Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விண்வெளியில் இருக்கும் தந்தைக்கு கார்கள் மூலம் கடிதம்: மகளின் பாசப் போராட்டம்!

புறா விடு தூது, காக்கை விடு தூது, ஏன் எருமை விடு தூது கூடக் கேள்விப்பட்டிருப்பீர்கள்... கார் விடு தூது தெரியுமா?

இது காமெடி விஷயம் கிடையாது நண்பர்களே!

ஒரு சென்டிமெண்ட் விஷயம் - இப்போது கின்னஸ் வரை வந்து சாதனை படைத்திருக்கிறது. விண்வெளியில் இருக்கும் ஆராய்ச்சியாளர் ஒருவருக்கு, ஹூண்டாய் நிறுவனம் தனது ஜெனிஸிஸ் கார்கள் மூலம் மெசேஜ் சொன்ன சம்பவம், கின்னஸ் சாதனையில் இடம் பிடித்திருக்கிறது. என்னது... கார்? விண்வெளி? மெசேஜ்? எதுவும் புரியவில்லையா?

ஹூண்டாய், கின்னஸில் இடம் பெறக் காரணம் - ஸ்டெஃபானி என்கிற 8 வயது சிறுமி. அமெரிக்காவின் டெக்ஸாஸைச் சேர்ந்த ஸ்டெஃபானிக்கு, தந்தை என்றால் ரொம்பப் பாசம். ஆனால், தந்தையோ ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளர். வருடத்திற்கு இரண்டு முறைதான் வீட்டுக்கு வருவார். விண்வெளி மையம் கொடுத்த ஒரு புரொஜெக்ட்டை முடிப்பதற்காக, வழக்கம்போல் மகளுக்குப் பாச முத்தங்களை வழங்கிவிட்டு ஸ்டெஃபானியின் தந்தை கிளம்பி 7 மாதங்களாகி விட்டன. ஆனால், ஸ்டெஃபானிக்கு தந்தையின் நினைவு வாட்டியது. ‘அப்பாக்கு நான் லெட்டர் எழுதணும்!’ என்று தந்தையின் சக பணியாளர்களிடம் சொல்ல, ‘போன் அல்லது இ-மெயில் மூலமா பேசிக்கோம்மா’ என்று பதில் கிடைத்தது. ஆனால் ஸ்டெஃபானிக்கோ, போன், இ-மெயிலைவிட, உணர்வுப்பூர்வமாக தான் கைப்பட எழுதிய கடிதம் தனது தந்தையிடம் போய்ச் சேர வேண்டும் என்று ஆசை. என்ன செய்யலாம் என்று ஸ்டெஃபானிக்கு உறுதுணையாக யோசித்து ஹூண்டாய்.

விளைவு - ஹூண்டாய் இப்போது கின்னஸில் இடம் பிடித்திருக்கிறது. ஸ்டெஃபானி, தான் கைப்பட எழுதிய ‘‘ஸ்டெஃபானி லவ்ஸ் யூ’ என்ற வாசகத்தை, அப்படியே பூமியில் உருவாக்கி, விண்வெளியில் இருக்கும் சிறுமியின் தந்தையை தொலைநோக்கி மூலம் காணச் செய்வதுதான் திட்டம். கொரியா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளிலிருந்து ஹூண்டாய் நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் இந்த மாஸ்டர் பிளானுக்காக வரவழைக்கப்பட்டனர். இந்த வாசகங்களை கார்களின் டயர் தடங்களைக்கொண்டு பதிப்பதற்காக, 11 ஜெனிஸிஸ் கார்கள் இறக்கப்பட்டன.  அந்த கார்களுக்கு ஆணிகள் பதிக்கப்பட்ட டயர்கள் பொருத்தப்பட்டன. இதனால், காரின் டயர்கள் எழுத்தாணியாக மாறின.

அமெரிக்காவின் நெவடா பாலைவனத்தில் உள்ள டெலாமர் டிரை லேக் என்னும் பாலைவனப் பகுதி இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 11 அசகாய டிரைவர்கள், சுமார் 5.55 சதுர கி.மீ பரப்பளவுக்கு கார்களின் டயர் தடங்களைக்கொண்டு ‘ஸ்டெஃபானி லவ்ஸ் யூ’ என்ற வாசகத்தை அச்சு அசலாகப் பதிவு செய்தனர். இதுதான் உலகின் மிகப் பெரிய கார் டயர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தடம். இதற்குத்தான் கின்னஸ் சாதனை!

விண்வெளியில் உள்ள மிதக்கும் ஆய்வு மையத்திலிருந்து, பாலைவனத்தில் பதிவு செய்யப்பட்ட வாசகத்தை தொலைநோக்கி மூலம் பார்த்ததும் நெக்குருகி அழுதே விட்டாராம் ஸ்டெஃபானியின் தந்தை. பூமியை விட, விண்வெளியை விட பரந்து விரிந்து தெரிந்தது ஸ்டெஃபானியின் அன்பு!

- தமிழ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ