Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பணம் வைத்திருப்பவனைத்தான் பார்ப்பேன்' என ஸ்ரீரங்கநாதன் சொன்னாரா?

ண்டவனுக்கு முன்பாக அனைவரும் சமம் என்பார்கள். ஆனால், ஆண்டவனையும், அரசியல்வாதி கணக்காக மாற்றி  வைத்து விட்டனர் இங்கே. ஆம், பணப்பெட்டி இருந்தால்தான், பதவியில் இருக்கும் அரசியல்வாதி வீட்டு கேட் திறக்கும். அவருடைய வாயில் புன்னகை பிறக்கும். இதேபோலவே பணம் கொடுத்தால்தான் மூலவரின் தரிசனம் நிம்மதியாகக் கிடைக்கும் என்கிற நிலையை பெரும்பாலான கோயில்களில் உருவாக்கி வைத்துள்ளனர்.

காற்றில் பறக்கும் ஆகம விதிகள்!

கோயில்கள் என்பவை, ஆகம விதிகளின்படி உருவாக்கி வைக்கப்பட்டுள்ளன. அது சிவன், முருகன், விஷ்ணு என எந்தக் கடவுளின் கோயிலாக இருந்தாலும், அததற்குரிய ஆகமங்களின்படியே உருவாக்கப்படுகின்றன. இத்தகைய கோயில்களில் ஆண்டவனை தரிசிக்கவும், தரிசனம் முடிந்ததும் பிரகாரத்தை வலம் வரவும் பலவித மரபுகளையும் உருவாக்கி வைத்துள்ளனர். ஆனால், தரிசனத்துக்குக் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்த பிறகு, இந்த ஆகம மற்றும் மரபுகளையெல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டனர் அறநிலையத்துறை அதிகாரிகளும், கோயில்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நபர்களும்.

பணத்துக்கு மரியாதை, சிபாரிசுக்கு முதல்மரியாதை!

ஆம், தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் எந்தக் கோயிலுக்குப் போனாலும், நீங்கள் எளிதாக மூலவரை தரிசித்துவிட முடியாது. உதாரணத்துக்கு, ஸ்ரீரங்கம் கோயிலை எடுத்துக் கொள்ளுங்கள்... 'ஓசி தரிசனமா, போய் ஓரமாக நில்' என்று ஒரு நான்கு மணி நேரத்துக்கு கூண்டுக்குள் அடைத்து விடுகிறார்கள். '50 ரூபாய் கொடுக்கிறாயா.. சரி ஓகே, ஒரு இரண்டு மணி நேரத்தில் தரிசித்துக் கொள்'. 250 ரூபாய் கொடுத்தால், அரை மணி நேரத்தில் தரிசனம் முடிந்துவிடும்.

எம்.பி, எம்.எல்.ஏ, அமைச்சர், அதிகாரிகள், பட்டாச்சாரியாருக்கு தெரிந்தவர் என்று ரெக்கமென்டேஷன் இருந்தால், அடுத்த நொடியே தரிசித்து விடலாம்.

"ஆண்டவனுக்கு முன்பாக அனைவரும் சமம் என்று சொல்லிவிட்டு, இப்படி இஷ்டம்போல ரேட் வைத்தும், சிபாரிசு வைத்தும் ஆண்டவனை தரிசிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்? ஓர் ஊரிலிருந்து தரிசனம் செய்வதற்காக கிளம்பி வருவதற்கே ஏகப்பட்ட செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. இதில் ஆண்டவனைப் பார்ப்பதற்கும் காசு கேட்டால் எங்கே போவது? பணம் வைத்திருப்பவனை மட்டும்தான் உடனடியாக பார்ப்பேன் என்று அந்த ஸ்ரீரங்கநாதன் இவர்களிடம் ஏதும் சொல்லி வைத்திருக்கிறாரா?" என்று சீறலுடன் கேட்கிறார், தர்மபுரி அருகே உள்ள கிராமத்திலிருந்து கிளம்பிவந்து, தன் ஊர்க்காரர்களோடு வரிசையில் நின்று கொண்டிருந்த முருகேசன்.

பரிதாபத்துக்குரிய நொந்தனார்கள்?

திருப்புன்கூரில் நந்தனாருக்கு நந்தி இடைஞ்சலாக நின்றது. திருவானைக்காவல் கோயிலிலோ... இடைஞ்சலாக இருக்கிறது ஒரு ஜன்னல். ஆம், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலுக்குச் சென்றால், நாம் நொந்தனார்களாகத்தான் மாறவேண்டும். பணம் இல்லையென்றால், உங்களுக்கு மூலவர் தரிசனமே கிடையாது. வாய்ப்புக் கிடைத்தால் ஜன்னலில் இருக்கும் ஓட்டை மூலமாக தரிசித்துக் கொள்ளலாம். பத்து ரூபாய், 25 ரூபாய் கட்டணம் செலுத்தினால்தான் மூலவர் இருக்கும் அறைக்குள்ளே அனுமதிக்கிறார்கள். பணம் இல்லையென்றால், அங்கிருக்கும் ஒரு ஜன்னல் வழியே எட்டிப்பார்க்கச் சொல்கிறார்கள். அப்படி எட்டிப் பார்த்தாலும், பணம் கொடுத்து உள்ளே சென்றுவிட்ட பக்த கோடிகள் மறைத்துக் கொண்டு நிற்பதால், மூலவர் தரிசனம் என்பது இல்லவே இல்லை பணம் கொடுக்காதவர்களுக்கு. அதுமட்டுமா, அந்த ஜன்னல் ஓட்டை தரிசனத்தைக்கூட அங்கு நிற்கும் போலீஸ் அனுமதிப்பதில்லை. கழுத்தில் கை வைத்து தள்ளிவிடுகிறது.

புண்ணியமெல்லாம் போயே போச்!

இப்படியெல்லாம் பணத்துக்காக அழிச்சாட்டியம் செய்வது இருக்கட்டும். பணம் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும்... கோயிலுக்கு சென்று வந்ததன் பலன் அநேகமாக யாருக்குமே இல்லை என்பதுதானே உண்மை. ஆம், கோயிலுக்குள் நுழைந்தால், மூலவரை வழிபட்ட பின், கொடிமரம் வழியாக வெளியே வந்து, பிரகாரத்தில் இடப்புறமாக சென்று, பரிவார தெய்வங்களையெல்லாம் வழிபட்டுக் கொண்டே பிரகாரத்தை வலம் வந்து, மீண்டும் கொடி மரத்தின் அருகே சாஷ்டங்கமாக நமஸ்கரித்து, பின் கோயிலில் சிறிது நேரம் அமர்ந்து, பிறகு அங்கிருந்து புறப்பட்டு வெளியே செல்வதுதான் மரபு. அப்போதுதான் ஆலயத்துக்கு வந்ததன் பலன் கிட்டும் என்பது ஐதீகம். ஆனால், புகழ்பெற்ற கோயில்கள் பலவற்றிலும் இந்த மரபையெல்லாம் நீங்கள் கடைபிடிக்கவே முடியாது. பணம் வசூலிப்பதற்காக ஆங்காங்கே கம்பித் தடுப்புகளை வைத்திருப்பதால், பிரகாரங்கள் மொத்தமும் முடக்கப்பட்டுவிட்டன. மூலவருக்கு நேராக எந்தத் தடுப்பும் இல்லாமல் சாலையில் இருந்து பார்த்தால்கூட தெரியுமளவுக்கு ஒரு காலத்தில் கோயில்கள் பராமரிக்கப்பட்டன. தற்போது அனைத்தும் அடைபட்டு போய்விட்டன. கடவுளுக்குக் குறுக்கே கம்பிகள் நீண்டு கொண்டிருக்கின்றன.

பெண்களை தள்ளிவிடும் முரட்டுக் கரங்கள்!

இதைவிடக் கொடுமை, மூலஸ்தானத்தில் நின்று கொண்டு வருபவர்களை கழுத்தில் கைவைத்து தள்ளிவிடுவது. ஆம், கூட்டத்தைக் கட்டுப்படுத்துகிறேன் பேர்வழி என்று தள்ளிவிடுகிறார்கள். அதுவும் பெண்கள் மீதும்கூட இஷ்டம் போல கை வைத்து தள்ளிவிடுகிறார்கள், அங்கு நின்று கொண்டிருக்கும் முரட்டுப் பேர்வழிகள்.

ஸ்ரீரங்கம் கோயிலில் நம்முன்னே இப்படி ஒரு முரட்டு நபர், ஒரு பெண் மீது கை வைத்து தள்ளிவிட, "இவனுங்களுக்கெல்லாம் இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது. கோயிலுக்கு வந்துட்டு சண்டை போட்டுக்கிட்டு நிக்கக் கூடாதுனு, கம்னு போறோம். இதுவே இவனுங்களுக்கெல்லாம் வசதியா போயிடுச்சு. இந்த இடத்துல ஒரு பொம்பள போலீஸையும் நிறுத்தி வெச்சு பெண்களையெல்லாம் ஒழுங்குபடுத்த அவங்கள பயன்படுத்தலாம்ல... இது அம்மா நின்னு ஜெயிச்ச தொகுதி. இந்த கோயிலுக்காக அம்மா எவ்ளவோ செய்திருக்காங்க. ஆனா, இந்த ஊர்ல, அதுவும் ஆண்டவனுக்கு முன்னாடியே பெண்களுக்கு இப்படி ஒரு அவமரியாதை" என்று புலம்பியபடியே வெளியேறினார் சென்னையிலிருந்து வந்திருந்த உமா.

மரபுகளை உடைக்கும் பணம்!

பொதுவாக கருவறைக்குள் பூஜை வைப்பவரைத் தவிர வேறு யாரையும் அனுமதிப்பது இல்லை. இது நடைமுறையில் இருந்தவரை பிரச்னை ஏதும் இல்லை. வெளியிலேயே கம்பிகள் கட்டப்பட்டிருக்கும். அங்கிருந்து தரிசனம் முடித்து அப்படியே பக்தர்கள் சென்றுவிடுவார்கள். ஆனால், காசுக்கு ஆசைப்படும் சில அர்ச்சகர்களாலும், அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் கோயிலைக் கைக்குள் வைத்திருக்கும் சிலராலும் இந்தக் கட்டுப்பாடு உடைக்கப்பட்டு, கட்டண தரிசனம் மற்றும் கையூட்டு தரிசனம் உருவாக்கப்பட்டு, பணம் கொடுப்பவர்கள் மற்றும் சிபாரிசுடன் வருபவர்களை மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்க ஆரம்பித்தனர். இது அதிருப்தியை ஏற்படுத்தவே, பல கோயில்களில் ஒட்டுமொத்தமாக கருவறை வரை அனைவரையுமே அனுமதிக்கின்றனர். ஆனால், பேட்ச் பேட்ச்சாக அனுமதிக்கும்போது, பணம் கொடுத்தவர்களுக்கு ஒரு மாதிரியும், கொடுக்காதவர்களுக்கு வேறுமாதிரியுமான அணுகுமுறை கடைபிடிக்கப்படுகிறது.

சமயபுரத்தாளே... சாட்டையை வீசு!

சமயபுரத்தாளை தரிசிக்க வேண்டி ஆவலோடு சென்றால்... கோயிலைச் சுற்றிலும் குவிந்துகிடக்கும் குப்பைக் கூளங்கள் மற்றும் கழிவுகளைத்தான் முதலில் தரிசிக்க வேண்டியிருக்கிறது. குளித்து, மூழ்கி புனிதம் கெடாமல் கோயிலுக்குள் அடியெடுத்து வைக்க நினைத்தால்... 'அதெல்லாம் முடியவே முடியாது' என்று சொல்லிச் சிரிக்கின்றன குவிந்துகிடக்கும் குப்பைகளும், கழிவுகளும்.

பெரும்பாலும் வேண்டுதல் நிறைவேற்றுவதற்காகவே இந்தக் கோயிலில் குவிகிறார்கள் மக்கள். இப்படி ஆயிரக்கணக்கில் இங்கே பக்தர்கள் குவிவதால், சுகாதாரத்தின் மீது கோயில் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். ஆனால், அவர்களோ பணத்தில் மட்டுமே குறி வைத்து உட்கார்ந்திருப்பதால், திரும்பிய பக்கமெல்லாம் கடைகளை திறக்க வைத்து வாடகை மற்றும் வரி வசூலிப்பில் மட்டுமே முனைப்பாக இருக்கிறார்கள்.

இங்கேயும் ஸ்ரீரங்கம்போலவே நீண்ட க்யூவுக்காக கம்பித் தடுப்புகளை சுற்றிச்சுற்றி போட்டு வைத்துள்ளனர். இவற்றில் கால் கடுக்க பல மணி நேரம் நின்றால்தான் தரிசனம். நிற்பதில் தவறில்லை. ஆனால், நிற்கும் இடங்கள்தான் தவறாக இருக்கின்றன. ஒட்டுமொத்த குப்பைகளும் குவிந்து கிடப்பது இந்த தரிசன க்யூ நீளும் இடங்களில்தான்.

மூக்கை உடைக்கும் முடைநாற்றம்!

ஒரு வழியாக, வெளியே இருக்கும் க்யூ, கோயிலுக்குள் நுழையும்போது, அப்பாடா தப்பிச்சோம் என்று பெருமூச்செரிந்தால்... அடுத்த நொடியே முடைநாற்றம் வந்து மூக்குகளை உடைத்து நொறுக்குகிறது. ஆம், கோயிலுக்குள் நடக்கும் அபிஷேகம் மற்றும் தேங்காய் உடைக்கும் நீர் இதெல்லாம் நாள் கணக்கில் சுத்தம் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்க, அதிலிருந்து கிளம்பும் குபீர் வாடை, குடலைப் புரட்டுகிறது. ஆத்தா, உன் தரிசனத்தை ரோட்டுல இருந்தே முடிச்சுக்கிறேன் என்று தப்பிக்கப் பார்த்தாலும் முடியாது. அந்த க்யூவில் சிக்கிய பிறகு வெளியில் வருவது என்பது முடியவே முடியாது. கருவறை வழியாக மட்டுமே வெளியேற முடியும் என்பதால் முடை நாற்றத்தை நிச்சயமாக சுவாசித்தே ஆக வேண்டும்.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். அதை நம்பி ஆலயம் ஆலயமாக சென்று திரும்பும் பக்தர்கள், 'ஆலயம் செல்லாதிருப்பதே சாலவும் நன்று' என்று திருத்தி பாடும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

இந்து முன்னணியின் அமைப்பாளர் ராமகோபாலன் பல ஆண்டுகளாகவே தரிசனக் கட்டணங்கள் மற்றும் கோயில்களில் நடக்கும் கொள்ளைகளுக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், தரிசன கட்டணங்கள் ரத்து செய்யப்படுகின்றன என்று அரசாங்கமே அறிவித்தது போல சில வாரங்களுக்கு முன்பு ஒரு செய்தியும் பரவியது. ஆனால், எந்த மாற்றமும் இல்லாமல் கட்டணக் கொள்ளை தொடர்கிறது.

பினாமி பிரசாத ஸ்டால்கள்!

இறைவனுக்கு நெய்வேத்தியமாக படைக்கப்பட்ட பிறகு, பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதுதான் கோயில்களின் பிரசாதம். ஆனால், வியாபார நோக்கில் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை பாக்கெட் போட்டு, பிரசாத ஸ்டால்கள் என்கிற பெயரில் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். இது பிரபலமாக இருக்கும் அனைத்துக் கோயில்களிலும் நடக்கிறது. இறைவனுக்குப் படைக்கப்படாத இந்த உணவுப் பொருட்கள் எப்படி பிரசாதமாக முடியும்? இப்படி பக்தர்களை ஏமாற்றும் பாவம் யாரை பீடிக்கும்?

கோயில் பிஸினஸ்... கோடி நன்மை!

ஒவ்வொரு கோயிலையும் நிர்வகிக்க நிர்வாக அதிகாரி உண்டு. கொஞ்சம் பிரபலமான கோயில்கள் என்றால், உதவி ஆணையர், இணை ஆணையர் என்று உயர் அதிகாரிகளின் நேரடி நிர்வாகமும் உண்டு. இப்படி நியமிக்கப்படும் உயரதிகாரிகள், தங்களின் பதவிக்காலத்தில் அந்தக் கோயிலின் வருமானத்தை முன்பிருந்ததைவிட எத்தனை மடங்கு உயர்த்துகிறார்களோ... அதை வைத்துதான் அவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். அதாவது, இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட விஷயங்கள். இதனாலேயே தாங்கள் பணியாற்றும் கோயில்களில் வருமானத்தை பெருக்குவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்கள் இந்த அதிகாரிகள். இப்படி வருமானத்தைப் பார்க்கும் இவர்கள், அதற்கேற்ப பக்தர்களுக்கான வசதிகளை கண்டுகொள்வதில்லை.

ரங்கநாதன், ஜம்புகேசன் மற்றும் சமயபுரத்தாள் என்று அனைத்து தெய்வங்களும் சேர்ந்துதான் இந்தக் கொடுமைகளுக்கு விடை காண வேண்டும்!

எஸ்.கதிரவன்


படங்கள்: என்.ஜி. மணிகண்டன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close