Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரும்புச்சத்துக்கு இயற்கை உணவுகள் சாப்பிடுங்க!

சென்னையில் இயற்கை அங்காடிகளை பெசன்ட் நகர், அடையார், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் அதிகம் பார்க்க முடியும். ஏனென்றால் வசதி படைத்தவர்கள் இயற்கை விளைபொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
 

இயற்கை விளைபொருட்கள் குறித்தான விழிப்புணர்வு அனைத்து தரப்பு மக்களிடமும் வளர்ந்து வருகிறது. ஆனால் சென்னையில் வளர்ச்சியடையாத பகுதிகளில் இயற்கை அங்காடிகளை பார்ப்பதே அரிதாக உள்ளது. இந்த நிலையில் வளர்ச்சியடையாத கிராமங்கள் இருக்கும் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது அமிர்தம் இயற்கை விளைபொருட்கள் அங்காடி. சென்னையை அடுத்த வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் 3 கி.மீ உட்புறமாக அமைந்துள்ளது புதுப்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தில்தான் இயற்கை அங்காடி தொடங்கப்பட்டுள்ளது.

இதன் துவக்க விழாவில் நீடு அறக்கட்டளையை சேர்ந்த ராமசந்திரன் பேசும்போது, "முன்பெல்லாம் உணவே மருந்து என்று இருந்தது போய், இப்போது மருந்தே உணவு என்றாகி உள்ளது. முன்பெல்லாம் எப்படி இருக்கீங்கனு? கேட்பாங்க. இப்போதெல்லாம் உங்களுக்கு சுகர் இருக்கா? பி.பி. இருக்கான்னுதான் கேக்கறாங்க. இப்படிப்பட்ட உடல் குறைபாடுகள் நீங்க இயற்கை உணவு அவசியம்” என்றார்.

கால்நடை வளர்ப்பு பற்றி பேசிய முன்னோடி இயற்கை விவசாயி முகுந்தன், “கால்நடை பொருட்கள் மட்டும் அல்ல, விவசாய பொருட்கள் அனைத்தையும் நேரடி விற்பனைக்கு கொண்டுவருவதன் மூலம்தான் விவசாயிக்கு பலன் கிடைக்கும். கலப்பின மாடுகளைவிட நாட்டு மாடுகள்தான் சிறந்தவை. நாட்டு மாடுகள் வளர்ப்புக்கு மருத்துவ செலவுகள் மிகவும் குறைவு. பால் தேவை என்பது இப்போது அன்றாட தேவையாகிவிட்டது. இதுபோன்ற இயற்கை அங்காடிகளில் பால் விற்பது இருதரப்பினருக்கும் லாபம் அளிக்க கூடியது” என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய இயற்கை விவசாயி ராணி, “காஞ்சிபுரம் ஏரிகளின் மாவட்டம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், இன்று பல ஏரிகள் காணாமல் போய்விட்டன. இருக்கும் ஏரிகளும் வற்றி போய் காணப்படுகின்றன. இதற்கு பல்வேறு சுற்றுச்சூழல், அரசியல் காரணங்கள் இருக்கின்றன. தற்போதுள்ள நீரினை கொண்டு செம்மையாக நீர்பாசனம் செய்யலாம். நீர் தெளிப்பு முறை, சொட்டு நீர் பாசனம் போன்ற பாசன முறைகளை பின்பற்றலாம். அரசாங்கத்தின் அனுமதி பெற்று குட்டைகளை உருவாக்கி நீர் பாசனம் செய்யலாம்” என்று ஆலோசனை சொன்னார்.

பருவ நிலை மாறுபாட்டை பற்றி பேசிய தஞ்சையைச் சேர்ந்த முன்னோடி விவசாயி கோ.சித்தர், “தற்போதுள்ள வெப்பநிலை மாறுபாட்டிற்கு புதை படிம எரிபொருட்களும், காடுகளை அழித்தலுமே காரணம். இந்த காலநிலை மாறுபாட்டிற்கு ஏற்ப விவசாயம் செய்ய, விவசாயிகளுக்கு சரியான புரிதல் அவசியம். கூட்டு பயிர் சாகுபடி அவசியம் தேவை, அது மண் வளத்தை வளர்க்கும். தற்போதுள்ள மக்களுக்கு உணவை பற்றிய சரியான புரிதல் இல்லை. உடலில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் இரும்புச்சத்து குறைவாக இருப்பதுதான் காரணம். இந்தச் சத்தை இயற்கை உணவுகள் தரும்” என்றார்.

மண்புழு விஞ்ஞானி பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் பேசும்போது, “மண்புழு உரத்தை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்பது தவறான கருத்து. மண்புழு உரத்தை பயன்படுத்தினால் பயிர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும். அடிமட்ட புழு, நடுமட்ட புழு, மேல்மட்ட புழு என மூன்று வகையான மண்புழுக்கள் உள்ளன. அரைகிலோ வெல்லம், அரைகிலோ சாணம், 20 லிட்டர் தண்ணீர் இருந்தால் போதும். மண்புழு உரம் தயாரிச்சிடலாம். ஒரு காலி இடத்தில் மேற்சொன்ன அனைத்தையும் சேர்த்து கோணி பையால் மூடிவிட வேண்டும். அதன்பின் 20 நாட்களில் மண்புழு உரம் தயார்” என்றவர் மண்புழு உரம் பற்றி மேலும் தகவல்கள் அறிந்துகொள்ள <http://www.erfindia.org/> என்ற இணையதளத்தையும் பரிந்துரை செய்தார்.

கருந்தரங்கை தலைமை தாங்கி நடத்திய நஞ்சில்லா உணவு உற்பத்தியாளர் அறக்கட்டளையை சேர்ந்த ரங்கநாதன், “முன்பெல்லாம் இயற்கை அங்காடிகளை பார்ப்பதே கடினம். இன்று சென்னையில் மட்டும் 250க்கும் மேற்பட்ட இயற்கை அங்காடிகள் உள்ளன” என்றார். நிறைவாக அமுதம் இயற்கை விளைபொருள் அங்காடியின் நிறுவனர் சம்பந்தமூர்த்தி அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தி, படங்கள்: அ.பார்த்திபன்

(மாணவ பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ