Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எல்லாமே ஜாலியில்லை!

'எதையுமே சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் கலாய்த்து தள்ளுவதும், காரண காரியம் புரியாமல் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து, லைக்ஸ், கமெண்ட்ஸ் அள்ளுவதும்தான் 'டிரெண்டி'யாக இருப்பது' என்கிறது இப்போதைய சமூகம். குறிப்பாக சினிமாவில் இந்த நிலைப்பாடு மிக மிக மோசம்!

ஒரு திரைப்படம் என்பது இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என தனிப்பட்ட மனிதர்களுடைய உழைப்பில் உருவாகுவது கிடையாது.

சினிமா ஆசையோட ஊர்ல திரியாம, வீட்டுல எப்பாடுபட்டாவது 'நான் இயக்குநர் ஆகிடுவேன்'னு நம்பிக்கை கொடுக்கணும். பெரும்பாலும் இது முடியாதுங்கிறதால, வீட்டை எதிர்த்து சென்னைக்கு வண்டி ஏறுவதைத் தவிர வேறு வழி கிடையாது. ஓகே. வண்டி ஏறியாச்சு. ஆசையோட இருந்தா போதுமா? உதவி இயக்குநர் என்ற நிலைக்கு வரவே பல தடைகளைத் தாண்டணும். சினிமா உலகைப் பொறுத்தவரை லைட் பாயாக வேலை பார்ப்பவரிடமிருந்து, பெரிய தயாரிப்பாளர்களைப் பொறுத்தவரை வாய்ப்பு தேடி ஒருவர் வந்தால் அவர்கள் பார்வையில் வாய்ப்பு கேட்பவர்கள் தீண்டத்தகாதவர்களே!

எப்படியோ உதவி இயக்குநர் என்ற பொறுப்புக்கு வந்துவிட்டோம். பிறகென்ன? நடிகைகளுக்கு வியர்க்கும்போது ஃபேன் பிடிக்கணும், இயக்குநருக்குக் குடை பிடிக்கணும், தயாரிப்பாளர் மிதித்து நடக்க குனியவேண்டிய நிலைமையும் வரும். அத்தனையையும் சில வரிகளில் அடக்க முடியாது. ஒருவழியாக இணை இயக்குநர் ஆகிவிட்டால் கொஞ்சம் கெத்து காட்டலாம். அதே 'கெத்து'தான் தயாரிப்பாளரிடம் தைரியமாய் கதை சொல்ல வைக்கும். கதை சொல்லி, ஆபீஸ் போட்டு... இப்போது திரைக்கதை வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். 'ஒன்லைன்' என்கிற ஒரு வரிதான் அத்தனை சினிமாவுக்கும் அஸ்திவாரம். ரசிகர்கள் இந்தப் படத்தை ரசிப்பார்களா? படம் வெற்றி பெறுமா? வரவேற்பு இருக்குமா? என்பதையெல்லாம் யோசிக்க வேண்டியது இந்த 'ஒன்லைன்' விஷயத்தில்தான். இந்த ஒரு வரியை நீட்டி, முடக்கி திரைக்கதை முடிக்க குறைந்த பட்சம் 40, 50 பேரிடம் ஆலோசனை, விவாதம் நடத்தியிருப்பார் இயக்குநர். நாட்டில் இலவசமாகக் கிடைப்பதும், தேவைக்கு அதிகமாகக் கிடைப்பதும் இந்த அட்வைஸ்தானே?

ஆளாளுக்கு கதையைக் குத்திக் கிழிப்பார்கள். இயக்குநரின் மனநிலை கொஞ்சம் பதட்டமாகவும் இருக்கும், சந்தோஷமாகவும் இருக்கும். இனி ஷூட்டிங். 60 நாள் ஷூட்டிங்கில் தயாரிப்பாளரின் தலையீடு, 'ஏ/சி வேலை செய்யலை' காரணத்துடன் எழுந்துபோகும் ஹீரோயினைச் சமாளிப்பது, திட்டமிட்டபடி ஷூட்டிங் நடக்காவிட்டால் ஏற்படும் சண்டை சச்சரவுகள்... இப்படி அத்தனை தலைவலியையும் வெற்றிகரமாக 'பூசணிக்காய்' உடைத்து முடிக்கணும். இப்பவும் 'அப்பாடா' என அமர்ந்துவிட முடியாது. இப்போதைய 'டிரெண்டி'யான 'படத்திற்குத் தடைவிதிக்க வேண்டும்' வேதாளம் முருங்கை மரம் ஏறும்!

'படத்தில் ஹீரோவின் பெயர் என் பெயரை இழிவுபடுத்துவதாக உள்ளது' ரேஞ்சுக்கு இறங்கி தடைகேட்டுப்  போராடுவார்கள். கூடுதலாக ஏதோ ஓர் அரைகுறை அரசியல் புள்ளி தடைகேட்கும் கும்பலுக்கு ஆதரவு தெரிவித்தால் போச்சு. 'படம் ரிலீஸாகலைனாலும் பரவாயில்லை; போன பணம் போதும்' நிலைக்குத் தயாரிப்பாளர் தலையில் கை வைப்பார். வேறு வழியே இல்லாமல், இயக்குநர் சமாதானம் பேச, ரிலீஸ் தேதி குறிக்கப்படும். பத்திரிகைகளில் விளம்பரம் வரும். முதல் காட்சி, முதல் அரை மணி நேரம் படம் முடிந்திருக்காது. உங்கள் 'டிரெண்டி' விமர்சனம் ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ் அப், ட்விட்டரிலும் பறந்துகொண்டிருக்கும். 'முதல்பாதி பரவாயில்லை; இரண்டாம் பாதி தேவையேயில்லை' ரீதியில் புரளும் டிரெண்டி விமர்சனங்களை படித்துக்கொண்டிருக்கும் படம் பார்க்க விரும்பிய அத்தனை பேரின் மன நிலையிலும், தீயை கொளுத்தும். ஒருவேளை, 'கொஞ்சம் நியாயமா, நடுநிலையா விமர்சனம் பண்ணுங்களேன்'னு சினிமாவில் இருப்பவர்கள் குரல் கொடுத்தா அவ்வளவுதான் 'என் கீ போர்ட்; என் விரல்' என வெடித்துக் கிளம்புவார்கள்.

காமெடியாகப் படமெடுத்தால், மொக்கை காமெடி. சீரியஸாகப் படமெடுத்தால், செம ஸ்லோ. இயக்குநர் தன் படைப்பை அழகியலாக அடுக்கினால், ஒண்ணுமே புரியலை. ஆக்‌ஷன் படத்துக்கு, ஸ்ஸ்ஸ்ஸப்பா முடியல. ஹீரோயிஸம் பேசினால், எப்ப சார், கெட்டப்பை மாத்துவீங்க? கமெண்ட்ஸ். சினிமா துவங்கியதில் இருந்து இன்று வரை படைப்புகள் பரிணாமம் அடைந்ததற்கு பெரும்பாலும் படைப்பாளிகள் காரணமாக இருப்பதில்லை. காலத்திற்குத் தகுந்தாற்போல மாறிக்கொண்டிருந்த ரசிகர்களின் மனநிலை அடிப்படையில்தான் படைப்பாளிகள் தங்கள் கற்பனையை இயக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாதது.

ஒவ்வொரு சினிமாவுக்கும் ஏதோ ஒருவகையில் நம்முடைய ரசனையும் காரணம். ஆனால், மொழியே புரியாத உலக சினிமாக்களைப் புகழ்ந்துதள்ளும் நமக்கு, பக்கத்து மாநிலங்களில் உருவாகிற இந்தி, மலையாளம், தெலுங்குப் படங்களைப் புகழ்ந்து தள்ளும் நமக்கு, நம் ஊர் சினிமா நன்றாகவே இருந்தாலும் 'பரவாயில்லை'யுடன் நிறுத்திக்கொள்ளவே கற்றுக் கொடுத்திருக்கிறது 'டிரெண்டி'. 'விமர்சனங்கள் எப்படியும் எழுதுங்கள். 'அடுத்த படம் நல்லா பண்ணுங்க' என்பதைக் கடைசி வரியாகக்கொண்டு' என்றார் இயக்குநர் மிஷ்கின். அப்படியா சொல்றீங்க? அப்போ, எங்க கடைசி வரி இதுதான் என 'இனி படமே எடுக்காதீர்கள்!' என சியர்ஸ் அடித்துச் சிரித்த நெட்டிசன்கள் நாம்.

இப்படியே போனால் இந்த 'எல்லாமே ஜாலி' மனநிலை பல நல்ல படைப்புகளை மட்டுமல்ல, படைப்பாளிகளையும் கொல்லும்!

- கே.ஜி.மணிகண்டன்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ