Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனாதைப்பிணங்களுக்கு அன்னை ஆனவள்!

'பிதாமகன்' -என்ற திரைப்படத்தில், பிணத்தை எரிப்பவர்களின் வாழ்வியலை படம் நெடுக யதார்த்ததுடன் இயக்குநர் பாலா பதிவு செய்திருப்பார். அதை பார்க்கும்போது,மனம் சுக்குநூறாய் உடைந்து பதைபதைக்கும்.

பெருநகரங்களுக்கு சென்று சாதிக்கவேண்டும் என இந்தியாவின் குக்கிராமத்திலிருந்து சென்றவர்களில் சிலர், சரியான வேலை கிடைக்காமல் வாழ்வை தொலைத்துவிட்டு, நோய்வாய்ப்பட்டு,மனநலம் பாதிக்கப்பட்டு,ஏன் குடிப்பழக்கத்தினால் விபத்துக்குள்ளாகி - பெயர் தெரியாத, ஊர் தெரியாத ,உறவு தெரியாத - அநாதைப்பிணங்களாக ஆகிவிடுகின்றனர்.

இப்படிப்பட்டவர்களின் இறந்த உடல்கள் அரசால் மீட்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட தினங்களுக்கு அரசு பிணவறையில் வைக்கப்பட்டு, காவல்நிலைய புகார்களின் அடிப்படையில், அடையாளம் காணப்பட்டு இறுதியாக உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்படும். அப்படியும் உறவினர்கள் வந்து பெறப்படாத அநாதைப்பிணங்களை தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் வசம் கொடுத்து எரியூட்டச்சொல்வது வழக்கம்.

அப்படிப்பெறும் அநாதைப்பிணங்களை நல்லநிலையில் அடக்கம் செய்ய ,ஒரு ஆணுக்கே அசகாய மன உறுதி இருந்தால் மட்டும்தான் அது சாத்தியம் .

 அத்தகைய சூழலில் ஆனந்தியம்மாள் என்னும் தன்னார்வப்பெண்மணி, சென்னை போன்ற பெருநகரங்களில், அநாதைப்பிணங்களுக்கு 'தாயாக' இருந்து , அத்தனை சடங்குகளையும் செய்து முடித்து, அடக்கம் செய்து வருகிறார் .இத்தகைய சேவைபுரிய  ஒரு துணிச்சல் இருந்தாகவேண்டும் என்பதுதான் நிதர்சனம் .

அவரை  தேனியில் சந்திக்க நேர்ந்தது.

ஆனந்திக்கு சொந்த ஊர் உசிலம்பட்டி. மணமுடித்து சென்னையில் குடியேறி 23 வருடங்கள் வாழ்ந்த பின்,'மலடி' என்ற பட்டத்தால் கணவரால் வீட்டை விட்டு துரத்தியடிக்கப்பட்டவர். ஆனால் சமூகம் தற்போது வைத்திருக்கும் பெயர் 'ஆனந்தி அம்மா' .

அவரை  சந்தித்த போது...

"வீட்டை விட்டு கணவரால் 'மலடி' ன்ற பெயரால் அடித்து,வெளியேற்றப்பட்ட அதே நேரத்தில என் தாய் வீட்டிலேயும் அரவணைப்பு இல்லாமல்தான் இருந்தது, வாழ்க்கையத்தொலைச்சுட்டு,எந்தவித ஆதரவும் இல்லாமல் ,சென்னை மெரீனா கடற்கரைக்குத்தான்போனேன்.  செத்துரலாம்னுகூட நெனச்சென் .வாழ்வா,சாவானு ஒரு குழப்பத்துல இருந்தப்ப... " நீ...வாழப்பிறந்தப் பிறந்தவள் அல்ல;சாதிக்கப்பிறந்தவள்" னு உள்மனசு சொல்லுச்சு. அப்ப ஒரு அனாதை ஆசிரமம் எனக்கு ஆதரவுக்கரம் நீட்டியது. அப்ப நம்மள மாதிரி அனாதை ஆக்கப்பட்டவங்களுக்காக உதவணும்னு எண்ணம் வந்துச்சு.

2004 - ஆம் வருஷத்துல , டிசம்பர் - 26 ஆம் தேதி,ஞாயிற்றுக்கிழமை சென்னையில, நிறைய பேருக்கு கறுப்பு ஞாயிறாத்தான் அமைஞ்சது;அந்த சுனாமின்ற துயரசம்பவம் நடந்தப்போ,என்னால பாத்துட்டு சும்மா இருக்க முடியலை. அங்கே சுனாமியில் இறந்தவர்களை நானும் ஒரு மனுஷியாயிருந்து
அப்புறப்படுத்திக்கொண்டிருந்தேன். அப்ப, ஒரு படகு ஊர்க்குள்ள புதைஞ்சு கிடந்தது. அங்கே ஒரு பிஞ்சு கை என்னை, 'அம்மா...!' னு கூப்பிடுறது போல தோணுச்சு (சற்று கண்களில் நீர்கோக்க..தொடர்கிறார்).

பிறகு பக்கத்திலப்போய் பார்த்தப்போ, ஒரே ஒரு கை மட்டும்தான் எஞ்சியிருந்துச்சு. அத தொட்டால் ரத்தம் கன்னத்தில தெறிக்குது. அந்தளவுக்கு சதைகள் சிதைஞ்சுடுச்சு. கண்ணீர் ஒரு பக்கம் வந்திட்டு இருக்கு... இருந்தாலும், எனக்கொரு பிள்ளையிருந்திருச்சுன்னா என்னெல்லாம் செய்யமுடியுமோ...அத்தனையையும் இதுக்கும் செஞ்சிடணும் மனசு பதபதைக்குது. செஞ்சேன் எல்லா இறுதி சடங்கையும்.  அந்த ஒரு நிகழ்ச்சி
என்னை முழுக்க முழுக்க , 'காணாம இருக்கிறவங்களைப்பத்தி சிந்திக்க'  தோண வைச்சிருச்சு.

கொஞ்ச நாள்ல ஒரு சில சுயதேவைகளை பூர்த்தி பண்ணுனதுக்கப்புறம், கடந்த ஆறு ஆண்டுகளாக,சென்னையில் அநாதையாக இறப்பவர்களை எடுத்துச்சென்று, அதற்குண்டான மரியாதையுடன் அடக்கம் செய்யிறேன்" எனும் ஆனந்தியம்மா, இந்த சேவையில் நடந்த மறக்காத தருணங்களை நம்மிடம் பகிர்கிறார். 

"இப்படித்தான்.. சென்னையில்  எய்ட்ஸ் நோய்வாய்ப்பட்டு இறந்த ஒரு பெண். அவளது சடலத்தை அடக்கம் பண்ண எடுத்துக்கிட்டு, மின்சார சுடுகாட்டுக்குப்போறேன். அவள் கணவன், மனைவியோட உடம்பு இருக்குற ஸ்ட்ரட்சர  தொடமாட்டேங்றான்...அந்தளவுக்கு..அவள் மனைவி பாவம் செஞ்சவளா..? எனக்குப்புரியலை...

அந்தப்பொண்ணு ஒரு நிமிசம் கூடவா, இவனை சந்தோசப்படுத்தியிருக்காது. அந்தப்பொண்ணையும் நான் அடக்கம் பண்ணுனேன். இந்த ஆண்கள் இன்னும் பரந்தமானப்பான்மை மிக்கவர்களாக மாறாமல் தான் இருக்கின்றார்கள்!" என்று கண்கள் அகல பொறுமுகிறார்.

"இது மட்டுமல்லாமல் ஒரு குடும்பத்தில் தாய் இறந்து கிடக்கிறாள். அந்த அம்மாவின் மகளுக்கும் மகனுக்கும் பிரச்னை. பிரச்னையின் முடிவில், அந்த இரண்டு பேரும் இறந்த அம்மாவினை கைவிட்டுவிட்டனர். காவல் துறை நண்பர் என்னை அழைச்சு, “இவங்கள நீங்களே அடக்கம் செய்து விடுங்க,
ஆனந்தியம்மா” என்றார். அவர்களையும் நல்லடக்கம் செய்யதோம், இப்படியும் சில பிள்ளைகள் இருக்கத்தான் செய்கிறார்கள் " என வேதனைப்பட்டுக்கொண்டார் .

இந்த பணியில் கிடைத்த மறக்கமுடியாத அங்கீகாரம் எது ?என்று கேட்டேன்.

ஒரு பெண்மணி பாராட்டியதை மறக்க முடியவில்லையென்றார்.  " 6 மாதங்களாகியும் கணவனைக்காணாமல் தேடிக்கொண்டிருந்த பெண்ணுக்கு போலீஸ் விசாரணையில் அவள் கணவன் இறந்து, "ஆனந்தியம்மாள் எனும் பெண் கையால் , அடக்கம் செய்யப்பட்டுவிட்டார்" என்ற தகவல்  போயிருக்கு. அதை அறிந்து வந்த அந்த அவலைப்பெண் ,சுடுகாட்டுல இன்னொருத்தவங்கள, நான் அடக்கம் பண்ணிட்டு இருக்கும் போது, என் கைகளைத்தொட்டு வணங்கி நன்றி சொன்னாங்க....அதுக்கு ஈடாக கோடி ரூபா... கொடுத்தாலும் அது எனக்கு வேணாம்" என மகிழ்ச்சியுடன் சிரிக்கும் ஆனந்தி அம்மாள்,  அநாதைப்பிணங்களை அடக்கம் செய்ய எந்தவொரு பண உதவியையும் எதிர்பார்ப்பதில்லை.

இங்குள்ள மனிதர்களுக்கு ஒரு உயிரை பெற்றுதந்தால்தான் 'அன்னை'யாக முடியும் என்ற கொடுஞ்சூழலில்,"உயிரை விட்ட அநாதைகளுக்கு நான்
அன்னையாக இருந்துகொள்கிறேன்" என சமூகத்தின் கேடுகளை, இடித்துரைக்கும் ஆனந்தி போன்றோர்கள் 'அன்னையர்'களுக்கும் ஒரு படி மேல்தான்..!

ம.மாரிமுத்து (மாணவப்பத்திரிகையாளர்)
படங்கள் - வீ. சக்தி அருணகிரி
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close