Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இலாபம் தரும் பாரம்பர்ய விவசாயம்!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் தமிழ்நாட்டின் பின் தங்கிய பகுதி. இந்த பகுதி மக்களுக்கு விவசாயம், நீர், சுகாதாரம், வாழ்வாதாராங்கள், சுற்றுச்சூழல், அரசியல் விழிப்பு உணர்வு போன்ற விஷயங்களை கற்றுக் கொடுக்க, 'பாமரர் ஆட்சியியல் கூடம்'  பணியாற்றி வருகிறது. வேப்பூரில் ஏப்ரல் 30-1 மே தேதிகளில் ‘லாபம் தரும் இயற்கை விவசாயம்’ என்ற தலைப்பில் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

நிகழ்ச்சியை சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்து, "நம்மாழ்வார் சொல்லிக்கொடுத்த இயற்கை விவசாயத்தை செய்தால் நிச்சயம் விவசாயிகளுக்கு கஷ்டம் வராது. பாமரர் ஆட்சியியல் கூடத்தினர் சொல்லும் விஷயங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டதோடு, சிறுதானிய விதைகளை முன்னோடி விவசாயிகளுக்கு வழங்கினார்.

பாமரர் ஆட்சியியல் கூடத்தின் நிறுவனரும், பியூசிஎல் அகில இந்திய பொதுச் செயலாளர் டாக்டர். வீ சுரேஷ், ‘‘பின் தங்கிய ஒன்றியமான, வேப்பூர் பகுதியை, பலரும் திரும்பி பார்க்கும்படியான வகையில் பணி களை செய்ய உள்ளோம். உங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அதை செயல்படுத்த முடியாது. வளர்ச்சிக்கான  பாதை தெளிவாக தெரிகிறது. பயணத்தை தொடங்குவோம்...’’ என்றார்.

வேப்பூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் என்.கிருஷ்ணகுமார் பேசும்போது, ‘‘ வேப்பூர் ஒன்றியம் பின்தங்கிய பகுதி என்றாலும், இங்குள்ள விவசாயிகள் யாரும் சோம்பேறிகள் கிடையாது. கடுமையான உழைப்பாளிகள். சரியான விவசாய முறைகளை கற்றுக் கொள்ள ஆர்வமாகவே இருக்கிறோம். ஒரு காலத்தில், இந்த பகுதியில் கம்பு, சோளம், வரகு, சாமை என்று சிறுதானியங்கள் வீதிகள்தோறும் இறைந்து கிடந்தன.

அரிசி சோறு என்றால் விசேஷமான நாட்களில்தான் சாப்பிடுவோம். ஆனால், நிலைமை இப்போது தலை கீழாக மாறிவிட்டது. சிறுதானியங்களை பார்க்க பெரம்பலூரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு போக வேண்டிய நிலை உள்ளது. இதை மாற்றிக் காட்ட வேண்டும். இந்த சிறுதானியங்கள் சத்தானது மட்டுமல்ல, லாபகரமானது என்றும் தெரிந்து கொண்டோம்’’ என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

புதுவாழ்வு திட்டத்தின், மாவட்ட திட்ட மேலாளர், பி.சுதாதேவி, ‘‘நமது கோவில்களில் உள்ள கோபுர கும் பங்களில், சிறுதானியங்களைக் கொட்டிவைத்து கும்பாஷேகம் செய்வார்கள். ஊரில் வெள்ளம், வறட்சி வந்து விதைகள் அழிந்து போனாலும், கோபுரத்தில் உள்ள விதைகள் அழியாது. இந்த பகுதியில் உள்ள குன்னம் கத்திரிக்காய் சுவையானது. இந்த மண்ணின் தன்மைக்கு ஏற்ப பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும்’’ என்றார்.

பொள்ளாசி அப்பாச்சி காட்டன் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மணி சின்னசாமி பேசுகையில் ‘‘நாங்கள் மூன்று தலைமுறையாக நூற்புத்தொழில் உள்ளோம். படித்தது வெளிநாட்டில் என்றாலும், சொந்த ஊரில் பரம்பரை தொழிலை செய்ய வந்துவிட்டேன். எதையும் புதுமையாக செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்தது. இதனால், நமது பாரம்பர்ய பருத்தி ரகங்களை தேடிப்பிடித்து விவசாயிகளிடம் கொடுத்து சாகுபடி செய்யச் சொல்கிறோம்.

இதை நாங்களே ஒப்பந்த முறையில் வாங்கிக் கொள்கிறோம். சாதாரண முறையில் விளைந்த பருத்தி,  குவிண்டால் ரூ.3,500 என்றால், இயற்கை முறையில் விளைந்த பருத்திக்கு ரூ.4,500 கொடுத்து வாங்கிக் கொள்கிறோம். இப்போது அதிகமாக புழக்கத்தில் உள்ள ஒட்டு ரக, வீரிய ரக பருத்தி செடிகளுக்கும், நமது கருங்கன்னி உள்ளிட்ட பாரம்பர்ய பருத்தி செடிகளுக்கும் வேறுபாடுகள் நிறைய உண்டு.

அதாவது, ஒட்டு, வீரிய ரக பருத்தி காய்கள் மேல் நோக்கி இருக்கும். ஆனால், பாரம்பர்ய ரகத்தின் பருத்தி காய்கள் பூமியை நோக்கி, தலை குனிந்து பணிவாக இருக்கும். இதனால், மழை பெய்தாலும் வெடித்த பருத்திக்கு சேதம் வராது. ஒட்டு, வீரிய ரக பருத்தி காய்கள் மேல் நோக்கி இருப்பதால், மழை பெய்தால் பெரிய அளவுக்கு நஷ்டம் வரும். பாரம்பர்ய ரக பருத்தி நூலுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது’’ என்று லாபகரமான விவசாயத்துக்கான வழியைச் சொன்னார்.

இயற்கை விவசாயம், சிறுதானிய சாகுபடி பற்றி ‘ரீஸ்டோர்’ அனந்து, ராம், மஞ்சுநாதன்... போன்ற வல்லுநர்களும், சுற்றுச் சூழல் ஆர்வலர் ரமேஷ் கருப்பையா, முன்னோடி விவசாயிகள் எளம்பலூர் ஆறுமுகம், மேலப்புலியூர் இளையராஜா உள்ளிட்டவர்களும் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். 

-ஆறுச்சாமி

படங்கள்: தே. தீட்ஷித்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ