Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாலை சூடிக்கொண்ட மாற்றுத்திறனாளிகள்!

மனம் மட்டுமல்ல... உடலாலும் பொருத்தமானவர்கள் சுதாவும், குமரனும்!

இருவரும் மாற்றுத்திறனாளிகள்; காதலித்து மணம் முடித்தவர்கள். வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள தங்கள் இல்லத்தில், அழகான வாழ்க்கையை சமீபத்தில்தான் ஆரம்பித்திருப்பவர்களுக்கு வாழ்த்துகள் சொன்னோம்!

போலியோவால் பாதிக்கப்பட்டு கால்களின் செயல் இழந்த சுதா, மெல்லப் பேசினார். ‘‘என் சொந்த ஊர் வாலாஜா. காலுக்கு பதிலா, கடவுள் எனக்கு தைரியம் நிறையக் கொடுத்துட்டார். வாலாஜா, ராணிப்பேட்டை, சென்னைனு என் பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடிச்சேன். இப்போ  காட்பாடியில் இருக்கும் மாற்றுத்திறனாளிக்கான பள்ளியில ஆசிரியரா வேலை பார்க்கிறேன். அதுக்காக காட்பாடியில ரூம் வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தப்போ, தினமும் பள்ளி முடிந்ததும் சமையலுக்கான காய்கறி வாங்க கடைக்குப் போவேன். அந்தக் கடையோட முதலாளி குமரன், என்னைப் போல மாற்றுத்திறனாளினு தெரியவந்தது.

என் தோழிக்காக வீடு பார்க்கச் சொல்லிக் கேட்டதுதான், அவரோட நான் முதல் முதலா பேசினது!’’ - சுதாவின் முகத்தில் பரவசம். ‘‘நான்தான் முதல்ல அவங்ககிட்ட என் காதலைச் சொன்னேன்...’’ என்ற குமரன், ‘‘எதுவா இருந்தாலும் எங்கம்மாகிட்ட பேசுங்கனு சொல்லிட்டாங்க சுதா. அதுக்கு முன்னாடி எங்க வீட்டுல பேசி சம்மதம் வாங்க நினைச்சேன். ஆனா, ‘நீ இப்படி இருக்கும்போது, வரப்போறவர்/வரப்போறவளாச்சும் நல்லா இருந்தாதான் உன்னை பார்த்துக்க முடியும். ரெண்டு பேருமே இயலாமையில் இருந்தா, அது மிச்ச காலத்தையும் கஷ்டப்படுத்துமே..?’னு ரெண்டு பேர் வீட்டுலயுமே இந்தக் கேள்வியைக் கேட்டாங்க.

ஆனா நாங்க, ‘பரஸ்பர அன்பாலயும் புரிதலாலயும் எங்க வாழ்க்கையை அழகாக்கிக்குவோம். ஊனத்தை எங்க காதலால் வெல்வோம். தவிர, நல்லா இருக்குற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டா, ஒருவேளை ஏதோ பெரிய மனசு பண்ணி எங்களை ஏத்துக்கிட்ட ஒரு எண்ணம் அவங்களுக்கு வந்துட்டா, அது நரகமாயிடும். ஆனா, எப்பவுமே நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பை மட்டுமில்ல, மரியாதையையும் கொடுத்துப்போம்!’னு அவங்களுக்கு எடுத்துச் சொன்னோம். புரிஞ்சுக்கிட்டு, சம்மதம் கொடுத்தாங்க!’’ என்றார் குமரன்.

ஐந்து மாதங்களுக்கு முன் நடந்திருக்கிறது இவர்களின் திருமணம். ‘‘கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லோரும், ‘எப்படியோ ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்!’னு மனசார வாழ்த்தினாங்க. இப்போ நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கோம். எல்லோருக்கும் முன்னாடி வெற்றிகரமா வாழ்ந்து காட்டுவோம்!’’- சுதாவும், குமரனும் சேர்ந்து சொன்னபோது, மகிழ்ந்து போனோம்!

- ஜெ.பாரதி
படங்கள்: ச.வெங்கடேசன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ