Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாடம் சொல்லித் தரும் பண்ணைகள்!

ரு சரியான விவசாயிக்கு, 'வயல்களே ஆராய்ச்சி நிலையம், பண்ணையே பல்கலைக் கழகம்' என்று சொல்வார்கள். இன்று பாடம் படிக்கும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பண்ணைக்கு செல்வதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளனர். தமிழகத்தில் பல இயற்கை வேளாண் பண்ணைகள் மாணவர்களுக்கு களஆய்வு இடமாகவும், பயிற்சி வழங்கும் இடமாகவும் இருந்து வருகிறது. அந்த வரிசையில் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள கைத்தண்டலம் கிராமத்தில் அமைந்திருக்கிறது 'எழில்சோலை' இயற்கை வேளாண் பண்ணை.

இந்த பண்ணையை காஞ்சிபுரம் மாவட்ட மரம் வளர்ப்பு சங்கத் தலைவரும், இயற்கை ஆர்வலருமான 'எழில்சோலை' மாசிலாமணி நடத்தி வருகிறார். சமீபத்தில் சென்னையை அடுத்த நசரத்பேட்டை, ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி மருத்துவமனை மாணவர்கள் இந்த பண்ணையை பார்வையிட வந்திருந்தனர். மாணவர்களை அழைத்து வந்திருந்த கல்லூரியின் பேராசிரியர் சுவாமிநாதன், ஒவ்வொரு தாவரங்களை பற்றியும் மாணவர்களுக்கு பண்ணையிலேயே வகுப்பெடுத்தார். ஒருநாள் முழுவதும் பண்ணையையும், அதைச் சுற்றியுள்ள வயல்களையும் பார்வையிட்டனர். அப்போது ஒவ்வொரு மரம் மற்றும் பயிர்களைப் பற்றி மாணவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு விடையாக அமைந்தது இந்த பண்ணை.

இந்த அனுபவம் பற்றி பேசிய கல்லூரி பேராசிரியர் சுவாமிநாதன், “பொதுவாக காசி வில்வம், மகாவில்வம், ருத்திராட்சம், வாட்டர் ஆப்பிள், மகோகனி என வெவ்வேறு சூழல்களில் வளரும் மரங்களை இங்கே காண முடிந்தது. அது மாணவர்களுக்கு புதுமையான தகவலாகவும் இருந்தது. கடலை, துவரை, உளுந்து, பயறு என அனைத்து வகைகளை பற்றியும் மாணவர்களுக்கு விளக்க முடிந்தது. மருத்துவ பயன்களை தரக்கூடிய செடிகள் இங்கே ஏராளமாக உள்ளன. வகுப்பறையில் தாவரங்கள் பற்றி மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். இருந்தாலும் வயல்களுக்கு நேரடியாக சென்று பயிர்களை பார்த்து கேட்டறிவது அவர்களின் படிப்பு சார்ந்த பார்வையை விரிவாக்கும்” என்றார்.

இந்த பண்ணை அனுபவம் பற்றி மாணவ, மாணவிகள் கூட்டாக பேசியபோது, “ஆயுர்வேத மருத்துவம் படிப்பதால் செடிகளைப் பற்றியும், அதிலிருந்து மருந்து தயாரிக்கும் முறைகள் பற்றியும் புத்தகம் வாயிலாகவே தெரிந்து கொண்டிருந்தோம். அதுவும் மூலிகைகள் பாடத்தில் வரும் பெரும்பாலான செடிகளைப் பற்றி நாங்கள் நேரில் கண்டது கிடையாது. ஆனால், அந்த மூலிகைகளை வயல்களிலும், தோட்டத்திலும் சாதாரணமாக பார்த்தோம். பேராசிரியர் நேரடியாகவே செடிகளைக் காண்பித்து விளக்கியதால் தாவரங்களை இனம் காண்பது மிகவும் எளிதாக இருந்தது.

இதுதவிர செஞ்சந்தனம், மகோகனி, காஷ்மீரி, மூங்கில் உள்ளிட்ட நிறைய மரங்களை பார்த்தோம். கிராமங்களில் உள்ள தூய்மையான காற்றைச் சுவாசிக்கும் போது, இந்த மரங்களை பாதுகாத்து வரும் கிராமங்களின் மீதான மதிப்பு எங்களுக்கு கூடுகிறது. இந்தப் பண்ணையில் ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் மரங்கள் வளர்க்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு” என்றனர்.

பண்ணையின் உரிமையாளரான மாசிலாமணியிடம் பேசினோம். “பண்ணையில் 360 வகையான மரங்கள் இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் பல வகையான மரங்களை இங்கே பார்க்க முடியும். இதுபோன்று பண்ணைக்கு வருகை புரியும் மாணவர்கள் எளிதில் தாவரங்கள் பற்றி அறிந்துகொள்ள பெயர் பலகை வைக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். ஸ்தல விருட்ச மரங்கள் உள்ளிட்ட அறிய வகை மரங்களை சேகரித்து வருகிறேன். மாணவர்கள் ஆராய்ச்சிக்காக இந்த பண்ணையை எந்நேரமும் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.

கட்டுரை, படங்கள்: பா.ஜெயவேல்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ