Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

103 வயது மாப்பிள்ளை, 91 வயது மணப்பெண்!

மாப்பிள்ளை ஜார்ஜ், மணப்பெண் டொரீனிடம் முட்டிக்கால் இட்டு ‘ஐ லவ் யூ’ சொன்னால், எழுவது சிரமம். ஏனென்றால், மாப்பிள்ளைக்கு வயது 103! எனில் பெண்ணுக்கு..? 91!

எங்கே பூத்த காதல் இது!

பிரிட்டனைச் சேர்ந்த ஜார்ஜ், 1988-ம் ஆண்டு, தன் 76 வயதில் டொரீனைச் சந்தித்தார். அப்போது டொரீனுக்கு வயது 64. முதியவர்கள் தங்களுக்கான நட்பைத் தேடும் அமைப்பு ஒன்று, இவர்களை ஒருவருக்கு ஒருவர் அறிமுகப்படுத்தியபோது, ஜார்ஜுக்கு அப்போதுதான் விவாகரத்தாகி இருந்தது. டொரீனின் கணவர், மூன்று வருடங்களுக்கு முன் இறந்திருந்தார். இரண்டு வருடங்கள் தோழமையுடன் பழகிய இருவரும், பின் ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து, ஒரே வீட்டில் குடியேறினர். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பின், ஒருவழியாக இப்போது இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள்!

‘‘சென்ற காதலர் தின டின்னரின்போது தான், டொரீனிடம், ‘நாம் திருமணம் செய்து கொள்ளலாமா?’ என்று கேட்டேன். அவர் ‘யெஸ்!’ சொன்ன நொடி, எனக்கு மிகவும் பொக்கிஷமானது!’’ - பரவசமாகிறார் தாத்தா.

ஜார்ஜ், டொரீன் இருவருக்கும் தங்களின் முந்தைய திருமண வாழ்வில் ஏழு குழந்தைகளும், 15 பேரன், பேத்திகளும், 7 கொள்ளுப் பேரன், பேத்திகளும் உள்ளார்கள். ஜார்ஜ்-ன் மகன் நெயிலுக்குச் சொந்தமான ஓட்டலில்தான் இவர்களின் திருமணம் நடக்கவிருக்கிறது. திருமண வேலைகளில் பரபரப்பாக இருக்கும் நெயில், ‘‘இது எங்கள் குடும்பத்தின் ஆழகான, ஆனந்தமான நிகழ்வு. மேலும், இது உலக ரெக்கார்டும் கூட!’’ என பூரிக்கிறார்.

ஆம்... திருமணத்தின்போது ஜார்ஜ் - டொரீன் வயதின் கூட்டுத்தொகை 194 வருடங்கள், 281 நாட்களாக இருக்கும். இதற்கு முன் 2013-ல் ஒரு திருமணத்தின் மூலம் பதிவு செய்யப்பட்ட தம்பதி வயதின் கூட்டுத்தொகையான 188 வருடங்களை, இவர்கள் முந்துகிறார்கள்.

‘‘ஃபிஸிக்கல் எஜுகேஷன் பயிற்சியாளராக தன் வாழ்க்கையைத் தொடங்கிய ஜார்ஜ், ஒரு சிறந்த பாக்ஸிங் வீரர். தான் கலந்துகொண்ட 60 போட்டிகளிலும் வென்றவர். 94 வயதில் அவர் தம்பெல்ஸுக்கு ஓய்வு கொடுத்தாலும், என் தோட்டத்தை பராமரிப்பதில் இப்போதும் தன்னை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்கிறார்!’’ என்று டொரீன் கன்னம் சிவக்க, ‘‘எங்கள் திருமண நிகழ்வில் பரிசுப் பொருட்களை நாங்கள் தொகையாகப் பெற விரும்புகிறோம். அந்தத் தொகை, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இரண்டு அறக்கட்டளைகளுக்குத் தரப்படவிருக்கிறது!’’ என்கிறார் ஜார்ஜ்.
 
‘‘இந்த வயதில் திருமணம் செய்வதை எப்படி உணர்கிறீர்கள்..?’’

‘‘வயதா..? அது மனது சம்பந்தப்பட்ட விஷயம். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் இளமையாக வைத்துக்கொள்கிறவர்கள்; ஒருவருக்காக ஒருவர் இளமையாக இருக்கிறவர்கள்!’’ - கைகள் கோர்க்கிறார்கள் பாட்டியும், தாத்தாவும்!

காதில் நரைத்த முடி கன்னத்தில் குத்தினாலும் காதல் காதல்தான்!

 - இனியா

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close