Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெளியில் தெரியாத விஞ்ஞானி!

வெளியில் தெரியாத விஞ்ஞானிகள் ஒவ்வொரு துறையிலும் ஏராளம் உள்ளனர். அதுவும் விவசாயத் துறையில் அந்த எண்ணிக்கை அதிகம். அப்படிப்பட்ட ஒருவர்தான் சதாசிவம்.

இ.ஆர்.ஆர்.சதாசிவத்துக்கு 73 வயது. கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள ஏலூர் கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர். மரம் வளர்ப்புக்காக 1997-ம் ஆண்டு இந்திய அரசின் 'இந்திரா பிரியதர்ஷினி விருஷ்சமித்ர விருது' பெற்றுள்ளார். கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றத்தை தடுக்க, மரங்களை வளர்த்து லாபம் பெறும் நுணுக்கத்தை நிரூபித்துள்ளார். தமிழ்நாடு முழுக்க பல நூறு ஏக்கரில் பலன் தரும் மரங்களை நட்டு, அவற்றை காடுகளாக உருவாக்கியுள்ளார். பலரையும் மரம் வளர்க்க ஊக்கப்படுத்தி வருகிறார்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் 2000-ம் ஆண்டு, முத்துமல்லா அறக்கட்டளையின் சார்பில் விவசாயத்துறையில் சாதனை செய்தவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சதாசிவத்திற்கும் விருது வழங்கினார்கள். ‘‘எனக்கு சென்னையைப் பார்த்தா பயமா இருக்கு. ஆனா, ஆபத்தான மிருகங்கள் இருக்கிற காட்டை பார்த்தா சந்தோஷமா இருக்கு’’ என்று இரண்டு வரிகளில் பேச்சை முடித்துக் கொண்டார்.

மாலையில் விழா முடிந்தவுடன், உங்களை சந்தித்து பேட்டி எடுக்க வேண்டும் என்று கேட்டபோது, ‘‘நந்தனத்தில் எங்கள் சொந்தக்காரர் வீட்டில் தங்கியிருக்கேன். 2 மணிக்கு வந்துடுங்க’’ என்றார்.

‘‘சரி, நாளை மதியம் 2 மணிதானே..?’’ என்று உறுதிப் படுத்திக்கொள்ள கேட்டோம்.

‘‘இல்லை, இன்று இரவு 2 மணிக்கு’’ என்று சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

அன்று இரவு சரியாக 2 மணிக்கு நந்தனத்தில் அவரைச் சந்தித்தோம். ‘‘மன்னிக்கனும், உங்கள சிரமப்படுத்திட்டேன். வழக்கமா, இரவு 2 மணிக்கு வந்து பாருங்கன்னு சொன்னா, என்னை கிறுக்கன்னு நினைச்சுட்டு, நிச்சயம் 99% பேர் வரமாட்டாங்க. அதனாலத்தான் அப்படிச் சொன்னேன். இயற்கை மேல நேசம் உள்ளவங்க மட்டும், நேரம் காலம் பார்க்கமா என்னை சந்திப்பாங்க. சும்மா பேருக்கு பேசறவங்கள தவிர்க்கத்தான், என்னுடனான சந்திப்பை, இந்த மாதிரி நேரத்துல வைச்சுக்கிறேன். அந்த வகையில் நான் வைச்ச பரீட்சையில நீங்க பாஸாயிட்டீங்க’’ என்று சொல்லிவிட்டு மெள்ள பேசத் தொடங்கினவர், அவரது மரம் வளர்ப்புக் கதையை சொல்லி முடிக்கும்போது, காலை 7 மணி ஆகியிருந்தது.

குடும்பச் சூழ்நிலையால், லாரிகளில் மூட்டை தூக்கி வாழ்ந்தது முதல் நெதர்லாந்து நாட்டு பல்கலைக்கழகம் சிறப்பு டாக்டர் பட்டம் கொடுத்தது வரை ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக காட்சிப்படுத்தி பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு வாய்ப்பு கிடைக்கும்போது அவரது பண்ணைக்கும், அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பார். இ.ஆர்.ஆர். சதாசிவத்தின் கையில், எப்போதும் ஓஷோவின் புத்தகம் இருக்கும். நீண்ட நேரம் அமைதியாக இருப்பார். அவராக விரும்பினால் மட்டுமே பேசுவார்.

‘‘காட்டுக்குள்ள சுத்தும்போதுதான் ஒவ்வொரு மரத்தோட தன்மை, குணாம்சம், அது நம் உயிர் மண்டலத்துக்கு எந்த அளவுக்கு உதவியா இருக்குன்னு புரிஞ்சது. இந்த புரிதலுக்காக பல புத்தகங்கள தேடித்தேடி படிச்சேன். ஆராய்ச்சியும் பண்ண ஆரம்பிச்சேன். காய்கறிகளில் கத்திரிக்காய், முள்ளங்கி போல, காடுகள்லயும் மரக்கத்திரிக்காய், மரத்தக்காளி எல்லாம் உண்டு. 500 ஆண்டுகளுக்கு முன்பு மெசபடோமியா, ஈராக் போன்ற நாடுகள்ல கடுமையான பஞ்சம் தலைவிரிச்சி ஆடியிருக்கு. அப்போ அந்த மக்கள் சந்தன மர விதைகளையே ஆறு மாதங்கள் உண்டு வாழ்ந்திருக்காங்க. இந்த சந்தன விதைகளை பொடி செஞ்சு உப்புமா கிண்டலாம். லட்டு செய்யலாம். மாவா அரைச்சு தோசை சுடலாம். இப்படி மனிதனுக்கு நேரடியாக உணவளிக்கும் 240 மர வகைகள் இருக்கு...’’ என்று மரங்களின் மகத்துவத்தை பாடமாக சொல்லுவார்.

நாடு முழுக்க மரம் வளர்ப்பு ஆலோசனை சொல்லும் பணிகளை அமைதியாக செய்து வந்தார். 15 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி-தஞ்சாவூர் சாலையில் செங்கிப்பட்டி அருகே உள்ள மு.சோளகம்பட்டி கிராமத்தில், தன் நண்பர்கள் துணையோடு நூற்றுக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்களை வாங்கினார். மண்ணின் தரத்துக்கு ஏற்ப மா, பலா, தேக்கு, ஈட்டி, செஞ்சந்தனம், பேரீச்சை என விதவிதமான மரங்களை நட்டார். மூன்று இடங்களில் தலா பத்து ஏக்கரிலான குளங்களை வெட்டி அதில் மழை நீரை சேமித்தார். சுயதேவைக்கு சோலார் மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்கிறார். தரிசாகக் கிடந்த அத்தனை ஏக்கர் நிலமும் சோலைவனமானது. சதாசிவத்தின் சோலைவனத்துக்கு வெளிமாநிலங்களிலிருந்தும் பலர் வந்து பாடம் படித்துக் கொண்டு போகிறார்கள். தேக்கு, செஞ்சந்தனம், ஈட்டி உள்ளிட்ட 200 வகை மரங்கள் வளர்ந்து செழித்து நிற்கின்றன. மழை நீரை வைத்தே மரங்களை வளர்த்து, வசதியாக வாழ முடியும் என்று செயல்படுத்திக் காட்டியுள்ளார்.

‘‘கோயம்புத்தூர் சுத்து வட்டாரத்துல இருக்கிற தரிசு நில விவசாயிகளிடம் பேசி, என்னோட மரம் வளர்ப்பு நுட்பத்தை சொல்லி, அவங்களுக்கும் லாபம் கிடைக்க வைச்சேன். இதை மையமா வைச்சு மழையை மட்டுமே நம்பி, மரம் வளர்ப்புல லாபம் எடுக்க முடியும்ங்கிறதை ஒட்டுமொத்தமா மு.சோளகம்பட்டியில செஞ்சு காட்டியிருக்கேன். நான் உணர்ந்த மரங்களோட அற்புதத்தை இந்த உலகுக்கு அர்ப்பணிக்கணும்ற நோக்கத்தோடுதான், இங்கே இந்த காடுகளை உருவாக்கியிருக்கேன். இயற்கை மேல ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த பண்ணையின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்’’ என்று சத்தமில்லாமல் சொல்கிறார் இந்த சாதனை மனிதர் சதாசிவம்.

-ஆறுச்சாமி

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close