Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதுரையில் ஓடுது வைஃபை ஆட்டோ!

தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் பல அதிசயங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. மூன்று வேளை உணவு போல் இணைய வசதியையும் இனி தவிர்த்துவிட்டு வாழமுடியாது என்ற மனோபாவம் மேட்டுக்குடி மக்களிடையே மட்டுமின்றி, நடுத்தர பிரிவு இளைஞர்களிடையேயும்  உருவாகிவிட்டது.

இந்த நிலையில் இளைஞர்களின் பல்ஸ் பிடித்துப்பார்த்து, அவர்களுக்காக தனது ஆட்டோவில் வைஃபை வசதியை ஏற்படுத்தியிருக்கிறார் ஒரு இளைஞர். பாம்பின் கால் பாம்பறியும் அல்லவா...?

அவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் எமனேஸ்வரத்தை சேர்ந்த முகம்மது உவைஸ். கடந்த 6 வருடங்களாக சொந்தமாக ஆட்டோ ஓட்டி வரும் இவர், இன்றைய இளைஞர்களை சரியாகவே கணித்து வைத்திருக்கிறார். சவாரிக்கு செல்லும்போது பயணிகளின் பொழுதுபோக்கிற்காக இணையதளம் பயன் படுத்தும் வசதியை செய்துள்ளார்.

இதற்காக மாதந்தோறும் 500 ரூபாய்க்கு மேல் செலவு செய்து வருகிறார். இதற்கு என பயணிகளிடம் வசூல் செய்வது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனாலேயே அந்த பகுதியில் வைஃபை ஆட்டோ என்று இவரது ஆட்டோ பிரசித்தம்.

ஆட்டோ ஓட்டும்போது மட்டுமில்லாமல், நண்பர்களுக்காகவும், தெரிந்தவர்கள் யாரும் இணையம் பயன்படுத்தும் அவசியம் ஏற்பட்டால்  இவர் வைஃபை ஆன் செய்து விடுகிறார்.

முகம்மதுவிடம் பேசினோம். “பயணிகளின் பொழுதுபோக்கிற்காகதான் இந்த ஏற்பாட்டை செய்தேன். ஆட்டோவில் குறைந்தது 20 லிருந்து 1 மணி நேரம் வரை கூட சமயங்களில் சவாரி செய்யவேண்டியதிருக்கும்.

இணையம் இன்றி எதுவும் இல்லையென்றாகிவிட்ட காலத்தில், அந்த நேரத்தை தேவைப்பட்டவர்கள் தங்கள் அலுவலக வசதிக்காகவும் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்றுதான் இப்படி ஒரு வசதியை என் ஆட்டோவில் செய்தேன். வண்டியில் ஏறும்போதே பயணிகளிடம் இந்த வசதியைக் கூறி, இலவசமாக உபயோகித்து கொள்ளுங்கள் என்பேன்.

வைஃபையை உபயோகமாக பயன்படுத்திக்கொள்பவர்கள், வண்டியை விட்டு இறங்கும்போது என்னைப் பாராட்டி விட்டு இறங்குவார்கள். அது ஒரு மனதிருப்தியாக இருக்கும்” புன்னகையுடன் முடிக்கிறார் முகம்மது.

-அரவிந்த்
( மாணவப் பத்திரிக்கையாளர்)


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ