Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துகிறீர்களா... எச்சரிக்கை!

டைவீதிக்கு காய்கறி வாங்க சென்றாலும் வெறும் கையோடு போவதுதான் இப்போது மார்டனாகி விட்டது. அப்பாக்கள் கையில் இருந்த மஞ்சள் பையும், அம்மாக்கள் வழக்கமாக பயன்படுத்தும் வயர் கூடையும் கண்ணில் படுவதே இல்லை.

இப்போது, 'அண்ணே... ஒரு கவர் கொடுங்க!' என கேட்பது சர்வ சாதாரணமாகி விட்டது. 'பிளாஸ்டிக்கை ஒழிப்போம்!' என எவ்வளவோ பிரசாரம் செய்தாலும், நாம் வழக்கம் போல பிளாஸ்டிக்கோடு பிரிக்க முடியாத நண்பர்களாகிவிட்டோம்.

 டீ, காபி, சுடச் சுட டிபன் எல்லாம் பிஸாஸ்டிக் கவர்களில் சூடுபறக்க கட்டிக்கொண்டு ஹாயாக சாப்பிடுகிறோம்.

இந்நிலையில், திருச்சி மாநகராட்சியில் நேற்று காலை நடந்த அவசரக் கூட்டத்தில், 40 மைக்ரான் தடிமனுக்கு குறைவாக கேரி பேக்குகள் உற்பத்தி செய்தாலோ, இருப்பு வைத்து விற்பனை செய்தாலோ ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

திருச்சி மாநகராட்சியின் மேயர் ஜெயா தலைமையில், கமிஷனர் விஜயலட்சுமி, துணைமேயர் சீனிவாசன் முன்னிலை துவங்கிய இந்த அவசரக் கூட்டத்தில்,

"பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மற்றும் கையாளுதல் விதிகள்படி திருச்சி மாநகராட்சிக்குள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி கடிதப்படி, 40 மைக்ரான் தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் கேரி பேக்குகளை முற்றிலும் தடை செய்வதும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகளை இருப்பு வைப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது" என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

கையோடு இன்று காலை 11.30 மணிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி உத்தரவின் பேரில், திருச்சி மாநகராட்சியின் நகர நல அலுவலர் மாரியப்பன் தலைமையிலான குழுவினர்,  திருச்சி மலைக்கோட்டை அருகே உள்ள சின்ன கடை, பெரியக்கடை உள்ளிட்ட கடைவீதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட தரம் குறைவான பிளாஸ்டிக் பைகள் கண்டுபிடிக்கப்பட்டதுதான் பேரதிர்ச்சி.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அதிகாரிகள், ''மறுசுழற்சிக்கு பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட கேரி பேக்குகளில், உணவு பொருளை சேகரித்து வைக்கவோ, எடுத்துச் செல்லவோ, விநியோகம் செய்யவோ, பொட்டலம் கட்டவோ பயன்படுத்தக்கூடாது. மக்கும் தன்மையுடைய பிளாஸ்டிக் அல்லது மறு சுழற்சி முறையில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக்கால் ஆன கேரி பேக்குகள் இந்திய தர நிர்ணய சான்று ஐ.எஸ். 14534- 1998ன்படி இருத்தல் வேண்டும்" என்றனர்.

புள்ளிவிபரங்கள் என்ன சொல்கின்றன,

ஒவ்வொரு வருடமும், உலகில் 50 ஆயிரம் கோடி பிளாஸ்டிக் பைகள் விற்பனையாவதாக புள்ளிவிபரங்கள் சொல்லப்படுகிறது.  இதில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு குறைவுதான். ஆனால், அந்த பிளாஸ்டிக் பேக்குகள் ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாது என்பதுதான் வேதனை.

கடந்த சில வருடங்களுக்கு முன் பிளாஸ்டிக் பைகளை கடைகளில் விற்க தமிழக அரசு தடை விதித்தது. அப்போது  பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக காகிதம், சணல், துணி பைகளைப் பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளதா என்றால் இல்லை,

கடைகளில் பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்கள், தாங்கள் வாங்கும் பொருட்களை எடுத்துச் செல்ல பிளாஸ்டிக் பைகள் வேண்டும் என்று கேட்டால் கண்டிப்பாக தரக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை கடைகளில் இலவசமாக தரப்பட்ட பிளாஸ்டிக் பைகள், இப்போது பெரும்பாலான கடைகளில் மறைத்து வைத்து காசுக்காக விற்கப்படுகின்றன.

40 மைக்ரான் தடிமனுக்கு குறைவான மெல்லிய பிளாஸ்டிக் பைகளை  மறுசுழற்சி செய்ய முடியாது. இவை இப்போது அதிகளவில் உபயோகிக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம். சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, மண்ணில் புதையும் பிளாஸ்டிக் பைகள் மழைநீர் பூமிக்குள் செல்வதைத் தடுக்கிறது என குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இந்த பிளாஸ்டிக் பைகளை எரிக்கும்போது ஏற்படும் புகையால் மனிதனுக்கு சுவாசக் கோளாறு, பாலினக் குறைபாடு, புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக சொல்லப்படுகின்றது.

அரசு என்னதான் அறிவுறுத்தினாலும் நான் செய்வதைதான் செய்வேன், என்னை யார் கேள்வி கேட்பது எனக்கூறும் பிதாமகன்கள் இருக்கும்வரை பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்தமுடியாது.

ஒன்றுமட்டும், ஐந்து நிமிட பயன்பாடு, அடுத்த தலைமுறையை அவதி படவைக்கும் என்பதை மறந்துவிடவேண்டாம்...!

சி.ஆனந்தகுமார்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close