Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நடைபாதை ஆக்கிரமிப்பதற்கே!

சென்னையில் பெரும்பாலான பகுதி ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கி தவிக்கிறது. குறிப்பாக நடைபாதைகள் நடப்பதற்கு என்று மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டாலும் அது ஆக்கிரமிப்பின் பிடியில் இருக்கிறது. சென்னையில் தேனீக்கள் போல அடுக்குமாடி குடியிருப்புகள் ஒருப்பக்கத்தில் இருந்தாலும், கூவம் ஆற்றின் கரையோரங்களை ஆக்கிரமித்து குடிசையில் குடும்பம் நடத்துபவர்களும் இருக்கிறார்கள். இந்த குடிசை கூட  இல்லாமல் நடைபாதைகளிலேயே குடும்பம் நடத்துபவர்களும் உள்ளனர்.

நள்ளிரவு நேரத்தில், சென்னையில் உள்ள சாலைகளில் மின்விளக்குகள் மிளிர, நடைப்பாதைகளில் குடும்பத்துடன் பலர் படுத்துறங்கும் காட்சிகளை காணலாம். இத்தகைய பிளாட்பாரவாசிகள் குறித்து யாரும் அக்கறைப்படுவதில்லை.

மக்களுக்கு உணவு, உறைவிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்குவது அரசின் கடமை. ஆனால், இந்த கடமை எழுத்தளவில் மட்டுமே இருக்கிறது. பிளாட்பாரத்தில் குடியிருப்பவர்களுக்கு காப்பகங்கள் அமைத்து கொடுப்பது அரசின் வேலை. ஆனால் அதை அதிகாரிகள் செய்வதில்லை. பத்துக்கு பத்து அறையை ஆக்கிரமித்து, அதில் குடும்பம் நடத்துபவர்களின் எண்ணிக்கை சென்னையில் அதிகம். குறிப்பாக வடசென்னையில் குறுகிய சந்துக்களில் ஏராளமான குடியிருப்புகள் இருப்பதைக் காணலாம். இதில் விதிமுறைகள் மீறிய கட்டடங்கள் அதிகளவில் உள்ளன.

பிளாட்பாரத்தில் குடியிருப்பவர்களுக்கு அங்கேயே வாழ்க்கை முடிந்து விடுகிறது. பரம்பரை பரம்பரையாக அங்கேயே நாடோடி வாழ்க்கை நடத்துபவர்களும் இருக்கிறார்கள். இவர்களைத் தவிர, நடைபாதையை ஆக்கிரமித்து, கடைகளும் முக்கிய நகரங்களில் முளைத்துள்ளன. சென்னையில் இதயப்பகுதிகளாக திகழும் மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், எழும்பூர், தி.நகர், கோடம்பாக்கம், புரசைவாக்கம், பிராட்வே உள்பட பலப்பகுதிகளில் உள்ள நடைபாதைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளன. இதனால் நடந்து செல்லும் மக்களால் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சி, நடைபாதை நடப்பதற்கே என்ற முழக்கத்தோடு ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதைகளையும் விரிவுப்படுத்தியது.

இதற்காக சென்னை மாநகராட்சியின் மேயர், கமிஷனர் வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள நடைபாதைகளை பார்வையிட்டு வந்தனர். அதன்படி சென்னையில் நடைபாதையை அழகுப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்தி, அதற்கு கோடிக்கணக்கில் நிதியையும் ஒதுக்கீடு செய்தனர்.

நடைபாதையை விரிவுப்படுத்தும் பணிகள் சென்னை முழுவதும் தொடங்கப்பட்டன. மாதிரி நடைபாதைகள் சென்னை எழும்பூரில் உள்ள பழைய கமிஷனர் அலுவலகம் சாலையில் அமைக்கப்பட்டது. அங்கு நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதோடு, மக்கள் நடந்து செல்ல வசதியாக அவைகள் அமைக்கப்பட்டன. அதை அழகுப்படுத்தும் வகையில் வழுவழுப்பான கற்களும் அதில் பதிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கிண்டி, நுங்கம்பாக்கம், சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதைகள் அமைக்கப்பட்டன. ஆனால் இந்த பணிகள் சில காரணங்களுக்காக கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி வட்டாரங்கள் கூறுகையில், "மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருப்பதைப் போல சென்னையிலும் நடைப்பாதையை அழகுப்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். ஆனால், சென்னையில் பெரும்பாலான நடைப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. அவற்றை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கவே பெரும்பாடாகி விட்டது. நடைப்பாதைகளில் கடைகள் வைத்திருந்தவர்களுக்கு அந்தந்தப் பகுதிகளில் வணிக வளாகங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றன. தி.நகர் பகுதியில் உள்ள நடைபாதை சிறு வியாபாரிகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு வணிக வளாகம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற மற்ற இடங்களிலும் நடைபாதை சிறு வியாபாரிகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு வசதியாக அந்தந்தப்பகுதிகளில் வணிக வளாகங்கள் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

நடைபாதையை அழகுப்படுத்தவும், அதை விரிவாக்கம் செய்யும் பணியில் அதிலுள்ள மின்கம்பங்களையும், மின் பெட்டிகளையும் அகற்ற வேண்டியுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுத்துள்ளோம். முன்மாதிரி நடைபாதைகள் எழும்பூர், கிண்டி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. மற்றப்பகுதிகளிலும் மக்கள் நடந்து செல்ல வசதியாக, அனைத்து நடைபாதைகளும் இதுபோல அழகுப்படுத்தப்படுவதோடு விரிவுப்படுத்தப்படுகின்றன. நிதிஒதுக்கீடு, ஒப்பந்தக்காரர்கள் உள்ளிட்ட பிரச்னைகளால் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன" என்றனர்.

சென்னையில் நடைபாதைப் பணிகள் முடிவடைந்து அது ஆக்கிரமிக்கப்படாமல் இருந்தால் சரி!

எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ