயல்கள் நடைப்பயிற்சிக்கு கூட பூங்காக்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். பெரும்பாலும் மதியம் நேரங்களில் காதலர்கள் கூட்டம் பூங்காக்களில் அலைமோதுகின்றன.

ஒவ்வொரு செடிகளுக்கும் நடுவே அமர்ந்து காதலர்கள் செய்யும் லீலைகள் மக்களை முகம் சுளிக்க வைக்கிறது. இதுதவிர விஷஜந்துக்களின் தொல்லையும் அதிமாக இருக்கிறது. சர்வசாதாரணமாக பாம்புகள் பூங்காக்களில் நடமாடுகின்றன. இதற்கெல்லாம் காரணம்  மாநகராட்சியின் மெத்தனப்போக்கே காரணம் என்கிறார்கள் மக்கள். இவற்றுக்கு தீர்வு கண்டால் மீண்டும் சென்னையில் உள்ள பூங்காக்கள் களைகட்டும். பூங்காக்களை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி வட்டாரங்கள் கூறுகையில், "பூங்கா பராமரிப்பில் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தினாலும், கவுன்சிலர்கள் தலையீட்டால் அவற்றை முறையாக செயல்படுத்த முடியவில்லை. பூங்கா பாதுகாப்பில் தனியார் காவலர்களை பணியமர்த்த டெண்டர் விடப்பட்டது. சில பூங்காக்களில் மட்டுமே காவலாளிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். காவலாளிகள் இல்லாத பூங்காக்களில்தான் சமூக விரோதிகளும், காதலர்களின் அட்டகாசமும் அதிகமாக இருக்கிறது. இது மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரிந்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

இப்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் அங்குள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆனால் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. சில பூங்காக்கள் மட்டுமே சரிவர பராமரிக்கப்படுகின்றன. பெரும்பாலான பூங்காக்கள் அலங்கோலமாகவே காணப்படுகின்றன. இதற்கு மாநகராட்சி நிர்வாகம் அக்கறை செலுத்தினால் மட்டுமே மக்களின் பொழுது போக்கு இடமான பூங்காக்கள் பொலிவு பெறும்" என்றனர்.

பசுமை புரட்சியை ஏற்படுத்துவோம் என்று சபதமிட்ட மாநகராட்சியின் பூங்கா துறை என்ன செய்கிறது?

-எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ