Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மே 2: ஆஸ்கார் நாயகன் சத்யஜித் ரே பிறந்ததின சிறப்பு பகிர்வு!

சத்யஜித் ரே இந்திய சினிமாவின் போக்கை மாற்றிய இணையற்ற திரை நாயகன். எளிமையாக வாழ்க்கையை வாழ்ந்த மனிதர் இவர். மொத்தம் வாழ்நாளில் எடுத்ததே முப்பத்தி ஆறு படங்கள் தான். ஆனால், அவர் இந்திய சினிமாவை மடைமாற்றியவர். அப்பா இளம் வயதிலேயே தவறி விட அம்மாவின் சொற்ப வருமானத்தில் தான் வாழ்க்கை கழிந்தது அவருக்கு.

தாகூரின் சாந்தி நிகேதனில் சேர்ந்து ஓவியம் கற்றுத்தேறிய பொழுது அப்படி ஒரு ஆனந்தம் அவருக்கு உண்டானது .அங்கே தாகூரிடம் தன் பிறந்த நாளுக்கு வாழ்த்து பெற போனார்; ஒரு படபடக்கும் தாளில் ஒரு கவிதை எழுதி தந்து இதைப் பெரியவன் ஆனதும் படி என்று கொடுத்து விட்டு போய் விட்டார். இவர் ஒரு விளம்பர நிறுவனத்தில் மாதம் எண்பது ரூபாய்ச் சேர்ந்தார். அங்கே நன்றாகப் போய்க்கொண்டு இருந்தாலும் அடிக்கடி ஆங்கிலேயருக்கும் இந்தியர்களுக்கும் சச்சரவு உண்டானது, கூடவே வாடிக்கையாளர்களின் ரசிப்புத்தன்மை வெறுப்பு உண்டு செய்ய வெளியேறினார் மனிதர்.புத்தக நிறுவனம் ஒன்றில் சேர்ந்து அட்டைப்பட ஓவியங்கள் வரைய ஆரம்பித்தார். நேருவின் டிஸ்கவரி ஆப் இந்தியா நூலுக்குக் கூட ஓவியம் வரைந்திருக்கிறார்.

பின் ழான் ரீனோர் எனும் பிரெஞ்சு திரைப்பட இயக்குனரை பார்த்ததும், பைசைக்கிள் தீவ்ஸ் படமும் அவரைப் படம் எடுக்கு உந்தி தள்ளியது. தாகூர் கொடுத்த கவிதை தாளை பிரித்துப் பார்த்தார்;

“உலகம் முழுக்க
எத்தனையோ நதிகள் நீர்நிலைகளுக்கு
சென்று இருக்கிறேன் ;
இறைவா
ஆனால்
என் வீட்டின்
பின்புறம் இருந்த சிறிய புல்லின்
நுனியில் தவழ்ந்து சிரிக்கும்
பனித்துளியை கவனிக்க
தவறி விட்டேன்"
எனும் வரிகள் அவரை உலுக்கின.

ஆனால் தன் முதல் படத்தை வங்கத்தின் தலை சிறந்த நூலான பதேர் பாஞ்சாலியை படமாக்க முடிவு செய்தார்.

மூன்று வருட போராட்டம்; நிதி இல்லை. மனைவியின் நகைகளை அடமானம் வைத்தார். கொஞ்சம் பகுதிகள் எடுத்த பொழுது படம் நின்று போனது; அரசிடம் படத்துக்கு நிதி கேட்டார் முதல்வர் பி சி ராய் அதிகாரிகளைப் படத்தைப் பார்க்க சொன்னார்.

"என்ன படம் இது தேறாது!" என்று விட்டனர். நேரு வரை போய் அரசாங்கத்துக்கு படத்தின் உரிமையைத் தாரைவார்த்து படமெடுக்க நிதி பெற்றார். படம் வெளிவந்த பொழுது தான் அதன் மகத்துவம் புரிந்தது .தேசிய விருது கிடைத்தது உலகம் முழுக்க மிகப்பெரும் கவனம் பெற்றது .படத்தைத் திட்டி நியூ யார்க் டைம்ஸ் எழுதியும் அமெரிக்காவில் படம் ஹவுஸ் புல்லாக ஓடியது.

பெரிய நகைமுரண் படத்தைப் பார்த்து விட்டு அந்த நாவலை எழுதிய ஆசிரியர், "என்னய்யா இப்படி சொதப்பி இருக்கே!" என்றாராம். அபராஜிதோ தங்க சிங்கம் விருதை பெற்றுத்தந்தது.

அவர் குழந்தைகளுக்காக கதைகள் எழுதிய அனுபவம் உள்ளவர். பெலூடா எனும் கதாபாத்திரம் மறக்கவே முடியாதது; அறிவியியல் புனை கதைகளும் எழுதியவர். படமெடுத்து பொருளீட்ட கூடிய தருணத்தில் திரும்ப வந்து சந்தேஷ் எனும் தாத்தா உண்டாக்கிய பத்திரிக்கையைப் புதுப்பித்து எண்ணற்ற கதைகள் எழுதினார்.

வங்கத்தின் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கையைப் படம் பிடிப்பதாக அவரின் படங்கள் இருந்தன .வறுமையைப் படமாக்கி காசு பார்க்கிறார் என விமர்சித்தார்கள். சிக்கிம் அரச பரம்பரை பற்றி இவர் எடுத்த படத்தைப் போடவே விடாமல் அரசு தடை செய்தது அவர், மரணத்துக்குப் பல ஆண்டுகள் கழித்து அப்படம் வந்த பொழுது பார்த்தால் சிக்கிமின் வனப்பை பற்றியே படம் பேசி இருக்கிறது எனத் தெரிந்தது; படத்தைப் பார்க்காமலே தடை செய்திருக்கிறார்கள்.

சாருலதா எனும் அவரின் பெண்மொழி பேசும் படத்தில் பைனாகுலரில் கணவன் வருவதை பெண் பார்த்து விட்டு கதவை திறக்கிற ஷாட்டைப் பதினைந்து நிமிடம் வைத்திருப்பார் ."ஒரு பெண் வாசலுக்கு வந்து கதவைத் திறப்பதை 15 நிமிடம் காட்டவேண்டுமா?: என ஒருவர் கேட்க , "ஒரு பெண் வாசலுக்கு வரும் ஒரு 15 நிமிடத்தை உங்களால் பொறுக்கமுடியவில்லை எனில், இவ்வளவு ஆண்டுகாலமாக வெளியே வராமலேயே இருக்கும் பெண்களைப் பற்றி உங்களுக்குக் ஒன்றுமே தெரியவில்லையா? "என்றார்

பெரும்பாலும் நல்ல நாவல்களையே படமாக்கினார். நகர வாழ்வை வெறுத்து காடு புகும் நண்பர்கள் பற்றி ஒரு படம், மகளை வேசியாக்கி விடும் அப்பா, எளிய பெண்ணைத் தேவியாக்கி விடும் மக்கள், விமானத்தில் சீட்டு கிடைக்காத காரணத்தால், இரயிலில் பயணம் செய்யும் ஒரு நடிகனுக்குப் பொது இடத்திலஏற்படும் அனுபவங்கள், அறிவுத்துணையாகத் தன் கொழுந்தனை பார்க்கும் பெண் என அவர் எடுத்துக்கொண்ட கதைக்கருக்கள் தனித்துவம் வாய்ந்தவை.

ஏலியன் என்கிற கதை ஸ்க்ரிப்டை அமெரிக்க நிறுவனத்தோடு சேர்ந்து எடுக்க முயன்று முடியாமல் நின்று போனது; அதே பாணியில் ஈ டி படம் வந்த பொழுது அதைத் தன் கதையின் திருட்டு என ரே சொன்னார்.

அவருக்குப் பிரான்ஸ் அரசு விருது வாங்கிக் கவுரவித்தது. உலகத் திரையுலக பிதாமகர் அகிரோ குரோசோவா இப்படிச் சொல்கிறார், "ரேவின் படங்களை பார்க்காதவர்கள் வானில் சூரியனையும்,சந்திரனையும் காணாதவர்கள்.”

எந்த அளவுக்கு அவருக்குத் திரைத்துறை மீது காதல் இருந்தது எனச் சொல்லி இந்த கட்டுரையை முடிக்கலாம். GhareBaire எனும் தாகூரின் கதையின் படமாக்கி கொண்டிருந்த இரண்டு முறை மாரடைப்பு வந்தது மனிதருக்க. கொஞ்ச நாளில் மீண்டு வந்தவர் எடுத்த ஒய்வு என்ன தெரியுமா? ஓயாமல் மூன்று படங்கள் இயக்கியது.

ஸ்ட்ரெச்சர் ஆம்புலனஸ் தயாராக இருக்கும் மனிதர் படம் எடுத்து கொண்டிருப்பார். மரணப்படுக்கையில் இருந்த பொழுது வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் அறிவிக்கப்பட்டது. அவரால் போக முடியாததால் ஆஸ்கர் அவர் படுக்கைக்கே வந்து சேர்ந்தது. ரே உலகை இந்தியாவை நோக்கி திருப்பிய துணிச்சல்காரர்.

- பூ.கொ.சரவணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close