Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'விவசாயம் செய்ய அழைக்கிறது டாஃபே'

லகுக்கே உணவிடும் விவசாயிகளையும், விவசாயத்தையும் வாழ்நாளில் நாம் எத்தனை முறை நினைத்துப் பார்க்கிறோம். விலைவாசி ‘ஏறிபோச்சேன்னு’ வருத்தப்படுகிறோமே ஒழிய, அதை உற்பத்தி செய்கின்றவர்களை பற்றி ஒருநாளும் நினைப்பதில்லை.

காசு கொடுத்து வாங்கும் உணவு பொருள், எப்படி உற்பத்தியாகி வருகிறது என்பதை யாரும் அறிவதில்லை. விவசாயத்துக்கும் மக்களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்நிலையில் விவசாயிகளையும், விவசாயத்தையும் பெருமைப்படுத்தும் விதமாக ‘விவசாய தோழனாக இருப்போம்’ (ஃபார்ம் டோஸ்ட்) என்ற செயல்திட்டத்தினை பிரபல டிராக்டர் உற்பத்தி நிறுவனமான டாஃபே தொடங்கியிருக்கிறது.
 

கடந்த வாரம், சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ ஷாப்பிங் மாலில் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. அப்போது பேசிய டாஃபே நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் கேசவன், "நாட்டின் உணவு உற்பத்தியில் மௌனமாக பங்களிப்பை செலுத்தி வருகிறார்கள் விவசாயிகள். நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளையும் கௌரவப்படுத்தும் விதமாகவும், அவர்களுக்கு நன்றியை தெரிவிக்கும் விதமாகவும் இச்செயல்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து அனைவரும் விவசாயிகளாக பெருமை கொள்ளவும், உலகை பண்படுத்துவதில் இணைந்து விவசாய தோழனாக இருப்போம்" என்று அழைப்பு விடுத்தார்.
 

இத்திட்டத்தின் நோக்கம் குறித்து மேலும் அவர் பேசும்போது, "ஒரு கணநேரமாவது விவசாயியாக தன்னை பொருத்தி பார்க்குமாறு அனைத்து தரப்பு மக்களையும் ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஒரு சதுரஅடி நிலத்தில் ஒரு பயிரையோ, செடியையோ வளர்க்கவே கஷ்டப்படுகிறோம். ஆனால் ஒரு சராசரி விவசாயி ஆண்டு முழுவதும் பயிரை வளர்க்க எவ்வளவு சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஒரு விவசாயியின் உண்மையான சிரமங்களை மற்றவர்களும் உணர்ந்து கொள்ள இத்திட்டம் உதவும். இதோடு விவசாயிகளை மதிக்கவும், அங்கீகரிக்கவும் இத்திட்டம் உத்வேகமளிக்கும்.

விரல்களுக்கிடையில் மண்ணை உணர்வதற்கும், ஒருநாளில் விவசாய அனுபவங்களை பெற்று ஆனந்தமடையவும் வழிவகை செய்கிறது. ஒரு செடியை வளர்த்து அதிலிருந்து அறுவடை செய்து பூரிப்படையவும், விவசாயிகளின் வாழ்வோடு ஒன்றவும், அவர்கள் வாழ்வின் மீதும் மரியாதையை ஏற்படுத்தவும் வழிவகை செய்கிறது. விவசாய பணிகள் குறித்தும், விவசாயிகளோடு கலந்துரையாடவும் அவர்களின் வாழ்க்கையை உள்நோக்கோடு புரிந்து கொள்ளவும் இத்திட்டம் அனைத்து தரப்பு மக்களையும் வரவேற்கிறது.
 

தமிழ்நாட்டில்தான் இத்திட்டம் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. அடுத்து தேசிய அளவில் கொண்டு செல்ல இருக்கிறோம். பள்ளி மாணவர்களுக்கான ‘விவசாய தோழனாக இருங்கள்-பள்ளி மாணவர்களுக்கான திட்டம்’ என்ற இத்திட்டத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மாநகரங்களில் உள்ள பள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கிறோம். இத்திட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள விரும்பும் பள்ளிகள் cultivate@farmdost.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் டாஃபேயை தொடர்பு கொள்ளலாம். மாணவர்களாகட்டும், பொதுமக்களாகட்டும் விவசாயத்தை கற்றுக்கொள்ள உங்கள் வாழ்வில் ஒருசில நாட்களையாவது ஒதுக்கி வையுங்கள்" என்றார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள், பொதுமக்களுக்கு காய்கறி விதைகள் வழங்கப்பட்டன. இதோடு நாகபூஷணம் என்ற பெண் விவசாயியை பங்கேற்க வைத்து அரங்கி கலந்து கொண்டவர்களுக்கு விவசாயம் குறித்த சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. பொழுதுபோக்காக வந்தவர்களும் விவசாய விஷயங்களை தெரிந்து கொண்டு போனது ஆச்சர்யமான விஷயமாக இருந்தது.

ஜெயகுமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ