Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாழை விவசாயிக்கு பிணமாலை... சாராய முதலாளிக்கு பணமாலை!

லகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துக் கொண்டே செல்வது இந்தியாவின் சாபக்கேடு.

கதர்சட்டைகளின் அறுபது ஆண்டு கால ஆட்சி, இடையிடையே கதம்பங்கள், காவிகள் நடத்திய ஆறு, ஏழாண்டு கால ஆட்சிகள் என காட்சிகள் மாறிக்கொண்டே இருந்தாலும், தற்கொலைகள் மட்டும் நிரந்தரமாகிவிட்டன.

மந்திரத்தில் மாங்காய் காய்க்க வைப்பார் எங்கள் ஏழு லோக சூப்பர் ஸ்டார் என்று புகழப்பட்ட காவி(ய)த் தலைவன், உலகம் சுற்றும் வாலிபன் நரேந்திர மோடியின் ஓராண்டு கால ஆட்சியிலும் இது வேகமெடுத்துக் கொண்டிருப்பதுதான் வேதனை!

தொடர் தற்கொலைகள் அரங்கேறும் மற்ற மாநிலங்களில் எல்லாம், ஆளும்அரசியல்வாதிகள் ஓடோடி போய் இரங்கற்பா படிப்பதும்... பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முடிந்த அளவுக்கு பண உதவி செய்வதும் நடக்கிறது. ஆனால், இங்கே தமிழகத்தை ஆள்பவர்களோ... விவசாய தற்கொலை என்கிற ஒன்று இல்லவே இல்லை என்று மூடி மறைப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள்.

இதோ... திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே பருத்தி விவசாயி ராஜாராமன், திடீர் கோடை மழையால் தன்னுடைய பருத்தி வயல் பாதிக்கப்பட, வாங்கிய கடனை எப்படி திரும்பச் செலுத்தப்போகிறோமோ என்கிற மன உளைச்சலில் கடந்த சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டு மாண்டுவிட்டார்.

இந்த விஷயம், மீடியாக்களில் எதிரொலிக்கவே... துடித்தெழுந்த ரத்தத்தின் ரத்தங்கள், 'குடும்ப பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டார் ராஜாராமன்' என்று நிரூபிக்க படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். பின்னே, மக்களின் முதல்வருக்கு கோபம் வந்தால் என்னாவது?

அடுத்ததாக, தேனி மாவட்டம், உப்புக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வாழை விவசாயி அழகுவேல், வாழைக்கு உரிய விலை கிடைக்காமல் போனதால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்தத் தற்கொலையை மூடி மறைக்கும் வேலையை கனக்கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறார் மாவட்டச் செயலாளர், மன்னிக்கவும், மாவட்ட ஆட்சித் தலைவர் ந.வெங்கடாசலம். இந்தத் தற்கொலை நடந்திருப்பது, மாநில முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் போடி தொகுதியில் என்பதால், பூசணிக்காயை அல்ல, பூமிப்பந்தையே சோத்து மூட்டையில் மறைக்கப் பார்க்கிறார் திருவாளர் வெங்கடாசலம். ஆனால், எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல, அவருடைய அறிக்கையே, ஆளுங்கட்சி மற்றும் அரசாங்கத்தின் வண்டாவாளத்தை எல்லாம் தண்டவாளம் ஏற்றியிருக்கிறது.

அழகுவேல் தற்கொலை தொடர்பாக வெங்கடாசலம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் சாராம்சம் இதோ...

'வருவாய்த்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டதில், தற்கொலை செய்துகொண்ட அழகுவேல், நடப்பு வருடத்தில் சுமார் 2,200 திசுவாழை பயிரிடப்பட்டதில் ரூ.90 வீதம், 1200 வாழைத்தார்களை கடந்த ஒரு மாதமாக விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் பெறப்பட்ட விற்பனை தொகையை அன்றாட தேவைக்காகவும், மதுப்பழக்கத்திற்காகவும் செலவு செய்து வந்துள்ளார். ஒவ்வொரு தாரும் 30 முதல் 35 கிலோ எடையில் இருந்துள்ளன. மதுப்பழக்கத்தினால் சரியான முடிவெடுக்காமல் வாழைத்தார்களை குறைவான விலைக்கு விற்பனை செய்ததால், குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாகவே மனஉளைச்சலால் அழகுவேல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரிடம் மீதமுள்ள சுமார் 1000 வாழைத்தார்களை தற்போதைய விலையான கிலோ ரூ.5 வீதம் விற்பனை செய்திருந்தால் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது' என்ற ரீதியில் போகிறது.

பெரும்பாலும் வாழை விவசாயிகள், வியாபாரிகளுக்கு விலை பேசி விட்டுவிடுவார்கள். விவசாயிகள் தார் 275 முதல் 350 வரை விலை வைத்து வெட்டிக்கொண்டு போவார்கள். வெளிசந்தையில் விற்றால் ஒரு கிலோ 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகும். கிலோ 30 ரூபாய்க்கு விற்றால், ஒரு தார் 900 ரூபாய் வரைகூட விலை போகும். ஆனால், இது நடப்பது, அரிதாகத்தான். பொதுவாக தேனிப் பகுதியில் இந்த விலை கிடைத்து பல மாதங்களாகிறது. அதனால்தான் 90 ரூபாய்க்கு ஒரு தார் என விற்றிருக்கிறார் அழகுவேல். இவர் மட்டுமல்ல, கலெக்டரின் கூற்றுப்படி குடிகாரர்களாக இல்லாத இந்த மாவட்டத்தின் மற்ற விவசாயிகளுக்கும் இதே விலைதான். இதிலும் தற்போதைய நிஜ நிலவரம் என்ன தெரியுமா... கிலோ 2 ரூபாய்க்கு கூட விலைபோகவில்லை என்பதுதான். இதனால் வாழைத்தார்களை வெட்டிவெட்டி வயலிலேயே அழித்துக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள்... அழகுவேல் போல் குடிக்காத விவசாயிகள்(?). ஆனால், அதிபுத்திசாலியான தேனி கலெக்டர் வெங்கடாசலமோ... 'கிலோ 5 ரூபாய் என்ற விலைக்கு விற்றிருந்தால் நஷ்டம் வந்திருக்காது... தற்கொலைக்கும் அவசியம் இருந்திருக்காது' என்கிறார்.

அட அநியாயக்கார அதிகார வர்க்கமே... கிலோ குறைந்தது 15 ரூபாய்க்கு விற்றால்தான் கட்டுப்பாடியாகும் என்கிற நிலையில், கிலோ 5 ரூபாய் என்பது எந்த மூலைக்கு? 5 ரூபாய்க்கு போனால், 30 கிலோ எடை கொண்ட ஒரு தாருக்கு 150 ரூபாய்தானே கிடைக்கும். குடிகாரன் தப்புத்தப்பாக விற்றான். அதனால்தான் குறைந்த விலை என்று குதர்க்கம் பேசும் மாவட்ட ஆட்சித் தலைவரே... நீங்கள் நிதானமாகத்தானே அறிக்கையை தயார் செய்தீர்கள்?

ஒரு ஏக்கரில் சுமார் 1200 வாழைத்தார்கள்தான் கிடைக்கும். இதை உருவாக்குவதற்கு ஏக்கருக்கு மொத்தம் 3 லட்ச ரூபாய் செலவு பிடிக்கிறது. கிலோ 5 ரூபாய் என்றால், 30 கிலோ கொண்ட தார் ஒன்றுக்கு 150 ரூபாய் வீதம், 1200 தார்களுக்கு 1 லட்சத்தி 80 ஆயிரம் ரூபாய்தான் கிடைக்கும். நஷ்டம், 1 லட்சத்தி 20 ஆயிரம் ரூபாய்.

ஆனால், நீங்களோ... 5 ரூபாய் விலைக்கு விற்றாலே பொண்டாட்டிக்கு தங்க ஒட்டியாணம் செய்து போட முடியும் என்கிற ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கிறீர்கள். ஆட்சியரே... நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள், தேனி மாவட்டத்தை வாழை சாகுபடியில் மாநிலத்தில் முதல் மாவட்டமாக கொண்டு வருவதற்காக விவசாயிகளை விரட்டி விரட்டி வாழை பயிரிட வைத்த அதிகாரிகள், இந்த ஆண்டு இத்தனை ஏக்கரில் வாழை நடவு செய்திருக்கிறார்கள். அறுவடையின் போது இவ்வளவு மகசூல் கிடைக்கும் என கணக்கிட்டு, அதை அண்டை மாநிலங்களில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்திருக்க வேண்டாமா? விவசாயி உழைப்பை வியர்வையாக சிந்தி அபரிமிதமாக விளைய வைத்தால் ‘சாதனை மகசூல் எங்களால்தான் இது சாத்தியமானது’ என குரூப் போட்டோ எடுத்து விருதுக்கு அனுப்பும் உங்கள் அதிகாரிகள், அதே விவசாயி விலையில்லாமல் தவிக்கும் போது எட்டிக்கூட பார்ப்பதில்லையே இது எந்த வகையில் நியாயம்?

ஆளும்கட்சியினருக்கு ஜால்ரா தட்டி, அவர்களுக்கு லஞ்சம் வாங்குவதற்கு வழிகாட்டி இங்கே பெரும்பாலான அதிகாரிகள் பிழைப்பு ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள். சரி, உங்களுக்கும் பிழைப்பு வேண்டும்... எதையோ செய்து தொலையுங்கள். ஆனால், பாழாய் போன ஜீவன்களாக இருக்கும் சம்சாரிகளின் வாழ்க்கையில் எதற்காக விளையாடுகிறீர்கள். நீங்கள் நிவாரணம் என்று எந்த ஆணியையும் பிடுங்கத் தேவையில்லை. ஆனால், நிதர்சனத்தை சவப்பெட்டியில் அடைத்து ஆணி அடிக்க வேண்டாம்.

உங்களின் கூற்றுப்படியே குடியின் காரணமாகத்தான் குறைந்த விலைக்கு விற்றான், அதனால்தான் குடும்பத்தில் பிரச்னை தற்கொலை செய்து கொண்டான் என்றே வைத்துக் கொள்வோம். நீங்கள் மனசாட்சி உள்ளவர் என்றால் என்ன செய்திருக்க வேண்டும். விவசாயியின் தற்கொலைக்கு குடியும் ஒரு முக்கிய காரணம். எனவே, டாஸ்மாக் கடைகளை மூடுங்கள் என்றல்லவா அரசாங்கத்துக்குச் சொல்லியிருக்க வேண்டும். செய்யவில்லையே!

அல்லது, வாழைத்தார் நஷ்ட விலைக்குப் போகிறது. அதனால் அந்தப் பழங்களை அரசாங்கமே கொள்முதல் செய்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்யலாம். அல்லது சத்துணவு திட்டத்தின் மூலமாக குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் என்று குறைந்தபட்ச யோசனையாவது சொல்லியிருக்கலாமே!

நாட்டையே சுடுகாடாக்கும் சாராயத்தை, ஏழெட்டு முதலாளி குடும்பங்கள் பகட்டு வாழ்க்கை நடத்துவதற்காக தொழில் என்கிற பெயரில் தயாரிக்கும் கேடுகெட்ட மதுவை, தமிழகம் முழுக்க கடைகளைத் திறந்துவிட்டு, ஆறாக ஒடவிட்டு, குடிமக்களைக் கொன்று குவிக்கும் அரசாங்கம், மக்களின் உடல் நலத்துக்கு நன்மை பயக்கும் வாழைப்பழத்தை வாங்கி குறைந்த விலையில் விநியோகிக்கலாமே?

படித்தவன் சூதும் வாதும் செய்தால்?  

- ஜூனியர் கோவணாண்டி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close