Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழ்நாட்டில் விவசாயியாக பிறந்தது குற்றமா?

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி பேரணியில் தற்கொலை செய்து கொண்டு இறந்த, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி கஜேந்திரசிங் குடும்பத்துக்கு ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. ராஜஸ்தான் மாநில சுகாதார துறையினர் கஜேந்திர சிங்கின் வீட்டுக்கு நேரில் சென்று 4 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளனர். கஜேந்திர சிங்கின் சொந்த தொகுதியான தூசா நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான சச்சின் பைலட் 2 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 4 லட்ச ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, கஜேந்திர சிங் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் கஜேந்திர சிங் மரணம் குறித்து விவாதிக்கப்பட்டது. இது அனைத்தையுமே மனிதாபிமானம் உள்ளவர்கள் கண்டிப்பாக வரவேற்பார்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால், தமிழ்நாட்டில் கடந்த வாரம் பருத்தி விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இது எத்தனை பேருக்கு தெரியும். இங்கு நிகழக்கூடிய விவசாயிகளின் மரணங்களுக்கு துளி அளவுக்கூட ஆட்சியாளர்கள் கண்ணீர் விடுவதில்லை. தமிழகத்தில் 2012-13ம் ஆண்டுகளில் வறட்சியினால் பயிர்களை இழந்து 12 விவசாயிகள் உயிர் இழந்தார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கரும்பு விவசாயி சம்பந்தம் தற்கொலை செய்து கொண்டார். தற்போது திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பருத்தி விவசாயி ராஜா ராமன் கனமழைக்கு பயிர்களை பறிகொடுத்து, வேதனை தாங்காமல் விஷம் அருந்தி உயிரை மாய்த்துள்ளார். இந்த மரணங்கள் குறித்து மத்திய அரசோ, மாநில அரசோ ஒரு வார்த்தைக்கூட உதிர்க்கவில்லை. தமிழகத்தில் இப்படிப்பட்ட மரணங்கள் நிகழும்போதெல்லாம், நாடாளுமன்றத்தில் சிறு சலனம் கூட ஏற்பட்டதில்லை. மகாராஷ்ட்ரா, ஆந்திரா, ராஜஸ்தான் போன்ற மற்ற மாநிலங்களில் விவசாயிகளின் மரணங்கள் நிகழ்ந்தால் இந்தியா முழுவதும் அதிர்வலைகள் பட படக்கிறது. அந்தந்த மாநில அரசுகளும், அங்குள்ள ஆட்சியாளர்களும் பதைபதைத்து துடித்துப் போகிறார்கள். பயிர் அழிவினால் நிகழ்ந்த மரணம் என்பதை அவர்கள் மறைப்பதில்லை.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும் சரி, அ.தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும் சரி விவசாயிகளின் மரணங்கள் கொச்சைப்படுத்தப்படுகிறது. ராஜா ராமன் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கு ஏராளமான சாட்சியங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இவருடைய சித்தன் வாழ்வூர் கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் வயல்களுமே கோடைமழை சீரழித்துவிட்டது. இந்த கிராமத்திற்கு நாம் நேரில் சென்றபோது விவசாயிகள் பெரும் கவலையில் மூழ்கி இருந்தார்கள். வட்டிக்கு கடன் வாங்கி 2 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்திருந்த ராஜா ராமன், தன்னுடைய பருத்தி பயிர்கள், மழையில் அழிந்ததை பற்றி மன உளைச்சலோடு புலம்பிக் கொண்டே இருந்தார் என இக்கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். ராஜா ராமனின் மனைவி ராஜியும் இத்துயரத்திற்கான காரணத்தை அழுதுகொண்டே வேதனையோடு பகிர்ந்துகொண்டார்.

‘‘இரண்டு ஏக்கர் குத்தகை நிலத்துல பருத்தி சாகுபடி செஞ்சிருந்தோம். இப்ப மூணு மாசப் பயிரா இருக்கு. தொடர்ச்சியா மழை பெஞ்சி, செடி அழுக ஆரம்பிச்சதும் என் கணவர் தவிச்சிப் போயிட்டாரு. எப்படிதான் காப்பாத்தப் போறேன்னு தெரியலையே. இதை நம்பி நிறைய கடன் வேற வாங்கிட்டேனேனு நாலஞ்சு நாளா புலம்பிக்கிட்டே இருந்தாரு. ஆனா இப்படி ஒரு விபரீதமான முடிவெடுப்பாருனு நாங்க நினைச்சுக்கூட பார்க்கலையே. வயலுக்கு போறேனு சொல்லிட்டுப் போனவரு, பூச்சிமருந்தை குடிச்சு, எங்களை எல்லாம் தவிக்கவிட்டுட்டு போயிட்டாரு. எங்களுக்கு மூணு புள்ளைங்க. எப்படிதான் சொச்ச காலத்தை ஓட்டப்போறேன்னு தெரியலை’’ என வேதனையில் விம்மினார்.

வலங்கைமான் விவசாயிகள் சங்க செயலாளர் சசிக்குமார் மிகுந்த கொந்தளிப்போடு ‘‘அதிமுக கிளைச் செயலாளர், ஒன்றிய செயலாளர், ஊராட்சிமன்ற தலைவர், மாவட்டச் செயலாளர் என ஆளும் கட்சி பிரமுகர்கள் பொய்யான தகவல்களை பரப்பிக்கிட்டு இருக்காங்க. குடும்ப பிரச்னையின் காரணமாகத்தான் ராஜா ராமன் இறந்ததாக கொச்சைப்படுத்துறாங்க. பயிரை பறிகொடுத்ததால்தான் ராஜாராமன் தற்கொலை செஞ்சுக்கிட்டாருனு இவங்க எல்லாருக்குமே தெள்ளத் தெளிவா நல்லாவே தெரியும். ஆனாலும், ஏன் இவங்க பொய் சொல்லி மூடி மறைக்கணும். ஆட்சிக்கு கெட்டப்பெயர் வந்துவிடும்னு நினைக்குறாங்க.
ஆட்சிக்கும், கனமழைக்கும் என்ன சம்பந்தம்?

இப்பகுதியைச் சேர்ந்த விவசாய சங்க தலைவரும் கூட பொய்யான தகவல்களை பரப்பிக்கிட்டு இருக்கார். இவர் ஏன் இப்படி நடந்துக்கிறார்? ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவருக்கு தஞ்சையில் அ.தி.மு.க.வினர் நடத்திய காவிரித்தாய் மற்றும் பொன்னியின் செல்வி பாராட்டு விழாவில், இந்த விவசாய சங்க தலைவர் பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்தாங்களாம். அதற்கு விசுவாசமாகத்தான், இப்பொழுது விவசாயி ராஜா ராமனின் மரணத்தை கொச்சைப்படுத்திக்கிட்டு இருக்கார்.

வேளாண் துறையில் பணியாற்றும் சாதாரண அலுவலர்கள் முதல் உயரதிகள் வரை அனைவருமே இச்சம்பவத்திற்கான உண்மையான காரணத்தை மூடி மறைக்கிறாங்க.

வேலை பார்த்தாலும் பார்க்கலைனாலும் மாதா மாதம் இவங்களை தேடி ஊதியம் வந்துடுது. சொகுசான வாழ்க்கை வாழும் இவங்களுக்கு எல்லாம் ஏழ்மையின் வலி தெரியாது’’ என கொந்தளிக்கிறார்.

இப்படி ராஜா ராமன் தற்கொலை பற்றி பலரும் ஆணித்தரமாக சொல்லி வருகின்றனர். ஆனால், கல் நெஞ்சம் படைத்தவர்கள் இந்த மரணத்தை திட்டமிட்டே களங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி இருக்கும்போது அந்த பாவப்பட்ட குடும்பம் எப்படி பிழைக்கும்?  விவசாயிகளுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்? தமிழ்நாட்டில் விவசாயியாக பிறந்தது குற்றமா?

கு. ராமகிருஷ்ணன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ