Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாளை காலை அவர்கள் இருக்க மாட்டார்கள்!

- டி.அருள் எழிலன்

வெள்ளை நிற மேலாடையில் சுடுவதற்கான சிவப்பு நிற அடையாளம் இடப்பட்ட ஆடையை மயூரன் சுகுமாறனுக்கு அணிய இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. நாளை அதிகாலை நுஸகம்பகன் சிறையில் சுட்டுக் கொல்லப்படவிருக்கும் 9 மரண தணடனை கைதிகளுள் சுகுமாறனும், ஆன்ட்ரூ சானும் அடங்குவார்கள்.

2005, ஏப்ரல் 17-ம் தேதி பாலி தீவில் கைதானார் மயூரன். ஒன்பது பேரை போதைப்பொருட்களோடு இந்தோனேஷியா காவல் துறை அதிரடியாகக் கைது செய்து ஊடகங்கள் முன்பு நிறுத்தியபோது, அன்று அதுதான் தலைப்புச் செய்தி. கைதானது இந்தோனேஷியாவில் என்றாலும், கைதானவர்களில் அதிகமானவர்கள் ஆஸ்திரேலியா குடிமக்கள். அந்த அதிரடிக் கைது வழக்குக்கு இந்தோனேஷியா அரசு வைத்த பெயர் 'பாலி-9’. பாலி  9 வழக்கில் ஆஸ்திரேலிய தமிழரான  மயூரன் சுகுமாறனுக்கும், ஆன்ட்ரூ சானுக்கும்  மரண தண்டனை  விதித்து தீர்ப்பளித்தது இந்தோனேஷிய நீதிமன்றம்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாலி தீவில் இருக்கும் சிறையில் இருந்து, தடை செய்யப்பட்ட கடற்கரை தீவான நுஸ்கம்பகனில் இருக்கும் சிறைக்கு இருவர் உட்பட வேறு சில கைதிகளையும் மாற்றியது இந்தோனேஷிய காவல்துறை. கடந்த சனிக்கிழமை இன்னும் 72 மணி நேரத்திற்குள் மரண தண்டனையை நிறைவேற்றப் போவதாக அறிவித்திருக்கும் நிலையில் இந்த ஒன்பது பேரும் யார்?

ஆஸ்திரேலியா வாழ் தமிழரான  மயூரன் சுகுமாறன், ஆஸ்திரேலியா வாழ் சீன வம்சாவளியான  ஆன்ட்ரூ சான், பிலிப்பைன் பெண்  மேரி ஜேன் வெலோசோ, நைஜீரியாவின் ஜாமையூ ஔலாபி, நைஜீரியாவின் மார்ட்டின் ஆண்டர்சன், பிரேசில் நாட்டைச் சார்ந்த  ரோட்ரிகோ குலார்ட், நைஜீரியாவின்  சில்வெஸ்டர் ஓபியெக்வெய்,  பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த செர்க்ஜி அட்லோயி, இந்தோனேஷியாவின் சைனல் ஆப்தீன், நைஜீரியாவின்  ஆக்குவாடிலி  என 9 பேர் நாளை மரண தண்டனையை எதிர்நோக்குகின்றனர்.

வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவருமே போதை பொருள்  வழக்கில் தொடர்புடையவர்கள் என்றாலும், அத்தனை பேருமே வறிய நிலையில் இருந்து வாழ்வை தொலைத்தவர்கள். அதிலும் பிலிப்பைன் பெண்ணான மேரி ஜேனின் வாழ்க்கை துயரமானது. அவர் கணவனால் கைவிடப்பட்டவர் இரு குழந்தைகளின் தாய். தன் தோழி ஒருத்தியின் அறிவுரையால் வேலை தேடி இந்தோனேஷியா சென்று செல்லும்போது, ஒரு உதவியாக பை ஒன்றை கொண்டு சென்றபோது அந்த பைக்குள் ரகசியமாக வைத்து தைக்கப்பட்டிருந்தது ஹெராயின்.

வெள்ளந்தியான ஜேன், ‘’நான் அழுகிறேன் அதை தவிற எனக்கு வேறு எதுவுமே தெரியவில்லை “ என்கிறார்.

மயூரன் சுகுமாறனோ, சிறையில் ஓவியம் வரைந்து கொண்டே இருந்தார். மரணதண்டனை நிறைவேற்றுவதற்காக நுஸ்கம்பகனுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னரும் கூட சுகுமாறன் பல ஓவியங்களை தீட்டினார். மரணத்தை எதிர்நோக்கும் மன நிலையின் வெளிப்பாடாக சுகுமாறனின் ஓவியங்கள் இருக்கின்றன. 

இறுதியாக கடந்த 28 ஆம் தேதியிட்டு வரைந்த ஓவியத்துக்கு 'one heart, one feeling in love' என பெயர் வைத்திருக்கிறார் சுகுமாறன். அந்த ஓவியத்தின் பின்பக்கத்தில், நாளை அதிகாலை மரணதண்டனையை எதிர்நோக்கும் ஒன்பது பேரும் கையொப்பம் இட்டிருகிறார்கள்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்களும், இப்போதைய பிரதமர்  டோனி அபாட் உட்பட பல மனித உரிமையாளர்களும், கலைஞர்களும், விடுத்த கோரிக்கைகளை நிராகரித்து விட்டது இந்தோனேஷிய அரசு. ஐநாவின்  மனித உரிமை மையத்தின் கோரிக்கையையும் நிராகரித்து விட்ட இந்தோனேஷிய அரசு, ஒன்பது பேரின் தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஷூட்டிங் ஸ்குவாடையும், ஒன்பது சவப்பெட்டிகளையும் சிறைக்குள் அனுப்பி விட்டது.

நாளை புதன்கிழமை அதிகாலை, ஒரு ஓவியன் உட்பட ஒன்பது மனித உயிர்களை இந்தோனேஷிய அரசு கொலை செய்திருக்கும்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ