Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆரஞ்சு மிட்டாய் வரிசையில் மிட்டாய் தங்கையா...காணாமல் போகும் பாரம்பரியங்கள்!

தேன்கரும்பு தேன்சுவை பஞ்சாமிர்த மிட்டாய்‘’ மிட்டாய் பேர சொன்னாலே சும்மா நாவில எச்சில் ஊறுதுல.. அவ்வளவு அருமையான இனிமையான பழமையான மிட்டாய் தான் இந்த ‘’தேன்கரும்பு தேன்சுவை பஞ்சாமிர்த மிட்டாய்‘’.

பொதுவா இனிமையான மிட்டாய்கள் குழந்தைகளிடம் அகப்பட்டுக்கொள்ளும்.. விலையுயர்ந்த பொருட்களைகூட கொடுக்காமல் நாம் குழந்தைகளை சமாளித்துவிடலாம் ஆனால் மிட்டாய் வாங்கித்தரவில்லை எனில் போர்க்களம் ஆகிடும் வீட்டில் ...அவ்வளவு மகிழ்வை தரக்கூடியது தான் இந்த மிட்டாய்கள்..அதை அவர்கள் சாப்பிடும்போது கிடைக்கும் சுவை, மகிழ்ச்சிக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது.. அவ்வளவு மகிழ்ச்சி! குழந்தைகளுக்கு...அப்படிப்பட்ட குழந்தைகளின்  மகிழ்ச்சிக்காகவே தன் வாழ்நாள் முழுமையும் அர்பணித்து இருப்பவர் தான் மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்த ‘’மிட்டாய்த் தாத்தா’’ தங்கையா..பெயருக்கு ஏற்ற தங்கமான மனது அப்படி இல்லையென்றால் தொடர்ந்து 71 வயதான போதிலும் 38வருடமாக இப்படி நடை தளர்ந்த வயதிலும் தள்ளுவண்டியில் கொண்டு சென்று இந்த ‘’தேன்கரும்பு தேன்சுவை பஞ்சாமிர்த மிட்டாய்‘’ குழந்தை செல்வங்களுக்கு தொடர்ந்து மகிழ்ச்சி அளித்து கொண்டு இருப்பாரா.

ஆரம்பத்தில நாங்கள்  வியாபார நோக்கோடு போட்டி போட்டு நிறைய மிட்டாய் வித்துக்குட்டு  இருந்தோம். காலைல வெள்ளனா எந்திருச்சு மண்ட வெல்லத்தை நல்லா காய்ச்சி வடிச்சிட்டு, அதுல ஏலக்கா, சுக்கு, கலந்து வச்சா அப்படியே சவ்வு மிட்டாய் மாதிரி மாறிடும் மணமா இருக்கும், ஈயும் அண்டாது.. இதுல என்கைப்பக்குவமும் இருக்கு.. இப்படித்தான் இந்த ‘’தேன்கரும்பு தேன்சுவை பஞ்சாமிர்த மிட்டாய்‘’ ஆக்கிட்டு பள்ளிக்கூடத்து முன்னாடி தள்ளுவண்டியில விப்பன். அன்னைக்கு அஞ்சு பைசாவுக்கு வித்தன்.. இன்னைக்கு அதே விலையிலதான் விக்கிறேன் ஆனா அஞ்சு பைசா  காலப்போக்குல  செல்லாக்காசா ஆகிருச்சுல இப்ப ரெண்டு ரூபாய்க்கு விக்குரன்.. பிளாஸ்டிக் பைல போட்டு மிட்டாய் விக்க ஆரம்பிச்சதும் எல்லாம் போய்டாங்க நான் மட்டும் இன்னும் வித்துக்குட்டே இருக்கன்.. எதுக்குனா சின்னபுள்ளைக மேல உள்ள பாசம்தாம்.. அத எப்படினுலா எனக்கு சொல்லத்தெரியல.. வேற வேலையும் தெரியாது இன்னைக்கு திரும்பிப்பார்த்தா 71 வயசு ஆச்சு... பெரியதா சாதிக்கலனாலும் சின்ன புள்ளைங்க கூடால எப்பவும் மகிழ்ச்சியா வாழ்ந்த திருப்தி என்றார் தங்கையா..

இதுமட்டும் அல்ல  இவரிடமும் சில கயவர்கள் பணம் கேட்டு இவரது தள்ளுவண்டியை அடித்து இவரையும் தள்ளிவிட்டாங்க ஒருநாள் என்றார்.. பிறகு இவருக்கு சில பழைய பள்ளி மாணவர்கள், இவரின் வாடிக்கையாளராக இருந்த மாணவர்கள் இவருக்கு உதவிசெய்து மீண்டும் தள்ளுவண்டி வாங்கிக்கொடுத்துள்ளனர். மதுரையை சேர்த்த பலமாணவர்கள் பெரிய வேலைக்கு சென்றபிறகும் இன்றும் இவரிடம் வந்து பழைய நினைவுகளுடன் ‘’தேன்கரும்பு தேன்சுவை பஞ்சாமிர்த மிட்டாயையும் ‘’ சேர்த்து சுவைத்த வண்ணம் உள்ளனர்.

எது எப்படி இருந்தாலும் இவர் பள்ளி நாட்களில் விடுப்பு எடுப்பதில்லை..ஏனெனில் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு பங்கம் வைக்க விடமாட்டார்.. இவர் ஒருவர் தான் ‘’தேன்கரும்பு தேன்சுவை பஞ்சாமிர்த மிட்டாய்‘’  விற்றுக்கொண்டு இருக்கிறார்.

மிட்டாய்த் தாத்தாவின் ‘’நாந்தேன் கடைசி’’ என்ற வார்த்தை நம் மனதில் கசப்பை பரவச்செய்தது....

சி.சந்திரசேகரன்,படங்கள் ; நா.ராஜமுருகன்
மாணவர் பத்திரிகையாளர்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ